இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தியை முன்தினம் இரவு கேள்விப்பட்டேன். இதுவரை அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை.

அவரைப் பற்றிய ஒவ்வொரு நிகழ்ச்சியாக நினைவுக்கு வந்துகொண்டிருக்கிறது. நேரில் போக முடியாத உடல்நிலை; மறைந்த நண்பர் நம்மாழ் வாருக்கு அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடர்த்தியான தாடியும் மீசையும், அணிந்திருக்கும் ஆடையும் சந்நியாசி தோற்றமளிக்கும். தன்னலம் கருதாதவர், அழிந்து வரும் விவசாயத்தையும், கோடிக் கணக்கான விவசாயிகளையும் நிரந்தரமாகக் காப்பாற்றி நீடித்த வாழ்வு வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத் தோடு மக்களைத் திரட்டிப் போராடியவர்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதிகள் காவிரி நீர் கிடைக்காமல் வறட்சியாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் மீத்தேன் எரிவாயுவை எடுப்பதன் மூலமாக நிலத்தடி நீரும் வறண்டு பாலை வனமாகிவிடும் என்பதால் மீத்தேன் எரிவாயு எடுக்கும் முயற்சியைக் கைவிட வலியுறுத்துவதற்காக மக்களைத் திரட்டும் தீவிரப் பணியில் ஈடுபட்டு வந்தார்.

அது சம்பந்தமான களப் பணிகளுக்காக மக்களைத் திரட்டும் பணியில் பட்டுக்கோட்டை, அத்திவெட்டியில் தோழர் லெனின் ராஜப்பா வீட்டில் தங்கி இருந்தபோது இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தியே நம்மாழ் வாரின் அர்ப்பணிப்பான வாழ்க்கைக்கு எடுத்துக் காட்டாக உள்ளது. எல்லோருக்கும் பாடமாகவும் அமைந்துவிட்டது.

1938இல் தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள இளங்காடு கிராமத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். உடன் பிறந்தோர் நன்கு படித்தவர்களாக இருந்தனர். நம்மாழ்வாரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.ஸி. வேளாண்மைப் பட்டப்படிப்பு படித்தவர். பின்னால் படிப்பை முடித்து விட்டு, தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டியிலுள்ள மண்டல புஞ்சைப்பயிர் ஆய்வு நிறுவனத்தில் 6 ஆண்டுகள் பணியாற்றினார். ஆய்வுப் பணியில் வேளாண் களப் பணிக்கு வாய்ப்பில்லை என்பதனால் பணியில் ஆர்வ மில்லாமல் இருந்தார்.

இதேநேரத்தில்தான் நாங்குநேரி அருகிலுள்ள களக்காட்டில் பெல்ஜியத்தில் உலக விருது பெற்ற பாதிரியார் ஒருவர் ‘அமைதித் தீவு’ என ஒன்றை ஏற்படுத்தி கிராமப்புற ஏழை விவசாயிகளுக்குச் சாகுபடி செலவுகளுக்கு வட்டியில்லாக் கடன் கொடுத்து உதவி செய்து வந்தார். அந்த நிறுவனத்திலிருந்து வேளாண்மைப் பயிற்சி பெற்ற, படித்துப் பட்டம் பெற்ற ஒருவர் தேவை என்று பத்திரிகையில் வந்த செய்தியைப் பார்த்து அந்த நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்தார் நம்மாழ்வார்.

நேர்காணலின்போது அதிக ஊதியம் பெற்றுள்ள அரசுப் பணியிலிருந்து அதைவிட குறைந்த சம்பளம் தான் கிடைத்திடும் பணிக்கு வந்திருப்பதைப் பற்றிக் கேள்வி கேட்கப்பட்டது. அலுவலகப் பணியில் ஆய்வுக்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. இங்குக் களப்பணி வாய்ப்பு இருக்கிறது எனச் சொல்லிப் பணியில் சேர்ந்தார்.

அங்குக் கிராமப்புற சிறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றும்போது தோழர்கள் நடராஜன், முத்துமாணிக்கம், ஆசிரியர் சம்பந்தன் ஆகியோரோடு நெருக்கமாகப் பழகி வந்தார்.

அங்குள்ள வடகரை, களக் காடு கிராமங்களிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் உதவி செய்து வந்தார்.

1967-இல் நெல்லையில் பேராசிரியர் வானமாமலை அவர்களது முயற்சியில் ஆய்வுக்குழு அமைக்கப் பட்டது. அக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு, கிராமப்புற சமூக வாழ்க்கை பற்றி வேளாண்மை பற்றிய அரிய கருத்துக்களைச் சொல்லுவார். ஆய்வு அரங்கத்தின் வாதத்திலும் கலந்துகொள்வார். அப்போதுதான் எனக்கும் அவரோடு பரிச்சயம் ஏற்பட்டது. களக்காடு வட்டாரத்திலும் ஆய்வரங்கம் நடத்தி வந்தார். தான் பணியாற்றிய அலுவலகத்தைச் சுற்றி இலவம் பஞ்சு ஒதிய மரங்களை வளர்த்துச் சோலையாக மாற்றினார். நிர்வாகமே பாராட்டியது.

அதற்குப் பின்னால் இயற்கை வேளாண்மைக்கான பண்ணைகள் வைத்துப் பல இடங்களிலும் முன்மாதிரி பண்ணைகளைத் தொடங்கிப் பலருக்குப் பயிற்சி கொடுத்து வந்தார்.

உலகமயமாக்கல் கொள்கையால் விவசாயம் பாதிக்கப்படுவதை எதிர்த்தும் ரசாயன உரங்களைப் போட்டு விளை நிலங்களைப் பாழ்படுத்துவதை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் இயக்கங்களை நடத்தினார்.

அவ்வாறு அவரது வாழ்நாளின் பெரும் பகுதியை அவர் இயற்கை வேளாண்மை இயக்கத்தைக் கொண்டு செல்லும் அரும்பணிகளிலும் அதற்கான களப்பணி களிலும் பிரச்சார இயக்கத்திலுமாகச் செலவழித் திட்டார்.

அவ்வாறான பணிகளிடையே ஒருமுறை புதுக் கோட்டைப் பகுதியிலுள்ள ஒரு முன்மாதிரி வேளாண் பண்ணை அமைத்துச் செயல்படுத்திடும் பணியிலிருந்த போது அவரை அவ்விடத்தில் சந்தித்துப் பேசினேன். அந்த சந்தர்ப்பத்தில் அவர் கட்சி நிதியாக ரூ.5000-த்தை என்னிடம் கொடுத்துப் பழைய நினைவுகளையும் தெரிவித்துக்கொண்டார்.

அதுபோல 2013-ஆம் ஆண்டின் துவக்கத்தில் திருக்காட்டுப் பள்ளியில் கொள்ளிடம் காவிரி நதி நீர்ப் பகுதிகளில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையை எதிர்த்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நானும் அவரும் கலந்துகொண்டு பேசுவதாக இருந்தது. அந்தக் கூட்டத்திற்கு ஏகப்பட்ட இடையூறுகளை ஏற்படுத்தி அதனை நடத்த விடாமல் மணல் கொள்ளையர்களின் அடியாட்களும் அவற்றோடு சம்பந்தப்பட்டவர்களும் பெருமுயற்சிகளை மேற்கொண்டனர்.

அவற்றையெல்லாம் மீறி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினரும் அப்பகுதிப் பொது மக்களும் அந்தப் பொதுக் கூட்டத்தை நடத்தினர். அதில் நானும் நம்மாழ் வாரும் கலந்துகொண்டு பேசினோம். மணல் கொள்ளை நடக்கும் இடத்தைச் சென்று பார்த்துவிட்டு வந்தோம்.

3 மீட்டர் ஆழத்துக்குத்தான் மணல் தோண்டப் பட வேண்டுமென்ற வரைமுறைகளையெல்லாம் மீறி பல மீட்டர் ஆழத்துக்குக் குழி தோண்டப்பட்டு மணல் எடுக்கப்பட்டிருந்தது.

இதனைக் கண்டு பொறுக்காமல் நம்மாழ்வார் அந்தக் குழிக்குள்ளே இறங்கிவிட்டார். மணல் சரிந்து குழி மூடிவிடும் அபாயத்தை உணராமல் மிகத் துணிச்சலோடு அவர் அக்குழியில் இறங்கித் தனது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியது எங்களுக்கு எல்லாம் வியப்பாக இருந்தது. பின்னர் அனைவரும் அவரை மெதுவாகக் குழியிலிருந்து மேலே மீட்டு எடுத்தோம்.

இத்தகைய பசுமையான நினைவுகளெல்லாம் அவரது மறைவுச் செய்தியைக் கேட்டவுடன் மனதில் நிழலாடுகிறது.

‘தமிழ் மண்ணே வணக்கம்’ என்ற நூலும் இயற்கை வேளாண்மை பற்றி எழுதிய கட்டுரைகளும் அமரர் நம் மாழ்வாரை நினைவுபடுத்துகின்றன.

அவரது இறுதிச் சடங்குகள் கரூர் மாவட்டத்தில் அவரால் அமைக்கப்பட்ட விவசாயப் பண்ணை நிலத்தில் நடைபெறுகிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் அஞ்சலி செலுத்திக் கொள்கிறது.

-நன்றி ஜனசக்தி

Pin It