மனித குலத்தின் புராதன தொழில் வேளாண்மை. உலகில் வேறு எந்த தொழில் இல்லாவிட்டாலும் மனித இனம் உயிர்பிழைத்து வாழ்ந்து விடும். ஆனால் வேளாண்மை செய்யாமல் மனித இனம் உயிர் வாழ முடியாது. இத்தகைய முக்கியத்துவமுடைய வேளாண்குடி மக்கள் இந்தியாவில் எப்படி நடத்தப்படுகின்றனர்? அரசு புள்ளி விவரங்களின்படியே லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏன் ஏற்படுகிறது? விவசாயிகளின் இந்த அவல நிலைக்கு காரணம் என்ன? இந்த பிரசினைக்கான காரணங்கள் – தீர்வுகள் என்ன? விவசாயிகளின் பிரச்சினை விவசாயிகளை மட்டும்தான் பாதிக்குமா? என பல கேள்விகள் தோன்றுகின்றன.

இந்த கேள்விகளுக்கான பதில்களை தேடும் முயற்சியாக இல்லஸ்டிரேடட் வீக்லி இதழின் 1986 மார்ச் 23 இதழில் பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிளாட் ஆல்வாரிஸ் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவத்தை பிரசுரம் செய்கிறோம். பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் அமைந்துள்ள பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (International Rice Research Institute-IRRI) வளர்ச்சிக்காக இந்தியாவின் கட்டாக் நகரிலுள்ள மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் மூடப்பட்டதாக ஆல்வாரிஸ் குற்றம் சாட்டுகிறார். இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் சேகரித்து வைத்திருந்த நெல் வகைகளை முறையற்று கவர்வதற்காக பிரபல நெல் அறிவியலாளரான டாக்டர் ரிச்சாரியா மிகவும் கேவலமான முறையில் வெளியேற்றப்பட்டதும் சுட்டிக்காட்டப்படுகிறது. (டாக்டர் ரிச்சாரியாவின் முழுமையான பேட்டியை பூவுலகு [www.poovulagu.org] இணையதளத்தில் படிக்கலாம்) இன்றைய நிலையிலும் டாக்டர் ரிச்சாரியாவைப் போன்று மனசாட்சியுடனும், தேச பக்தியுடனும் வாழும் பல ஆராய்ச்சியாளர்கள் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பல்வேறு இன்னல்களை அனுபவித்தே வாழ்ந்து வருகின்றனர்.

தனிப்பட்ட யாரையும் விமர்சனம் செய்வது நமது நோக்கமல்ல. அதேநேரத்தில் வரலாற்றில் நடந்த தவறுகளை முழுமையாக புரிந்து கொண்டால்தான் அந்த தவறுகளை நேர் செய்வதற்கும், அந்த தவறுகள் மீண்டும் நடவாமல் தடுக்கவும் முடியும் என்பதால் இந்த பதிவு அவசியமாகிறது. இது ஒரு விவாதக்களம்தான். தரமான எதிர்க்கருத்துகள் வரவேற்கப் படுகின்றன.

மாபெரும் விதைக் கொள்ளை!

தமிழில்: கிழார்

டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் கடந்த 1982ம் ஆண்டில் மத்திய அமைச்சரவைக்கான அறிவியல் ஆலோசனைக்குழு தலைவர் பதவியிலிருந்தும், திட்டக்கமிஷன் துணைத்தலைவர் பதவியிலிருந்தும் – அவர் அதற்கு முன்னதாக வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளராகவும் இருந்தவர் – விலகி, பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகருக்கு அருகே உள்ள லாஸ் பேனோஸ் பகுதியில் இருக்கும் பன்னாட்டு அரிசி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு தாவினார். இங்கு “தாவல்” என்ற வார்த்தை நோக்கத்துடனேயே பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் உணவு என்ற மிக முக்கியமான துறையில் அரசின் அறிவியல் ரகசியங்களை அறிந்திருக்கக்கூடிய மிக முக்கியமான அறிவியலாளரை, திடீரென ஒரு நாளில் அப்பதவியிலிருந்தும், நாட்டிலிருந்தும் வெளியேறி அனைத்துலக அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் தலைவராக பதவி ஏற்பதற்கு, இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் அனுமதிக்காது. பன்னாட்டு அரிசி ஆராய்ச்சி நிறுவனம், அமெரிக்க முதலாளித்துவம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்புடைய இரண்டு அறக்கட்டளைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரிசி உணவை அவ்வளவாக உட்கொள்ளாத அமெரிக்கர்கள், ஆசியாவின் நெல் ஆராய்ச்சியைத் தங்களது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவர ஏதுவாக 1960ம் ஆண்டு பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்பட்டது.

ஆசியப்பகுதியில் நெல் விளைச்சலை கட்டுப்படுத்தும் ஒருவர், இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து விவகாரங்களையும் கட்டுப்படுத்தமுடியும் என்று ஒரு பிரபல பயிர் பெருக்க வல்லுனர் கூறியுள்ளார். ஆசியப் பிராந்தியத்தில் முதலாளித்துவம், சோஷலிஸம் அல்லது வேறு எந்த அரசியல் கோட்பாட்டையும்விட உணவே பிரதானமானது, அதிலும் ஆசியாவில் உணவு என்பது அரிசி உணவே! – என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சரான ஏர்ல் பட்ஸ் கூறிய புகழ்பெற்ற வாசகம்: “உணவை ஆயுதமாக பயன்படுத்த முடியும் என்றால், நாங்கள் அதை மகிழ்ச்சியுடன் பயன்படுத்துவோம்”.

இருபதாம் நூற்றாண்டின் எல்லையில் நிற்கும் நாம், நமது வாழ்க்கையை முடிவு செய்யும் முக்கிய உணவுப் பொருட்களான அரிசி மற்றும் கோதுமை ஆகியவை குறித்த ஆய்வுகள் அனைத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் இயக்கத்திலும், கட்டுப்பாட்டிலும் உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

பன்னாட்டு அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக எம். எஸ். சுவாமிநாதன் பதவி ஏற்றது பலவிதங்களிலும் அவருக்கு பின்னடைவாகவும், பதவி இறக்கமாகவுமே இருந்தது. இந்தியாவின் பல்வேறு அறிவியல் துறைகளில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான அறிவியலாளர்களுக்கு தலைவராக இருந்த அவர், இந்தோனேஷியாவில் 200க்கும் குறைவான அறிவியலாளர்களுக்கு மட்டுமே தலைமை தாங்கினார். இதற்கு பலனாக அவருக்கு கிடைத்தது: பணம்! வருமான வரி கட்டத்தேவையில்லாத பணம் மட்டுமே!!

அமெரிக்க இயக்குனர்களால் நிர்வகிக்கப்பட்ட இந்த பன்னாட்டு அரிசி ஆராய்ச்சி நிறுவனம், பூச்சித்தாக்குதல் காரணமாக உயர் விளைச்சல் தரும் பயிர்கள் விவகாரத்தில் பெரும் பின்னடைவை சந்தித்துக் கொண்டிருந்தது. எனவே உயர் விளைச்சல் நெல் ரகங்களுக்கு பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் எதிர்ப்புத்திறனை வழங்கக்கூடிய மரபணுக்களைக் கொண்ட மரபணு வங்கியை விரிவாக்குவது பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு உடனடித் தேவையாக இருந்தது. இந்தியாவில் ஏராளமான மரபணுக்களைக் கொண்ட மரபணு வங்கி இருந்தது. இந்த சூழ்நிலையில் பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக எம்.எஸ். சுவாமிநாதன் நியமனம் செய்யப்பட்டது மிகுந்து முக்கியத்துவம் வாய்ந்தது.

பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம், தலைசிறந்த அறிவியல் ஆய்வு மையம் அல்ல! இது தனியாரால் கட்டுப்படுத்தப்படும் சாதாரண ஆய்வு மையம்தான். இருந்தபோதிலும் சுவாமிநாதனை போன்ற ஒருவர் இதன் தலைவராவதை ஏற்பது கடினமே. இந்த பதவி வகிப்பவரின் அறிவியல் நிபுணத்துவத்தைவிட, காரியங்களை சாதிக்கும் செயல்பாட்டுத்திறனே மிகவும் சிறப்பான ஒன்றாக கருதப்படும். சிறந்த அறிவியல் பின்னணி கொண்ட யாரும் மாக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட், மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட், டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் போன்ற எந்தவொரு நிறுவனத்திலும் இயக்குனராக நியமிக்கப்பட்டதில்லை. இந்நிலையில் அனைத்துலக அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக எவ்வாறு எம்.எஸ்.சுவாமிநாதன் பணியமர்த்தப்பட்டார் என்று நான் அறிவார்ந்த பிலிப்பைன்ஸ் மக்களை கேட்கிறேன். இக்கேள்வியின் உண்மையான பதில் மிகவும் நகைச்சுவையானதாகும்.

பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு மூன்று பேர் விண்ணப்பித்தனர். முதலாமவர், ராக்ஃபெல்லர் அறக்கட்டளையின் துணைத்தலைவர். இவருக்கு இப்பதவி வழங்கப்பட்டால் மனைவியுடன், துணைவியையும் அழைத்து வருவதாக தெரிவித்தார். இரண்டாமவர் மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவர் பெயருக்கு பின்னே போட்டுக்கொண்ட பட்டப்படிப்பை படிக்காதவர் என்று தேர்வின்போது தெரியவந்தது. இந்த வரிசையில், என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா நிறுவனம் பதிப்பித்த “அறிவியல் மற்றும் எதிர்காலத்திற்கான 1979ம் ஆண்டு புத்தக”த்தில் இருபதாம் நூற்றாண்டின் பிரபல அறிவியல் மோசடியாளர்கள் என்று பால் காம்மரெர் மற்றும் சிரில் பர்ட் ஆகியோருடன் இணைந்து குறிப்பிடப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

--------------------------

இந்தியா ஒரு நெற் பயிர் தேசம். பலவகையான உயிர்களைக் கொண்ட கலவையான சூழல் அமைப்பில் நெல் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்தியாவின் பாரம்பரியத்திலும், மதம் சார்ந்த விழாக்களிலும், சடங்குகளிலும் மிக நீண்ட காலமாக நெல் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. நெல் பயிரின் மீதான இந்த முனைப்பு இந்திய உழவர்களிடம் பல ரக நெல் பயிர்களையும், பல வகையான தொழில் நுட்பங்களையும் உருவாக்கி இருந்தது. சில ஆதிவாசி மக்களின் நெல் குறித்த அறிவு, பன்னாட்டு தொழில்நுட்பங்களையும்விட சிறந்தோங்கி இருந்தது.

ஒரிஸா மாநிலம் பூரி ஜகந்நாதர் ஆலயத்தில், அவ்வபோது அறுவடை செய்யப்பட்ட பல வகையான அரிசி வகைகள், தினந்தோறும் படைக்கப்பட்டது. பலவகையான அரிசி வகைகளை பானைகளில் இட்டு, அந்த பானைகளை ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கி கீழே உள்ள பானையின் அடியில் தீமூட்டுவதன் மூலமாக அனைத்து பானையில் உள்ள அரிசி வகைகளையும் ஒரே நேரத்தில் சமைத்து கடவுளுக்கு படையல் போட்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

சத்திஸ்கர் பகுதியில் நேரடியாக அரைத்து ரொட்டி சுடுவதற்கு ஏற்ற போரா ரக நெல் விளைந்துள்ளது. குவாலியரின் கலி-மூச், மோடி-சூர், பாலின் மணத்தை கொடுக்கும் (பால்)கோவா போன்ற பல நெல் ரகங்கள் அப்பகுதியில் விளைந்துள்ளது. உலகின் நீளமான நெல் ரகமான டோக்ரா-டோக்ரி, பருமனான பீம்சென், பறவையின் சிறகைப்போன்ற உடன் பகேரு போன்ற நெல் ரகங்கள் இருந்துள்ளன.

நாட்டின் பல்வேறு சூழல்களுக்கு ஏற்றவகையில் மனிதர்களின் தேவைகளுக்கு ஏற்ப, விவசாயிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் (1,20,000) நெல் ரகங்கள் இந்தியாவில் இருந்துள்ளன. இந்த ரகங்கள் அனைத்தும் பன்மயத்திற்காக இயற்கையால் வழங்கப்பட்டு, மண் சார்ந்த ஆனால் முறை சாராத அறிவியலால் உருவாக்கப் பட்டதாகும்.

கட்டாக்கில் இருந்த மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம், அது உருவாக்கப்பட்ட 1950ம் ஆண்டிலிருந்தே நெல் சாகுபடி குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தது. 1959ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் இயக்குநராக பதவியேற்ற டாக்டர் ஆர்.ஹெச். ரிச்சாரியா, மேலும் பல திறமை வாய்ந்த அறிவியலாளர்களின் உழைப்பு உடனடியாகவோ, தாமதமாகவோ அரிசி உற்பத்தியை பெருக்குவதற்கான வழிமுறைகளாக மாற்றம் பெற்றன. உதாரணமாக, 1963ம் ஆண்டில் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய சி. கங்காதரன் என்ற அறிவியலாளர், கண்டறிந்த குட்டை ரக நெல் பயிர் அதிக விளைச்சலைக் கொடுத்தது. தைவான் மற்றும் ஜப்பான் நாட்டின் நெற்பயிர்களிலும் மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு சோதனைகளை நடத்தி வந்தது. இந்த ஆய்வுகள் மிதமான வேகத்திலேயே நடைபெற்றன. ஏனெனில் நிலையான, நோய் மற்றும் பூச்சித்தாக்குதலை எதிர்த்து நின்று சமாளிக்கக்கூடிய வகைகளை தேரந்தெடுக்க அந்த கால அவகாசம் தேவைப்பட்டது.

மூன்று கட்டங்களில் நடைபெற்ற இந்திய நெல் ஆராய்ச்சியில் அறிவியலாளர் கங்காதரன் வரலாற்று சாதனை படைத்தார் என்றே சொல்லலாம். முதல் கட்டமான 1912 முதல் 1950 வரை, தனி வரிசைத் தேர்வு(Pure Line Selection)களில் ஆய்வு நடத்தபட்டு 445 மேம்பட்ட நெல் ரகங்கள் அடையாளம் காணப்பட்டன.

ஆனால் நமது நோக்கத்திற்கு ஆர்வமூட்டக்கூடியது என்னவென்றால் உள்ளூர் அறிவியலுக்கும், உலக அறிவியலுக்கும் இடையே உருவான வேற்றுமைகளை இனம் கண்டு பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப ஆரம்ப கட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்வதுதான். விரைவில் விளையும் தன்மை, ஆழமான நீர்நிலை மற்றும் வெள்ளம் ஆகியவற்றை தாங்கி வளரும் தன்மை, வறட்சியை தாக்குப்பிடித்து வளரும் தன்மை, தானியம் உதிராத தன்மை, சாய்தலுக்கு எதிர்ப்புத்தன்மை, நோய் எதிர்ப்புத் தன்மை மற்றும் அதிக உரமிடுவதை ஏற்கும் தன்மை ஆகியவை உள்ளிட்ட ஒன்பது காரணிகளை கங்காதரன் பட்டியலிட்டுள்ளார். இயற்கைத் தேர்வின் மூலம் பலநூறு ஆண்டுகளாக தேர்வு செய்யப்பட்ட தனித்த வரிசைத் தேர்வு வகைகளின் மரபணுக்கள் சூழலும் வினையாற்றுவதில் ஒவ்வாமை எதுவும் காணப்படாததால் அவற்றில் பூச்சித்தாக்குதல் இருக்காது.

இரண்டாவது காலகட்டம் குறிப்பிட்டு சொல்லும்படியாக இல்லை. இந்த காலகட்டத்தில் வெற்றி வாய்ப்பு இல்லாத கலப்பான ஜப்பானிகா மற்றும் இண்டிகா கலப்பு வகை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் நோக்கம் குறித்து கங்காதரன் விளக்குகையில், “அதிக விளைச்சல் அளிக்கும் திறன் மற்றும் ஊட்டச்சத்துகளை ஏற்கும் திறன் போன்ற பண்புகள் ஜப்பானிகா வகையிலிருந்து உள்ளூர் சூழலில் பூச்சி மற்றும் நோய்களுக்கு இலக்காகி வளரும் இண்டிகா வகைகளுக்கு கடத்த முடியும்” என்று குறிப்பிட்டார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஜப்பான் வேதியியல் உரங்களை பயன்படுத்தி வந்ததோடு ஜப்பானிகா வகைகள் ஜப்பானிய சூழலில் நன்கு வளர்ச்சியடைந்த அதே வேளையில் இண்டிகா வகைகள் அதிக வளம் நிரம்பிய பகுதிகளில் வளர்க்கப்படவில்லை.

இந்த ஆராய்ச்சியிலிருந்து நான்கு வெற்றிகளே பட்டியலிடப்பட்டன. ஜப்பானிய வகைகள் சூரிய ஒளி வெப்பநிலை ஆகியவற்றின் பாதிப்புகளுக்கு ஆளாவதோடு இவற்றின் விதைகள் ஜப்பானின் குளிர் பகுதிகளில் பெறப்படுவதால் சிக்கல் எழுகிறது. இந்த வகைகளை வெப்ப மண்டல பகுதிகளில் பயிரிட்டபோது வேறுபட்ட முடிவுகளை தந்ததோடல்லாமல் எதிர்மறையான விளைவுகளையே அளித்தன. பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து ஓரளவு குட்டையான வகைகள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு திடீரென்று இந்த வகை ஆராய்ச்சி முடிவுக்கு வந்தது. பிறகு மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் ஜப்பானின் மிதகுளிர் பகுதிகளில் இருந்து விதைகளை இறக்குமதி செய்தது. இந்த முயற்சிகள் வெற்றியை அளித்தபோதும் நெல் ஆராய்ச்சித் திட்டங்களின் மீதான பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆதிக்கத்தால் மேற்கண்ட முயற்சிகள் (ஜப்பானிகா வகைகளைப் பயன்படுத்தி இண்டிகா வகைகளை மேம்படுத்துதல்) ஆய்விலிருந்தும், அறிவியலில் இருந்தும் அப்புறப்படுத்தப்பட்டன.

இதுவே நெல் ஆராய்ச்சியில் பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தால் தொடங்கிவைக்கப்பட்ட மூன்றாம் கட்டத்துக்கு இட்டுச்சென்றது. இதுவே இந்த ஆய்வின் பொருளாகும்.

(தொடரும்)

 

Pin It