ஈரோடு: தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் மிக மிக சாதாரணமான விவசாயக் குடும்பத்தில் பிறந்து அங்குள்ள அரசுப்பள்ளியில் தமிழ் வழிக் கல்வி பயின்று தமது சட்ட மேதைமையாலும், புத்தகப் படிப்பாலும், கடின உழைப்பாலும் இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உயர்ந்துள்ள மாண்பமை நீதியரசர் திரு.சதாசிவம் அவர்கள் இன்றைய இளம் தலை முறையாளருக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் முன் உதாரணமாகவும் ஆகத் திகழ்பவர். அத்தகைய மேன்மை மிக்க பெருந்தகையாளர் இந்த ஈரோடு புத்தக அறிவுத் திருவிழாவைத் தொடங்கி வைப்பது மிக மிகப் பொருத்தமானதாகும் என ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவரும் தமிழ்நாடு பத்திரிகையாளர் பணியாளர் கூட்டமைப்பின் மாநிலத்தலைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான தோழர் ஸ்டாலின் குணசேகரன் பேசினார்.

sadasivam_judge_640

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் 9வது ஈரோடு புத்தகத் திருவிழாவினை ஈரோடு நகரின் வ.உ.சி. மைதானத்தில் ஆகஸ்டு 3 அன்று இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்புமிகு சதாசிவம் அவர்கள் தொடங்கி வைத்து விழாச் சிறப்புரை ஆற்றினார். ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வே.க.சண்முகம் விழா நிகழ்விற்குத் தலைமை ஏற்றார். தேசிய நல விழிப் புணர்வு இயக்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ எஸ்.கே.எம். மயிலானந்தன் வாழ்த்துரை வழங்கினார்.

விழா அறிமுகவுரை மற்றும் வரவேற்புரை நிகழ்த்திய மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் பேசியதாவது:

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை கடந்த எட்டு ஆண்டுகளாக வரலாற்று முக்கியத்துவமான நிகழ்வாக இந்தப் புத்தக அறிவுத் திருவிழாவை நடத்தி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் வேறுபல சேவைத் திட்டங் களையும் நிறைவேற்றி வருகிறது.

அரசுப்பள்ளி மற்றும் தனியார்பள்ளி ஆசிரியர்களை, மாணவர்கள் சிறந்த மார்க் எடுத்து தேர்ச்சி பெற உழைத்தவர்களை, பாராட்டி வருகிறது.  பாரதியாரின் இறுதிப் பேருரை நிகழ்த்திட்ட இங்கு ஈரோடு மண்ணில் மக்கள் சிந்தனைப் பேரவை கடந்த பல வருடங்களாக பாரதி விழாவையும் நடத்தி வருகிறது.

மாண்பமை மிகு நீதியரசர் சதாசிவம் அவர்களை இந்த 9வது புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென்று, நமது மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் விடுத்திருந்த அழைப்பை ஏற்று நமது பணிச்சேவையினைப் பாராட்டி வாழ்த்திட வருகை புரிந்துள்ளார்கள்.

வருகைபுரிந்துள்ள மாண்பமை நீதியரசர் சதாசிவம் அவர்கள் ஈரோடு மாவட்டத்தின் பவானி வட்டத்திற்கு உட்பட்ட காடப்பநல்லூர் கிராமத்தில் பிறந்து, பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்தவர். கடந்த ஜுலை 19-ஆந் தேதி தான் இந்திய ஜனநாயக நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பான உச்சநீதிமன்றத்தின் 40வது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். முதல் நிகழ்வாக ஈரோடு புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்துள்ளது நமக்கெல்லாம் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. 

பள்ளிக்கூடங்களே தோன்றி இருக்காத உலகச் சூழலில், உலகப் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்திட்ட பெருமையைப் பெற்றிருந்தது நமது இந்தியநாடு. நாளந்தா, தட்சசீலம், காஞ்சி ஆகிய பெருமை வாய்ந்த உலகப் பல்கலைக்கழக மையங்கள் இந்தியத் திருநாட்டில் அன்று அமைந்திருந்தன.

அத்தகைய பெருமை மிக்க நாட்டின் ஜனநாயக அரசின் மூத்த முதல் குடிமகனான குடியரசுத் தலை வருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்திடும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகத் திகழ்பவர் நமது மாண்பமை நீதியரசர் சதாசிவம் அவர்கள், இளம் தலைமுறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டும் ஒரு முன் உதாரணமும் ஆகத் திகழ்பவர். உண்மை உழைப்புக்கான வாழ்வின் மேன்மைக்கு இவரது வாழ்வே சிறந்த பாடமாகும்.

ஈரோடு மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து அங்குள்ள மிக சாதாரணமான அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் கல்வி பயின்று பின் சட்டப் படிப்பு படித் திட்டவர் இவர் இவரது கிராமத்தில் முதல் பட்டதாரி. தனது புத்தகப் படிப்பாலும், சட்ட மேதைமையாலும் கடின உழைப்பாலும் உயர்ந்து இன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகத் திகழும் இவர் இந்தப் புத்தக விழா தொடக்க நிகழ்வுக்கு  வரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இன்று இங்கு வந்திருந்து பெருமை சேர்த்துள்ளார்கள்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து நல்ல பல தீர்ப்புகளை வழங்கி இருப்பவர் இவர். ரிலையன்ஸ் அம்பானி சகோதரர்களின் வழக்கில் இந்தியக் கடல் பகுதியிலிருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவிற்கு எவரும் தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாட முடியாது, அது இந்திய மக்கள் அனைவரின் சொத்தாகும் என்ற அந்தத் தீர்ப்பு மிகமிக முக்கியமான தீர்ப்பாகும். பழம்பெரும் சட்டமேதை உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யர் போன்றோரின் வழியில் வழங்கப்பட்ட தீர்ப்பாக அனைவராலும் மதிக்கப்படுவதாக உள்ளது.

நேர்மையும் திறமையும் மிக்கவர்களில் இவரும் ஒருவர். விவசாயியின் மகனைப் போல எளிமையானவர், நேர்மை, திறமை, எளிமை ஆகியவற்றோடு மேன்மை மிக்க பெருந்தகையாளர் ஆகிய மாண்பமை நீதியரசர் அவர்கள் 60 ஆண்டுகளுக்கு முன் அவ்வாறான ஒரு தமிழராகத் திகழ்ந் திட்ட ‘பதஞ்சலி’ என்பவருக்கு அடுத்ததாக 40வது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகத் திகழும் தமிழ் நாட்டுக்காரராவார்.

பதஞ்சலியின் தந்தையாரோ அந்தக் காலத்தில் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு சமஸ்கிருத அறிஞராகத் திகழ்ந்திருந்தாராம். ஆனால் நீதியரசர் சதாசிவத்தின் தந்தையாரோ மிகமிக சாதாரணமான விவசாயியாக இருந்துள்ளார். அவ்வாறான ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்திலிருந்து இந்தியத் திருநாட்டின் உயரிய பதவிக்கு உரியவராகி இன்று அவர்களது தாய்மண்ணின் நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருக்கின்ற அன்னாரின் பெருந்தன்மைக்கு இருகரம் கூப்பி எங்களது நன்றி அறிதலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என ஸ்டாலின் குணசேகரன் பேசினார்.

விழாவில் தலைமையேற்றுப் பேசிய மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம், வாசிப்பினைச் சுவாசிப்பாக மாற்றி வருகிற மக்கள் சிந்தனைப் பேரவையின் புத்தக அறிவுத் திருவிழாவினைச் சிறப்புற நடத்தி ஈரோட்டுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கிற ஸ்டாலின் குண சேகரனையும் அவரது அமைப்புச் செயல்பாட்டினையும் பாராட்டினார்.

வாழ்த்துரை வழங்கிய தேசிய நல விழிப்புணர்வு இயக்கத் தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன், மாண்பமை நீதியரசர் சதாசிவம் அவர்கள் இந்நிகழ்வினைத் தொடங்கி வைப்பது சிறப்பு மிக்கதாகும். “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்” என்னும் வள்ளுவர் குறளுக்குப் பொருத்தமான வாழ்வுடையவர். இன்றைய நாட்டு மக்களின் ஓரே நம்பிக்கை நீதித் துறையாக இருக்கிறது.  இது சரியாக அமைந்திடவில்லை யானால் ஜனநாயக நடைமுறைகள் சிக்கல்களுக்கு உள்ளாகிப் போகும் என்பார்கள். கால தாமதமான தீர்ப்பு காலதாமதமான தண்டனையாக அமைந்துவிடுகிறது. ஆகவே இவரைப்போன்ற நல்ல தீர்ப்புகளை உடனடித் தீர்ப்புகளை வழங்குகின்ற நீதிபதிகள் நாட்டுக்குத் தேவை என பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டி இருக்கிறது. அத்தகைய பேரறிஞரை வாழ்த்தி வரவேற்கிறேன் எனப் பேசினார்.

நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட நீதிபதிகள் வழக்கறிஞர்கள் முக்கிய தொழில் வணிகப் பெருமக்கள் பள்ளி, கல்லூரிகளின் தாளாளர்கள், முதல்வர்கள், ஆசிரியப் பெருமக்கள், மாணவ மாணவியர் எனப் பல ஆயிரக் கணக்கானவர்கள் அரங்கம் நிரம்பி வழிய அமர்ந்திருந்து நிகழ்வினை அமைதியாகவும் கட்டுக்கோப்பாகவும் கவனித்தது குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது.

217 அரங்குகளில் 144க்கும் மேற்பட்ட புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் லட்சக்கணக்கான புத்தகங்களைக் காட்சிப்படுத்தி இருந்தனர். ஆக 3 முதல் ஆக 14 வரை காலை 11 மணிமுதல் இரவு 9மணி வரை காட்சி அரங்குகளில் புத்தக விற்பனை நடைபெறும்.  மற்றும் ஒவ்வொரு நாளின் மாலையிலும் பலப்பல அறிஞர் பெருமக்கள் பங்கேற்கும் கருத்தரங்க நிகழ்வு களும் நடைபெறும் என நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் ஈரோடு மாவட்ட பத்திரிகை ஊடகவியலாளர்களோடு முதன்முறையாக தமிழ்நாடு முழுமையுமுள்ள பத்திரிகை ஊடகவியலாளர்களை தமிழ்நாடு பத்திரிகையாளர் பணியாளர் கூட்டமைப்பின் சார்பில் கலந்துகொள்ள வைத்து, தமிழகம் முழுவதுமுள்ள தினசரி வார மாத பத்திரிகைகளுக்கும் செய்திகளை, போட்டோ படங்களை அனுப்பிவைத்து வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது சிறப்புத் தன்மை வாய்ந்ததாக அமைந்திருந்தது.

தமிழ்நாடு பத்திரிகையாளர், பணியாளர் கூட்ட மைப்பின் முக்கிய பொறுப்பாளர்களான ‘தலைநகரம்’ குமார், ‘புனித ராஜ்யம்’ பூபதி டேனியல், ‘நீதியின் பார்வை’ திருச்சி சுப்பிரமணியம், ‘ஜனசக்தி’ இசைக்கும்மணி, ‘கொடுங்கையூர் நியூஸ்’ ஏ.வி.கண்ணையா, ‘பொதிகை மலர்’ மதுரை விஜய கண்ணன், ‘ஜாஸ் டிவி’ நெல்லை சுப்பிரமணி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பத்திரிகை யாளர்கள், ஊடகவியலாளர்கள் புத்தகத் திருவிழாவின் தொடக்கவிழா மற்றும் ஆரம்ப நாள் விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Pin It