புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் மேனாள் பேராசிரியர் காலடி சங்கராச்சாரியா சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், பண்பாடும்-தேசியமும், காலனியம் - பண்பாடு - பாரம்பரிய நாட்கள் முதலான சிறந்த நூற்களின் ஆசிரியர், கேரள உயர் கல்வித் துறையின் மேனாள் தலைவர், பல அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் வருகைதரு பேராசிரியர், எல்லா வற்றுக்கும் மேலாக இந்தியாவின் தலைசிறந்த மார்க்ஸிய வரலாற்று  அறிஞர்களுள் ஒருவராகத் திகழும் பேராசிரியர்- தோழர் கே.என்.பனிக்கரை திருவனந்தபுரத்திலுள்ள அவரது வீட்டில் சந்தித்து உரையாடியது.

நேர்காணல்: பா.ஆனந்தகுமார்

 

தங்களுடைய குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்களேன்.

நான் குருவாயூர் அருகேயுள்ள தைக்காடு என்னும் சிற்றூரில் பிறந்தேன் (1936). எனது பெற்றோர் கே.கே.நாயர்-இச்சுட்டி அம்மா. கண்டியூர் எனது குடும்பப்பெயர் (கண்டியூர் நாராயண பனிக்கர்). எனது தந்தையார் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தார். நான் சாவக்காடு போற்டு உயர்நிலைப்பள்ளியில் பயின்றேன். பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தேன். இராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் முதுகலை (1958), முனைவர் பட்டம் (1962) பெற்றேன்.

தாங்கள் இடதுசாரி இயக்கத்தில் ஈடுபட்டது எவ்வாறு?

kn_panicker_341எனது தூரத்து உறவினர் கே.பி.மாதவமேனேன் அக்காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் போராளியாக இருந்தார். தோழர்கள் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், ஏ.கே.கோபாலன் ஆகியோருடைய சமகாலத்தவர். தலைமறைவுக் காலகட்டத்தில் காவல்துறையின் கொடும் அடக்குமுறைக்கு ஆளானவர். காவலர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு, குண்டாந்தடி அடிபட்டு, உடல் சின்னாப்பின்னமாக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். இவரது ஆளுமையும் ஆலோசனைகளுமே என்னை இடதுசாரி இயக்கத்தின்பால் இழுத்துச் சென்றன.

கல்லூரியில் உங்களைக் கவர்ந்த ஆசிரயர்கள் பற்றி கூறுங்களேன்.

பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் நான் படிக்கின்ற காலக் கட்டத்தில் பணியாற்றிய வேதியியல் பேராசிரியர் எம்.கே.குஞ்ஞிராமன்; ஆங்கிலப் பேராசிரியர்கள் பி.கே.சங்கரநாராயணன், கே.ஸ்ரீதரன்நாயர் ஆகியோர் என்னை மிகவும் பாதித்தனர். பேராசிரியர். சங்கர நாராயணன் எனக்குப் படிப்பதற்கு ஏராளமான ஆங்கிலப் புத்தகங்களைக் கொடுப்பார். அவற்றுள் நேரு எழுதிய  ‘Discovery of India’, ‘Letters from Father to his Daughter’ ஆகிய நூற்கள் என்னை மிகவும் ஈர்த்தன. என்னை ஒரு வகையில் வரலாற்றுத்துறையின்பால் திருப்பியவை அப்புத்தகங்கள்தான்.

உங்களுடைய பெற்றோர்கள் உங்களை என்னவாக்க வேண்டுமென்று விரும்பினார்கள்?

நான் இளம் அறிவியல் வேதியியல் படித்தேன். என்னுடைய பெற்றோர் என்னை மருத்துவராக்க விரும்பினார்கள். நானும் அதற்கேற்ப மருத்துவ நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்று நேர்முகத் தேர்விற்குச் சென்றேன். அப்பொழுது நேர்முகத்தேர்வில் மருத்துவத் துறை இணைச்செயலராக இருந்தவர் என்னிடம், எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு ஐந்து இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், கேரள அரசில் ஐந்திற்கு மேற்பட்ட அமைச்சர்கள் இருக்கின்றனர் என்று பதில் சொன்னார். அதற்குப்பிறகு நான் விரும்பிய வரலாற்றுத் துறையைத் தேர்ந்தெடுத்து இராஜஸ்தான் பல்கலைக்கழகம் சென்றேன்.

கல்லூரி வாழ்வில் உங்களுக்கு ஏற்பட்ட அரசியல் அனுபவத்தைச் சொல்லுங்கள்.

நான் பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் படிக்கின்ற பொழுது மாணவர் பெருமன்றத்தில் உறுப்பினராக இருந்தேன். அப்போது நாங்கள் மிகக் குறைவான உறுப்பினர்களே இருந்தோம். அப்போது கட்சி அடிப்படையில்தான், மாணவர்ப் பேரவைத் தேர்தலில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். ஆயினும் கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் நான் வெற்றிபெற்றுத் தலைவரானேன். நாங்கள் முக்கியமான மாணவர் பிரச்சினைகளைக் கையில் எடுத்துப் போராடினோம்.

அக்காலகட்டத்தில் கோவாவில் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்தது. 24 தொண்டர்கள் கோவாவிற்கு நுழைய தடைசெய்யப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டனர். இதற்கு எதிர்வினையாக ஏதாவது செய்யவேண்டு மென்று நாங்கள் தீர்மானித்தோம். அன்று விடுமுறை நாள். நாங்கள் விடுதிக்காப்பாளரைப் போய்ப் பார்த்து இது பற்றிக் கேட்டோம். அவர், அதற்கு நீங்கள் ஏதாவது செய்யாமலிருந்தால்தான் நான் வெட்கப் படுவேன் என்றார்.

நாங்கள் கல்லூரியிலிருந்து ஊர்வலமாகக் கிளம்பினோம். மாலையில் ஓர் இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தினோம். போராட்டம் நூறு சதவீதம் வெற்றிப்பெற்றது. மறுநாள் காலையில் கல்லூரி முதல்வர் தன்னைச் சந்திக்கவரும்படி ஒரு சீட்டுக் கொடுத்து அனுப்பினார். நான் பயந்து கொண்டே முதல்வர் அறைக்குள் நுழைந்தேன். அவர் என் கையைப் பிடித்துக் குலுக்கி வாழ்த்துக்கள் என்று சொன்னார். அப்பொழுது முதல்வராக இருந்தவர் பி.பி.கொச்சுன்னி பனிக்கர் ஆவார். இவர் கேரள சாஸ்திர சாஹித்ய பரிக்ஷத்தின் தலைவரான பாஸ்கர பனிக்கரின் சகோதரராவார்.

கல்லூரிக் காலத்தில் மலையாளப் படைப்பிலக்கியச் சூழல் எவ்வாறு இருந்தது?

நான் படிக்கிற காலகட்டத்தில் இடதுசாரி இலக்கியப் போக்கு செல்வாக்குப் பெற்ற நிலையிலிருந்தது. முற் போக்கு இலக்கிய இயக்கமான ஜீவித சாஹித்ய பிரஸ் தானத்தில் (வாழ்க்கை இலக்கியப் போக்கு) கேசவதேவ், தகழி, பொன்குன்னம் வர்கி ஆகியோர் தீவிரமாக இயங்கி வந்தனர். பின்னர் அவர்கள், கருத்துவேறுபாடு காரணமாக இவ்வியக்கத்திலிருந்துப் பிரிந்துசென்றனர். நானும் படிக்கின்ற காலகட்டத்தில் சிறுகதைகள் எழுதினேன்.

‘ஜெய கேரளம்’ வார இதழில் எனது முதல் கதை வெளிவந்தது. ‘நீளுந்ந தீநாம்புகள்’ (நீளுகின்ற தீச்சுடர்கள்) என்னும் தலைப்பில் எனது முதல் சிறுகதைத் தொகுப்பை நானே சொந்தமாக வெளியிட்டேன். என்னைப் போலவே அக்காலத்தில் எழுதிய எம்.டி.வாசு தேவன்நாயர், புதூர் உன்னிக்கிருஷ்ணன், டாடாபுரம் சுகுமாரன் ஆகியோர் தமது முதல் சிறுகதைத் தொகுப்பு களைத் தங்கள் சொந்த வெளியீடுகளாகவே கொண்டு வந்தனர். எனது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ஸ்வப்னங்கள் யாதார்த்தயங்கள், 1967-இல் மங்களோ தயம் வெளியீடாக வந்தது.

தங்களுடைய பி.எச்.டி., ஆய்வு எதைப் பற்றியது?

இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கம் என்பது எனது ஆய்வுப் பொருளாக இருந்தது. காலனிய வரலாறு, நவீன இந்திய வரலாறு என்பன எனது சிறப்பான ஆய்வுத் துறைகள் ஆகும். எனது முனைவர் பட்ட ஆய்வேடு ஆங்கிலத்தில் நூலாகவும் வெளிவந்திருக்கிறது.

பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களைத் தாங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பிரிட்டிஷ் வரலாற்றறிஞர்களை மூன்று வகையினராகப் பிரித்துப் பார்க்கலாம். 1)தூய ஏகாதிபத்தியவாதிகள்; 2)தாராளவாதப் பிரிவினர்; 3)மார்க்ஸியவாதிகள். தாராளவாத வரலாற்றாசிரியர்கள் இந்திய வரலாற்றை எழுதுவதில் முக்கியபங்கு வகிக்கின்றனர். அதே போன்று, இ.பி.தாம்ஸன் முதலான மார்க்ஸிய அறிஞர்களிடமிருந்து நாம் ஏராளமான விஷயங்களைப் பெற்றுக் கொள்கின்றோம்.

இந்தியாவைச் சேர்ந்த மார்க்ஸிய வரலாற்றறிஞர்களின் சாதனைகளாக நாம் இவற்றைக் கூறலாமா?

மார்ஸிய அறிஞர்கள், வரலாற்றை எழுதுவதில் கருத்தியல் ரீதியான மனமாற்றத்தை ஏற்படுத்தினர். மறைக்கப்பட்ட வரலாறுகளை எழுதினர். புதிய ஆய்வுக்களங்களைத் தேடிக் கண்டடைந்தனர். முறையியலைக் கூர்மைப்படுத்தினர்.

மார்க்ஸியம், பொருளாதார அடிப்படைவாதம் என்று சொல்லப்படுகிறதே!

மார்க்ஸியம் அப்படி இருந்ததில்லை; இருக்கவும் முடியாது. வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தை நாம் ஆய்வு அணுகுமுறையாக ஏற்றுக்கொள்கிறோம். மார்க்ஸியம் பற்றிய கொள்கை ரீதியான புரிதல் குறைவாக இருப்பவர்களே இப்படிப்பட்ட கருத்தைத் தெரிவிக்கிறார்கள்.

பண்பாடு மேலதிகாரம் வாய்ந்தது; பண்பாட்டில் அரசியல் ஊடுருவ வேண்டும் எனும் கருத்தை அண்மைக்காலங்களில் தாங்கள் வலியுறுத்திப் பேசுவதன் அடிப்படை யாது?

பண்பாடு என்பது தனித்த நிகழ்வில்லை; அது, நமது சமூக வாழ்வின் ஒரு பகுதி. அரசியலுக்கு ஒரு பரிமாணம் தான் இருக்கிறது. ஆனால் பண்பாடு பலபரிமாணங் களைக் கொண்டது. அண்மையில் கேரளத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தலித் ஒருவரை அவ்வூர் உயர்சாதி மக்கள் குளத்தில் இறங்க அனுமதிக்கவில்லை. இது அரசின் நிர்வாகத்துறை சார்ந்த அல்லது வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல.

இப்பிரச்சினையை சமூகப் பரிமாணத்திலிருந்து அணுகவேண்டும். இந்தியாவில் 70% பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர். 99% குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் உள்ளனர். அரசியல் இயக்கங்கள் தெருவிற்கு இறங்கிச் செல்ல வேண்டும். நிலவுடைமை ஆட்சிக்காலத்தில் பண்பாடு, நிலவுடைமை ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பண்பாடு, அரசியல் அணிதிரட்டலுக்காகத் தொழிற்பட வேண்டும். ஆனால் அணிதிரட்டப் பட்டதின் நோக்கம் பொருத்தமாக இருக்கவேண்டும்.

அடையாள அரசியல் குறித்து தங்கள் நிலைப்பாடுயாது?

அடையாள அரசியலின் தாக்கத்தைக் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகத் தெற்காசிய வரலாற்றில் நாம் காணமுடிகின்றது. அடையாள அரசியல் பல வண்ணங் களைக் கொண்டதாக இருந்தாலும், அவற்றைப்பரந்த நிலையில் இரண்டு வகையினதாகப் பிரிக்கலாம். ஒன்று, ஆதிக்க அரசியல் சார்பானது; மற்றொன்று, தடுப்பு அரசியல் சார்பானது. முதல் வகைக்கு பெரும்பான்மை, சமயத்தின் அரசியல் சான்றாகும்.

பிந்தையதற்கு தலித்துகள், ஆதிவாசிகள் முதலான சிறுபான்மையினரின் அடையாள அரசியல் சான்றாகும். காலனிய ஆட்சிக் காலத்திலேயே அதற்கு எதிராகத் தோன்றிய இயக்கங்கள் சமய அடிப்படையிலான அடையாள அரசியலை நிறுவனப் படுத்தியுள்ளன. இந்திய விடுதலைக்குப்பின் பாரதிய ஜனதாகட்சி இந்து அடையாளத்தை அரசியல் தளத்தில் முன்னிறுத்தியது. அதன் விளைவாக பாபர் மசூதி இடிக்கப்பட்டது. சமயம் சார்ந்த அடையாள அரசியலின் வளர்ச்சியில், அரசியலை சமயப்படுத்தலும் சமயத்தைப் பண்டமாக்குதலும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன.

இந்து சமய அடிப்படைவாதம் தலித்து களையும் ஆதிவாசிகளையும் தனது கட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பதன் மூலம் உள்முக ஒருமைப்பாட்டிற்கு அது முயலுகிறது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்ட ஏராளமான சாதிகளின் வரலாறு என்பது, சாதியக் கட்டமைப்பில் தங்கள் சாதிக்கான உயர் நிலையைச் சட்டபூர்வமாகத் தக்கவைப்பதற்கான முயற்சியேயாகும்.

மேலும் அவ்வரலாறுகள் தங்களது இன அடையாளத்தை உயர்த்திப்பிடித்தன. 20-ஆம் நூற்றாண்டில் சாதிய உணர்வு என்பது, அரசியல் அணி திரட்டலுக்காகச் செயலூக்கம் பெற்றது. தற்போது பெரும்பாலான அரசியல் கட்சிகள், ஏதேனும் ஒரு சாதியினர் ஆதரவை உரிமை கொண்டாடவே செய் கின்றன. இந்தியாவில் நிகழும் சாதி, சமயம் சார்ந்த அடையாள அரசியல் என்பது, பரந்த சமூகத்தின் ஆதரவை உறுதிப்படுத்துவதற்காகவே நிகழ்கின்றது.

சாதி, சமயம் சார்ந்த அடையாளங்களன்றி வேறு வகையான அடையாளங்கள் சார்ந்த அரசியலும் தற்போது அரசியல்ரீதியாக உரக்கப் பேசப்படுகிறத. இவ்வகையில் விளிம்புநிலையிலிருக்கக் கூடிய பாலின சிறுபான்மையினர், பழங்குடியினர் அடையாளங்களைக் குறிப்பிடலாம். தெற்காசிய நாடுகள் காலனிய அதிகாரத்திற்கு எதிராக நிகழ்த்திய பேராட்டங்களின் பின்னரும், சாதிய உணர்வும் சமயப் பற்றுணர்வும் அச்சமூகத்தில் தொடர்ந்து நீடித்தன. தெற்காசிய நாடுகள் ஒரு உயிரோட்டமான முழு வளர்ச்சியை அடைய முடியவில்லை.

அதன் விளைவாக அரசியல் ரீதியான முன்னேற்றத்தைப் பெற்றாலும் பண்பாட்டு ரீதியாகப் பின்னடைவையே பெற்றுள்ளன. பண்பாடு சார்ந்த பிற்போக்கான சமூகவெளியில், அடையாள அரசியல் செழித்து வளர்கிறது. நமது கல்வி முறையின் தோல்வியும் தாராளவாதம் மற்றும் வர்க்க அரசியலின் திறமையின்மையும் அடையாள அரசியலின் வளர்ச்சிக்கும் ஒரு காரணமாகும்.

கல்வியின் சமயம் சார்ந்த பண்பு சரிவடைந்து வருகின்றது. மேலும், சமய, சாதிய இயக்கங்கள் கல்வி நிறுவனங்களைக் கைப்பற்றுவது அதிகரித்து வருகின்றது. வர்க்க உணர்வின் உருவாக்கம் தான், ஏனைய உணர்வு வடிவங்களை வென்றெடுக்கும் சாத்தியம் வாய்ந்தது. வர்க்க அடையாளத்தை போராட்டங்களின் மூலமாகவே நாம் பெறமுடியும். வர்க்க அடையாளம் நமது புராதன அடையாளங்களை வென்றெடுக்க உதவும்.

வர்க்க அடையாளம் மற்றும் வர்க்க அரசியலின் வெளிப்பாடும் நமது புராதன அடையாளங்களை நீக்கும் வகையில் தலைமையேற்றுச் செயல்படவில்லை. வர்க்கம் சமுதாயம் சார்ந்த விசுவாசங்களைக் கடந்து செல்கின்றது.        

அடையாள அரசியல் என்பது, ஒட்டுமொத்த சமூகத்தின் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தாது. எனவே, அடையாள அரசியல் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. அது கூட்டுச் சமூகத்தின் நலன்களை முன்மொழியாது. மாறாக, அது ஒரு சாதியின் பெயராலோ சமயத்தின் பெயராலோ செயல்படும். இது பற்றிய என்னுடைய விரிவான கட்டுரை ‘ஃப்ரண்ட்லைன்’ இதழில் வெளி வந்துள்ளது.

தங்களது பேராசிரியர் பணி குறித்துச் சொல்லுங்கள்.

நான் பி.எச்.டி., முடித்தபிறகு முதலில் ‘இண்டியன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் பப்ளிக் அட்மினிஸ்டிரேஷனில்’ இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தேன். அதன் பின்னர் டெல்லி, பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் உதவிப் பேராசிரியராகச் சிலகாலம் பணிபுரிந்தேன். 1972ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டில் நான் ஓய்வுபெறும் வரை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்தேன். பேராசிரியர் எஸ்.கோபால், ரொமிலாதாப்பர், பிபின் சந்திரா ஆகிய மூவருக்குப்பின் அத்துறையில் நான் சேர்ந்தேன்.

தங்களது குறிப்பிடத்தகுந்த ஆய்வு மாணவர்கள் பற்றிக் கூறுங்கள்.

kn_panicker_340தமிழகத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஆ.இர. வேங்கடாஜலபதி, கோட்டையம் மகாத்மா காந்தி பல்கலைக்கழக வரலாற்றுத்துறையில் பணிபுரியும் பேராசிரியர் எஸ்.ராஜு ஆகியோர் என்னுடைய குறிப்பிடத்தகுந்த ஆய்வுமாணவர்கள். பேராசிரியர் ராஜு, ‘இடைக்காலக் கேரள வரலாறு’ குறித்து சிறந்த ஆய்வினை நிகழ்த்தியுள்ளார்.

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் உருவான பின்னரும் அண்மையில் ஒரே மொழி பேசக்கூடிய மாநிலத்திற்குள்ளும் பல மாநிலங்களின் பிரிவினைக் கான கோரிக்கை வலுத்து வருகின்றது. நீங்கள் தெலுங்கானாப் பிரிவினையை ஆதரிக்கீறீர்களா?

நான் தெலுங்கானாவை ஆதரிக்கிறேன். சிறிய மாநிலங்கள் நல்லது. உத்தரப்பிரதேசம் ஒரு மாநிலமல்ல ஒரு நாடு. காங்கிரஸ் கட்சி பண்பாட்டு உணர்ச்சிப் போராட்டத்தில் சிக்கித் தவிக்கின்றது. அது நம்பிக்கையிழந்து காணப் படுகிறது. கட்சியில் யாருக்கும் தெளிவான நிலைப்பாடு இல்லை.

மலையாளம் செம்மொழியானது குறித்து தாங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

சந்தோஷமான விஷயம்தான். ஆனால், மலையாளம் ஒரு செம்மொழியாக இருப்பதைவிட அதனை நவீன மொழியாக்குவதையே நான் விரும்புகின்றேன்.

எம்.ஜி.எஸ்.நாராயணன் போன்ற கேரளத்தைச் சார்ந்த முற்போக்கு வரலாற்றாசிரியர்கள் அண்மைக்காலத்தில் தங்களது தொடக்ககால நிலைப்பாட்டிலிருந்து மாறிச் செல்வது குறித்து தங்களது கருத்து என்ன?

அவர்கள் தங்களது பழைய நிலைப்பாட்டின் மீது விரக்தியடைந்துவிட்டார்கள். அவர்கள் அறிவுத்துறை சார்ந்த தேக்கத்தில் இருக்கிறார்கள்.

மலையாள நாவலாசிரியர் தகழி சிவசங்கரப்பிள்ளையைப் பற்றிய உங்களது மதிப்பீடு என்ன?

தகழி மிகச்சிறந்த சிறுகதையாசிரியர். உலகப் புகழ் வாய்ந்த பல சிறுகதைகளை எழுதியுள்ளார். எளிமையான சொற்களில் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைக் கதைகளாக்கியுள்ளார். மார்ஸிய எழுத்தாளர் அவரது கதாபாத்திரங்கள் போராடும் தன்மை கொண்டவை. அவர் வர்க்க முரண்பாடுகளைத்தனது நாவல்களில் சிறப்பாகச் சித்திரித்தார். இவ்வகையில் தோட்டியின் மகன், இரண்டு படிகள் முதலியன அவரது முதல் மூன்று நாவல்கள் மிகச் சிறப்பானவை. ஏணிப்படிகள் தொடங்கி பிற்காலத்தில் வெளிவந்த நாவல்களில் ஒரு பெரிய மாற்றம் காணப்படுகிறது. பிந்தைய நாவல்களில் அவர் வர்க்கத்திற்குப்பதிலாக சமுதாயங்களைச் சித்திரிக்கத் தொடங்கினார்.

தகழி, கார்க்கியின் புனைவாக்க முறையை வரித்துக் கொண்டார் அல்லவா?

தகழியிடம் ஒரு கார்க்கி இல்லை. ஏராளமான கார்க்கிகள் இருக்கிறார்கள்.

நுண் அரசியல் பற்றிய தங்களது கருத்து என்ன?

விளிம்புநிலைப் படுத்தப்பட்ட தலித்துகள், ஆதிவாசிகள் ஆகியோரின் புதிய இயக்கங்கள் நியாயமானவை. ஆதி வாசிகள் மீதான அடக்குமுறையை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்னர்நான் நாகலாந்திலுள்ள கொகிமாவிற்குச் சென்றிருந்தேன்.

அப்போது அங்கு பந்த் என்பதால் கேரளத்திற்குத் திரும்ப விமானம் இல்லை. நான் ஒரு ஓட்டலில் தங்க நேர்ந்தது. அன்றிரவு ஏழு மணியளவில் எனது அறைக் கதவைத் திறந்துகொண்டு பத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் உள்ளே நுழைந்து என்னை விடுதியை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தினர். நான் வெளியேற முடியாது. விடுதியில் தங்குவதற்குப் பணம் செலுத்தியுள்ளேன் என விவாதித்தேன்.

அப்போது, விடுதியின் உரிமையாளரே நேரடியாக வந்து இது இராணுவ நடைமுறை, தாங்கள் ஒத்துழைக்கவேண்டும் என வலியுறுத்தினர். நான் வெளியே வந்து பார்த்தபோது ஐம்பதிற்கும் மேற்பட்ட நாகா மாணவர்கள் மண்டி யிடப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டிருந்தனர். பிறகு என்னை அடையாளம் கண்டுகொண்ட எனது பழைய மாணவரான இராணுவ அதிகாரி ஒருவர் என்னை மீண்டும் விடுதிக்குள் அனுமதித்தார். ஆதிவாசி களை நான் ஆதரித்துப் பேசியதே அன்றைய வெளி யேற்றத்திற்குக் காரணம்.

அடித்தளமக்கள் ஆய்வுகள்’(Subaltern Studies)  பற்றிய உங்கள் கருத்து என்ன?

‘அடித்தள மக்கள் ஆய்வு’ என்பது இந்திய வரலாற்று எழுதியலில் (Historiography) அதன் மேட்டிமை சார்ந்த திசை வழியிலிருந்து மாறுபட்ட புதிய மிக முக்கியமான ஒரு புறப்பாடாக அமைந்திருக்கிறது. சமூகத்தில் தொழிற் படும் மேலதிகாரத்தின் வேறுபட்ட வடிவங்களை ஆராய்வது இந்த ஆய்வின் மையமாக இருக்கிறது.

இந்த ஆய்வு உண்மைநிலையைச் சரியாக வெளிப்படுத்தாது மேட்டிமைத்தனத்தோடு அமைந்த நடப்பிலுள்ள எல்லா வரலாறுகளின் முழுத்திரட்டையும் நீக்கம் செய்கிறது. அடித்தள வர்க்கங்களின் வரலாறு என்பது மார்க்கிய வரலாற்று எழுதியலின் ஒரு பகுதியாகவே அமையும்.

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் இயக்கங்களின் வரலாறும் பிற விளிம்புநிலைப்படுத்தப் பட்ட குழுக்களின் வாழ்க்கை வரலாறுகளும் மார்க்கிய வரலாற்றாய்வாளர்களாலேயே கையாளப்பட்டுள்ளன. அடித்தளமக்கள் வரலாறு அதன் உள்ளடக்கங்களை விட அதன் முறையியலினாலேயே முக்கியத்துவம் பெறுகிறது. இது வரலாற்றைக் கீழிருந்து பார்க்கும் முயற்சி.

அடித்தள மக்கள் ஆய்வு அதன் முயற்சியில் வெற்றிபெற்றுவிட்ட தென்று உரிமை கொண்டாட முடியாது. அடித்தள மக்கள் வரலாற்று ஆய்வாளர்கள், மேட்டிமையாளர்களால் உருவாக்கப்பட்ட ஆய்வுச் சான்றாதாரங்களையே பயன்படுத்துகின்றனர். எவ்வாறாயினும் இந்த ஆவணங்கள் விமர்சனப் பூர்வமாக கட்டவிழ்ப்புச் செய்யப்பட்டால் அதில் அடித்தள மக்களுக்கான ஆவணமென்று ஒன்று இருக்காது.

விசித்திரமாக அடித்தளமக்கள் ஆய்வுகளின் தொகுதிகள், அடித்தள வர்க்கங்களைப் பற்றியதாக இல்லை. இந்த ஆய்வுகளில் தலித், ஆதிவாசிகள் மற்றும் பெண்கள் மிக அரிதாகவே இடம்பெறுகின்றனர்.  அடித்தளமக்கள் அவர்களுக்காகப் பேசுகின்ற நிலையை உருவாக்குவதில் உண்மையிலேயே அடித்தளமக்கள் வரலாற்றாய்வாளர் வெற்றிபெற்று விட்டார்களா? என்பதை நினைத்து நான் ஆச்சரியப் படுகிறேன்.

இந்தியச் சூழலை ஆய்வு செய்வதற்கு கிராம்ஸி எந்த வகையில் பொருத்தமானவர்?

கிராம்ஸி அடிப்படையில் ஒரு மேற்கட்டுமானக் கொள்கை யாளர். அரசியல் உணர்வுநிலை உருவாக்கத்தில் கருத்து நிலைகளின் இடையீடு பற்றிய குவிமையமே அதன் அரசியல் முக்கியத்துவம். இந்தியாவில் முற்போக்கு அரசியல் சாதி, சமயநம்பிக்கைகளின் தாக்கத்தை வென்றெடுக்க முடியவில்லை.

அரசியல் மற்றும் சமூக உறவுகளின் சிக்கல் வாய்ந்த வலையை கிராம்ஸி பகுப்பாய்வு செய்கின்ற செயல்வகையானது, இந்தியச் சூழலைப்புரிந்து கொள்வதற்கு உதவிகரமாக இருக்க முடியும். சமூக கட்டமைப்பைப் பற்றிய சரியான புரிதல் மட்டுமே இந்திய அரசியலில் முன்னேற்றத்தைச் சாத்தியமாக்கும். இந்தச் சூழலில் கிராம்ஸியின் ‘மேலாதிக்கம்’(Hegemony)  எனும் கருத்தாக்கம் மிக முக்கியமானது.

உலகமயமாக்கல் நமது பண்பாட்டின் மீது எத்தகைய தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.

என்னுடைய ஆய்வின் மிக முக்கியமான பகுதிகளுள் இதுவும் ஒன்று. ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்னால் உலகமயமாக்கல் தொடங்கிய சமயத்தில், நான் ‘பண்பாடும் உலகமயமாக்கலும்’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். இந்தப் பொருளில் அமைந்த முதற்கட்டுரைகளுள் இதுவும் ஒன்று. இக்கட்டுரை டில்லி பல்கலைக் கழகத்தில் நான் ஆற்றிய விரிவுரையின் விரிந்த வடிவம்.

இது முதலில் இந்து பத்திரிகையில் வெளிவந்து, பின்னர் பல கட்டுரைத் தொகுப்புக்களிலும் இடம்பிடித்தது. பண்பாட்டு ஆய்வு இரண்டு பகுதி களைக் கொண்டது. ஒன்று: எந்தச் சூழலில் ஆதிக்கம் முயற்சிக்கப்படுகிறது. இரண்டு வழிகளில் ஆதிக்கம் நிகழ்த்தப்படுகிறது. ஒன்று படைபலத்தின் வாயிலாக - ஆயுதங்களின் வாயிலாகக் கடந்த காலத்தில் இது நிகழ்ந்தது. ஆனால் முன்னேறிய முதலாளித்துவத்தில் ஆதிக்கம் என்பது நமது சம்மதத்தின் வாயிலாகவே நிகழ்த்தப்படுகிறது.

இந்த சம்மதம் பல வழிகளில் பெறப்படுகின்றது. பண்பாட்டு ஆதிக்கம் மற்றும் பண்பாட்டுப் பரப்புகை என்பது ஒரு வழி. பண்பாட்டுக் கருத்துக்கள் ஏற்கப்பட்டு கற்பிப்பதற்குரியதாகிறது. ஜேம்ஸ் பீட்ராஸ், பண்பாட்டு விஷயங்கள் குறித்து ஏராளமாக எழுதியிருக்கிறார். அவர் சொல்கிறார்: ஐந்து அமெரிக்கர்களுள் ஒருவர், பண்பாட்டுத் தொழிற் சாலையின் வழியாகப் பணம் சம்பாதிக்கிறார்.

இன்றைய உலகில் பண்பாட்டுத் தொழிற்சாலைக்கு ஒரு சிறந்த உதாரணம் பொம்மைகள். ஒவ்வொரு பொம்மையும் ரூ.2000 முதல் ரூ.4000 பெறுமானவை. இவை கார்ட்டூன்களில் இருந்தும் புதிய சினிமாக்களிலிருந்தும் உருவாக்கப்பட்டவை. குழந்தைகளின் நோக்குத்திறன்கள் இவ்வகை பொம்மைகளின் தாக்கத்திற்கு உள்ளாகின்றன. இந்த வகையான பொம்மைகள் கார்ட்டூன் படங்கள் வாயிலாக குழந்தைகளைக் கவர்கின்றன. பண்பாட்டு ஆதிக்கம் பொருளாதார உற்பத்தியுடன் தொடர் புடையது என்பது இதன் மூலம் தெளிவு பெறுகிறது. இது ஒரு பரிமாணம். இரண்டாவது மக்களிடம் என்ன நடக்கிறது என்பது பற்றியது.

முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் சமூகங்கள் பண்பாட்டுத் தொழிற்சாலை யினால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன. இந்தியாவில் ஏராளமான ‘மால்’ எனப்படும் நவீன பெருவணிக வளாகங்களும், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களும் உள்ளன. அவை நமது பண்பாட்டுச் சுவையுணர்வில் தாக்கம் செலுத்துகின்றன. நீங்கள் என்ன வகையான சட்டை அணிய வேண்டுமென்பதை அவர்கள் தீர்மானிக் கிறார்கள். அமெரிக்காவில் யாரும் சட்டை தைப்ப தில்லை. இந்தியாவிலும் அதே நிலை உருவாகிறது. நாம் கடைகளுக்குப் போய் தேவையான ஆடைகளைத் தேர்வு செய்கிறோம்.

நீங்கள் எதைத் தேர்வு செய்ய வேண்டுமென்பதை ‘கடை’ தான் தீர்மானிக்கிறது. அவர்கள் வேண்டுமானால் உங்களுக்கு 5 தெளிவு Choice களைத் தரலாம். ஆனால், இந்தத் தெளிவுகளும் அவர்களால் உருவாக்கப்பட்டவையே. பண்பாட்டுத் தெளிவு மிக அரிதாகவே இருக்கிறது. உங்கள் பண் பாடும், பண்பாட்டுநடைமுறைகளும் சந்தையால் தீர்மானிக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் இதுதான் நடக்கிறது.

இன்றைய ஊடகங்கள் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?

ஊடகம் மிகப்பெரிய சக்தி. குறிப்பாக நாம் அதன் வழியாகவே சிந்திக்கிறோம். நாம் கேரளாவை உதாரணமாக எடுத்துக்கொண்டால், இன்று ‘பொது மக்கள் கருத்து’ என்பது ஊடகத்தாலேயே உருவாக்கப் படுகிறது. ஊடகம் மிகப்பெரிய நிறுவனம். அதற்குப் பின்னால் மிகப்பெரிய பணபலம் இருக்கிறது. ஆனால் ஊடகத்தின் முழுப்பண்பும் இன்று முற்றிலும் மரி விட்டது. நான் படிக்கின்ற காலத்தில் என்னுடைய ஆய்வுக்குச் செய்தித்தாளைச் சான்றாதாரமாகப் பயன்படுத்து வேன்.

ஏனென்றால் செய்தித்தாள் என்பது சமூக மெய்ம்மைகளை உள்ளடக்கிய ஓர் உண்மையான சான்றாதாரம். இன்று நீங்கள் அவ்வாறு செய்ய இயலாது. செய்தித்தாளில் வருவன பல நலன்களினால் இடையீடு (Mediate)  செய்யப்படுகின்றன. யாராவது ஒருவர் செய்தித்தாளை ஆய்வுக்கான சான்றாதாரமாகப் பயன் படுத்தினால் அதனை உறுதிப்படுத்த வேறு ஆதாரங்கள் தேவைப்படும்.

மிகத் துயரமான செய்தியென்னவென்றால் ஊடகமானது பணத்தின் பாதிப்பிற்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. அண்மைய வளர்ச்சி என்ன வெனில், ‘செய்தி இடம்’ விலைக்கு வாங்கப்படுகிறது. இது ஜனநாயகத்திற்கு மிகப் பெருந்தீங்காகும்.

Pin It