ஏறத்தாழ ஐம்பதாண்டுக் காலம் தமிழிலக்கியப் பரப்பில் தொடர்ந்து இயங்கிய ஓர் ஆளுமை சுந்தர ராமசாமி. அவருடைய படைப்புலகம் மிகவும் விரிவானது. மாற்றம் என்னும் மாறாத உண்மையை ஒரு பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட அவருடைய ஒரு சில கதைகளை மட்டும் இக்கட்டுரை கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

people_259“நாற்பது வருடங்களுக்கு முன்னால் பார்க்க நேர்ந்த இரண்டு முகங்கள் இன்னும் மனத்தில் நிழலாடுகின்றன” என்று தொடங்குகிறது, சுந்தர ராமசாமியின் இரண்டு முகங்கள் என்னும் சிறுகதை. ஒன்று, ஒரு சில நாட்கள் மட்டுமே பார்த்த ஒரு தாயின் முகம். இன்னொன்று, ஒரு சில கணங்கள் மட்டுமே பார்த்த ஒரு குழந்தையின் முகம். இக் கதையில் மொட்டை மாடியில் இருந்து ஒரு தொலைநோக்கி வழியாகத் தொலைவில் தெரிகிற புன்னைக்காடு, தென்னந்தோப்பு, வீடுகள், மேகங்கள் எல்லாவற்றையும் தேடித்தேடி ஆவலோடு பார்க்கும் ஒரு நோயாளி இளைஞன் இடம்பெறுகிறான். அவன் பார்வை வழியாகத்தான் கதை விரிவடைகிறது. தொலைநோக்கியில் ஒருநாள் தென்னந்தோப்பைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு மரம் சரிவது தெரிகிறது. ஓசையில்லாமல் தென்பட்ட அக்காட்சி மனத்தைத் தாக்குகிறது. ஒவ்வொரு நாளும் சரிந்து விழும் மரங்களின் எண்ணிக்கை கூடுகிறது. வானத்தில் உருவாகும் வெட்டவெளி அதிர்ச்சியைத் தருகிறது. மெல்லமெல்ல அந்த இடத்தில் கட்டடங்கள் முளைக் கின்றன. தென்னை ஓலைகள் காற்றில் தலையசைத்துக் கொண்டிருந்த இடங்களில் கான்கிரிட் கட்டடங்கள் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நிற்கின்றன. உறுத்த லோடும் வலியோடும் இந்த மாற்றத்தை இந்த மண் ஏற்றுக் கொள்கிறது. தோப்பு அழிந்து ஒரு நகரம் உருப்பெறும் மாற்றமாக இப்பதிவைக் காணலாம். மாற்றம் என்னும் பின்னணி இக்கதைக்கு ஒரு கூடுதல் வலிமை என்றே சொல்ல வேண்டும்.

தோப்புக்கு முன்னால் அந்த இடம் ஒரு சின்னஞ் சிறு காடாக இருந்திருக்கலாம். அதற்கும் முன்பு ஒரு பெரிய காடாகவே இருந்திருக்கலாம். பெருங்காடு சின்னக்காடாக மாறி, சின்னக்காடு தோப்பாக மாறி, தோப்பும் அழிக்கப்பட்டு ஒரு புறநகராக உருவாகிறது. மாற்றங்களின் கண்ணிகள் வழியாகவே காலம் நகர்கிறது.

இப்படி ஒரு பின்னணியோடு சொல்லப்படுகிற கதையில் ஏணியொன்றில் இரும்புச் சட்டியோடு ஏறி வருகிற ஒரு சித்தாள் பெண்ணின் வாழ்க்கை சித்திரிக்கப்படுகிறது. நாட்கள் கழியக்கழிய அவள் இரும்புச் சட்டியின் சுமையால் திணறத் தொடங்கு கிறாள். இரும்புச்சட்டியை இரு கைகளாலும் பிடித்தபடி ஏணியில் அனாயசமாக ஏறிக்கொண் டிருந்தவள் மெல்ல மெல்ல ஆயாசத்தோடு ஏற வேண்டியவளாகக் காணப்படுகிறாள். ஒரு கையால் சட்டியையும் இன்னொரு கையால் ஏணியையும் பற்றியபடிதான் ஒவ்வொரு படியாக நின்று நின்று ஏறவேண்டியிருக்கிறது. அவளால் அவள் உடலையே தூக்கிக்கொண்டு நடக்க முடிவதில்லை. கொத்தனார் களிடமிருந்தும் சக ஊழியர்களிடமிருந்தும் வசை படுகிறாள். இறுதியாக, ஒரு நாள் அவள் காட்சி யிலிருந்தே மறைந்துவிடுகிறாள். பார்வை வழி யாகவே மனத்துக்கு நெருக்கமாகிவிட்டவளைப் பார்ப்பதற்காக, நோயாளி இளைஞன் கட்டுமான வேலைகள் நடக்கும் இடத்துக்குச் செல்கிறான். அங்கே ஒரு கிழவரைச் சந்தித்து உண்மை விவரங் களைத் தெரிந்துகொள்கிறான். மிகவும் வருத்தத்தைத் தரக்கூடிய உண்மைகள் அவை. அந்தப் பெண் பிரசவத்தில் இறந்துபோய்விட்டாள். அவளுக்குப் பிறந்த குழந்தையைக் காப்பாற்ற, அவளைப் போலவே இருக்கிற அவளுடைய தங்கை வந்து இரும்புச் சட்டி யோடு, ஏணியில் ஏறிக்கொண்டிருக்கிறாள். மாறிக் கொண்டே இருக்கிற உலகத்தை ஒரு பக்கத்திலும் மாறாத துயரத்தோடும் சுமைகளோடும் வாழ்கிற மனிதர்களை இன்னொரு பக்கத்திலும் நிறுத்துகிறது இக்கதை. தீராத இந்த முரண் எந்தக் காலத்தில் தீரப்போகிறது என்னும் பெருமூச்சை நம் நெஞ்சில் எழுப்புகிறது.

இக்கதையில் கட்டுமான இடத்தில் சித்திரிக்கப் படுகிற ஏணிக்காட்சியை ஒரு கணம் நினைத்துப் பார்க்கலாம். தற்செயலாகக் காட்சிதான் அது. சித்தாள் பெண்கள் இரும்புச் சட்டியோடு மேல் தளத்துக்குச் செல்லவே அந்த ஏணி வைக்கப்பட்டி ருக்கிறது. ஏணி என்பது ஒரு பொருள்மட்டும் தானா? வாழ்க்கையில் உயர்வதைக்கூட ஏணிப் படிகளில் ஏறிச் செல்வதாகக் கூறுகிற ஒரு வழக்கு நம்மிடையே உண்டு அல்லவா? சித்தாள் பெண்களின் வாழ்க்கை தரையிலேயே தொடங்கித் தரையிலேயே முடிந்து போகிறது. ஏணி அவளை எங்கேயும் கொண்டு செல்லவில்லை. ஏணி ஓர் எட்டாக்கனவாகவே போய்விடுகிறது. எளிமையான ஒரு சித்திரிப்பின் வழியாக ஆழமான ஒரு புள்ளியைத் தொடுவது தான் சிறுகதைக் கலையில் நிகழ்கிற உச்சம்.

மாறுகிற காலத்தைச் சித்திரிக்கும் இன்னொரு சிறுகதை காகங்கள். இதில் இடம்பெறுவது ஒரு பாதை. ஒரு காலத்தில் ஒற்றையடிப்பாதை; பிறகு காளை வண்டிகள் ஓடக்கூடிய மண்பாதை அதன் பிறகு லாரிகள் ஓடக்கூடிய தார்ச்சாலை. அத்துடன் நவீன பேருந்துகளும் சேர்ந்து ஓடுகின்றன. அனைத்து வகைப்பட்ட வாகனங்களும் சாலையெங்கும் ஓய்வு ஒழிச்சலின்றி சதாகாலமும் ஓடிக்கொண்டே இருக் கின்றன. ஐம்பதாண்டுக் காலத்தில் பாதையின் வளர்ச்சியும் பயன்பாடும் பலமடங்காகப் பெருகிப் போய்விட்டது. நகர நிர்வாகம் வாகன நெரிசலைச் சமாளிப்பதற்காக ஒரு வழிப் பாதையாக அறிவிக்க வேண்டிய அளவுக்கு அந்த நெரிசல் கட்டுப்படுத்த முடியாததாக மாறிவிட்டது. அதையொட்டிய வாதங்களும் விவாதங்களும் மாவட்ட ஆட்சித் தலைவரின் முன்னால் நடைபெறுகிறது. இப்படி ஒரு பின்னணியில் இக்கதை அமைந்துள்ளது.

சவேரியார் கோயில் சந்திப்பில் தொடங்கி அனந்தன் கால்வாய் சந்திப்பில் முடிகிற சாலை தான் கதையில் மாற்றங்களை ஏற்றுக்கொள்கிற களம். தொடக்க காலத்தில் அரிசி மூட்டைகளின் பாரத்தோடு காளை வண்டிகள் அச்சாலையில் ஓடின. அம்மூட்டைகளிலிருந்து சிந்தும் அரிசி மணிகள் தான் அங்கே பறந்து திரியும் காகங்களுக்குக் காலை உணவு. வண்டிகள் மறைந்து லாரிகள் ஓடத் தொடங்கியபோதும் காகங்களின் காலை உணவு சிறிதும் பாதிக்கப்படவில்லை. வண்டிகளிலிருந்து சிந்தும் அரிசி மணிகளின் அளவைவிட லாரிகளி லிருந்து சிந்தும் அரிசி மணிகளின் அளவு குறைவு தான் என்றாலும் வண்டிகளைவிட லாரிகளின் எண்ணிக்கை பெருத்துப் போனதால் அரிசி மணி களின் அளவும் கூடிக்கொண்டே போனது. காகங் களின் கூட்டத்துக்கு உணவுத் தட்டுப்பாடு எதுவும் நேரவில்லை. அதிகாலையின் முதல் ஒளிக்கற்றை மண்ணில் விழத்தொடங்கியதுமே ஆயிரக்கணக்கான காகங்கள் தரையில் இறங்கி மணிகளைக் கொத்தத் தொடங்கிவிடும். விடியல் தெளிந்த பிறகு வாகன நெரிசலின் காரணமாக மணிகளைக் கொத்தியெடுக்க வழியில்லாமல் போய்விடும். இடைப்பட்ட சிறிது நேரத்துக்குள் மணிகளைப் பொறுக்கியெடுத்துக் கொண்டு அவை பறந்துவிடும். ஐம்பதாண்டுக் காலம், அந்தச் சாலையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி யிருந்தாலும் காகங்களின் காலை உணவுக்கு ஒருபோதும் பஞ்சம் வந்ததில்லை.

இரவோடு இரவாக அமுலுக்கு வந்த ஒரு வழிப்பாதைச் சட்டத்தின் காரணமாக ஒரு நாள் அச்சாலையில் ஒரு லாரி கூட வரவில்லை. அரிசி மணி களைத் தேடி வந்த ஆயிரக்கணக்கான காகங்களும் கத்தத் தொடங்கின. பசியால் துடிக்கிற கைக் குழந்தை களின் கத்தலைப் போல விடாமல் கத்தின. பசியின் கத்தல் ஏமாற்றத்தின் கத்தலாக உருமாறியது. தொடர்ந்து அது கோபத்தின் கத்தலாகவும் மாற்ற மடைந்தது. மறுநாள், அந்தச் சாலையில் ஒரு காகம் கூட உணவுக்காக இறங்கவில்லை. மிகப் பெரிய ஏமாற்றத்தைச் சொல்லக்கூட வழியில்லாமல் காகங்கள் எங்கோ சென்றுவிட்டன. அந்த வெறு மையால் ஐம்பதாண்டுக் காலமாக அவற்றைப் பார்த்து, அவற்றைப் பற்றிக் கவிதைகள் எழுதி, அவற்றோடு மானசீகமாக ஓர் உறவை வளர்த்து வந்த ஒரு கவிஞர் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறார். காகங்கள் வேறு, மனிதர்கள் வேறு என்று நினைத்துப் பார்க்கத் தெரியாத மனமுள்ள கவிஞர் அவர். இந்த நாகரிகத்தை உருவாக்கியதில் மனித குலத்துக்கு நிகரான பங்கை செடிகளும் கொடிகளும் பூச்சிகளும் பறவைகளும் விலங்குகளும் புல்லும் பூண்டும் கூடச் செலுத்தியுள்ளன என்று நம்புகிறவர். ஆனால் அவரைச் சுற்றியுள்ள உலகம் அப்படி இல்லை. தன் மேம்பாடு பற்றியே நினைப்பவர்கள் அவர்கள். தனக்கான உலகத்தை உருவாக்கும் தன்னலத்தால் உலக ஆக்கத்துக்கு எல்லாவிதங்களிலும் பங்காற்றிய எல்லாச் சக்திகளையும் பொருட்படுத்தாமல் புறக் கணித்து அழித்துவிடக்கூடத் தயக்கம் காட்டா தவர்கள்.

ஆட்சியரின் முன்னிலையில் நடக்கிற கூட்டத்தில் கவிஞர் ஆவேசத்தில் வெடிக்கிறார். அழுகையையும் கதறலையும் புரிந்துகொள்ள முடியாத பண்பால் எந்த நன்மையும் விளைவதில்லை என்று அழுத்தம் திருத்தமாக அறிவிக்கிறார். கூட்டத்தினரின் ஏளனப் பார்வையையும் கிண்டலையும் சிறிதுகூடப் பொருட் படுத்தாமல் காகங்களுக்காக அவர் விடாப்பிடியாக வாதாடுகிறார். மாறிக்கொண்டே இருக்கிற உலகத்தை ஒரு புறமாகவும் தன்னை மையப்படுத்தும் திட்டங் களால் மற்ற உயிர்களைச் சிறிதும் பொருட்படுத்திப் பார்க்காத அகந்தையை மற்றொரு புறமாகவும் நிறுத்திக் காட்டுகிறது கதை. நன்றி கெட்டவர் களாக மனிதர்களை மாற்றும் சக்தியை நோக்கி நம் கவனத்தைக் குவிக்கத் தூண்டுகிறது இச்சிறுகதை. கவிஞரின் ஆவேசக் குரலில் கதைக்குள் வந்து விழும் ஒவ்வொரு சொல்லும் மானுடத்தின் மீது விழும் சாட்டையடி என்றே சொல்ல வேண்டும்.

அரிசிமணிகளைத் தேடி வரும் காகங்களை, உணவுக்கான வாய்ப்புகளுக்காகவும் வேலைக்கான வாய்ப்புகளுக்காகவும் வாழ்க்கைக்கான வாய்ப்பு களுக்காகவும் இடம்விட்டு இடம் மாறிச் செல்லும் அப்பாவி மக்களாக ஒரு கணம் நினைத்துப் பார்த்தால் இக்கதைக்கு இன்னொரு தளம் உருவாவதைப் பார்க்கலாம். இந்த உலகத்தில் அவர்களுக்கும் இதே நீதிதானே கிடைக்கிறது. ஒன்று, அவர்கள் விரட்டப்படுகிறார்கள். அல்லது, அவர்களுக்குக் கிடைக்கிற வாய்ப்புகள் அவர்களுக்குக் கிட்டாத வண்ணம் சட்டதிட்டங்கள் தந்திரமாக மாற்றப் படுகின்றன. சமீபத்தில் தில்லியில் காமன்வெல்த் விளையாட்டு அரங்குகளைக் கட்டுவதற்காகப் பக்கத்தில் உள்ள மாநிலங்களிலிருந்து ஆயிரக் கணக்கில் கட்டுமானத் தொழிலாளர்கள் வரவழைக்கப் பட்டார்கள். ஏராளமான வாக்குறுதிகள் அவர் களுக்கு வழங்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை கொடுக்கப்பட்டது.

இரவும் பகலுமாக நடைபெற்ற வேலைகள் ஒருநாள் முற்றுப் பெற்றன. மறுநாள் விளையாட்டு தொடங்குகிறது என்கிற நேரத்தில், அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தில்லியிலிருந்தே வெளியேற்றப்பட்டார்கள். அவர்களிடமிருந்த அடையாள அட்டைகள் அனைத்தும் திரும்பி வாங்கப்பட்டன. பிழைப்பைத் தேடி இடம்பெயர்கிற அசாமியர்கள் வங்காளத்தில் புறக்கணிக்கப்படுகிறார்கள். பீகாரிகள் மும்பையில் புறக்கணிக்கப்படுகிறார்கள். கன்னடியர்கள் கோவாவில் புறக்கணிக்கப்படுகிறார்கள். தமிழர்கள் கன்னட மண்ணில் புறக்கணிக்கப்படு கிறார்கள். புறக்கணிப்பின் சங்கிலி இப்படி நீண்டு கொண்டே போகிறது. இந்த மண்ணையும் உலகையும் தமக்காக மட்டுமே என்று எண்ணும் பேதைமை நம்மை விட்டு என்று போய்த் தொலையும்? காகங்கள் சிறுகதை நம் சிந்தனையைப் பல திசைகளை நோக்கிச் செலுத்துகிறது.

மாற்றத்தின் விளைவுகளைப் பற்றி வேறொரு விதமாகப் பேசும் சிறுகதை நாடார் சார். திருவிதாங் கூரிலேயே படிப்பில் முதல் இடத்தில் நிற்கிற ஒரு பள்ளியைப் பற்றிய சித்திரம் இச்சிறுகதையில் இடம்பெறுகிறது. அது சேதுபார்வதிபாய் பள்ளி. ஒவ்வொரு ஆண்டும் அந்தப் பள்ளி மாணவர்கள் அதே ஊரைச் சேர்ந்த கார்மல் பள்ளி மாணவர் களிடம் தோற்றுப் போகிறார்கள். தோல்வியின் சரிவிலிருந்து மீட்டெடுத்து வெற்றியின் தடத்தை நோக்கி மாணவர்களைச் செலுத்தும் சக்தியாக அப்பள்ளிக்குக் கிடைப்பவர் ஏகாம்பர நாடார் சார். அவர் வழங்கிய கடுமையான பயிற்சிகள் மாணவர்கள் ஒவ்வொருவரையும் வெற்றித் தூண் களாக மாற்றிவிட்டன. பள்ளியின் சரித்திரத்திலேயே பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வெற்றி அது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்த தோல்வியின் சரித்திரம் வெற்றியின் சரித்திரமாக மாறிவிட்டது. எல்லாவற்றுக்கும் மூல காரணம் நாடார் சார். கால்பந்தாட்டத்தில் தோல்வி வெற்றியாக மாறிய மாற்றத்தை ஒருபுறமாகவும் பெருமைப் படுத்தி மதிக்கப்பட வேண்டிய ஒருவரைத் தலை குனிய வைத்துக் கேள்விகளால் சங்கடத்துக்கு ஆளாக்கிய நிர்வாகத்திடம் உண்மையைச் சொல்லி ஆதரவாகப் பேச வேண்டியவர்கள் அனைவரும் ஊமைகளாக நின்றதைக் கண்டு மனம் நொந்து போன சாரின் தோல்வியுணர்வை இன்னொரு புறமாகவும் முன்வைக்கிறது சிறுகதை.

விளையாட்டை விளையாட்டாக எண்ணாமல் வாழ்க்கையாகவே எண்ணுகிறவர் நாடார் சார். பந்தை ஒரு சாக்காக வைத்து, எல்லோரிடையேயும் அவர் உருவாக்குகிற இசைவை ஒரு முக்கியமான மாற்றமாகக் கருத வேண்டும். மனம் நினைப்பதை, உடலின் ஒவ்வொரு உறுப்பும் நினைக்கிறது. மனத்தின் கட்டளையைக் கையும் காலும் நிறை வேற்றத் துடிக்கின்றன. சோர்வு என்பதைச் சிறிது கூட இல்லாமல் ஆக்குகிறது. அவர் வழங்கும் பயிற்சிக்கு அந்த ஆற்றல் இருக்கிறது. வெற்றியை, அடையக்கூடிய ஓர் இலக்காக அது வைத்துக் கொள்ளவே இல்லை போகிற போக்கில் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு கனியாகவே கருதவைக்கிறது. “வெளயாட்டுங்கறது ஒரு தங்கச்சுரங்கம் டோய், பாளம்பாளமா வெட்டி எடுத்துக்கிட்டே இருக்கலாம்” என்பது நாடார் சார் சொல்லும் ஒரு வாக்கியம். அந்தத் தங்கச்சுரங்கத்தின் மதிப்பையறியாமல் பித்தளையாக்கிப் பார்க்கிறது உலகம். அதுதான் அவலம்.

அச்சத்தால் ஒடுங்கித் துவண்டு போயிருப்பவர் களுக்கு நம்பிக்கையைக் கொடுத்து, இடைவிடாத பயிற்சிகள் வழியாக நெஞ்சில் உரமேற்றுகிறவர்கள் நாடார் சாரைப் போன்றவர்கள். அவர்களால் மட்டுமே நம் நெஞ்சை அதிர வைக்க முடிகிறது. அவர்களால் மட்டுமே புது ரத்தத்தை நமக்குள் பாய்ச்ச முடிகிறது. தயங்கித் தயங்கிப் பின்வாங்குகிற கால்களுக்குக்கூட உற்சாகத்தை வழங்கி ஈட்டி களாக மாற்றிவிடுகிறார்கள் அவர்கள். ஆணை களாகவும் ஆலோசனைகளாகவும் வாரி வழங்கி விட்டு ஓரமாக ஒதுங்கிவிடுகிறவர்கள் அல்ல அவர்கள். நம்மோடு ஒருவராக இருந்து அவர்களும் இயங்கு கிறார்கள். நம் இயக்கத்துக்குத் தேவையான விசையை அருகிலேயே இருந்து கண்காணிக்கிறார்கள். தேவைப் பட்ட நேரங்களில் விசையை அதிகப்படுத்தவும் லாவகமாகச் செயல்படுவதையொட்டிய சூட்சுமங் களைக் கற்பிக்கவும் அவர்களால்தான் முடிகிறது. நிறுவனங்கள் எதிர்பார்க்கிற வெற்றிக் கனவை நனவாக்க அவர்கள் உயிரையும் உழைப்பையும் அளிக்கிறார்கள். நம்மை மேம்படுத்தி, நம்மை வெற்றியின் திசையை நோக்கிச் செலுத்திவிட்டு, தமக்குக் கிட்டும் புறக்கணிப்புகளைப் புன்னகை யோடு விருதுகளாக ஏற்று ஒதுங்கிச் செல்கிறவர்கள் கலாசாரத் தளங்களில் காலம்காலமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். கலாசாரத்தின் உண்மையான ஆக்க சக்தி அவர்கள். ஆனால் அவர்களுடைய முகங்களை மாற்றி வைத்திருக்கிறது கலாசாரம். அவர்கள் முகங்களை நாம் வரையத் தொடங்கினால் அது நாடார் சாரின் முகத்தைப் போலவே இருக்கும். நாடார் சார் ஒரு தனிக்குரல். ஒரு தனிச்சக்தி. ஆனால் முக்கியமான ஒன்று.

அவர்கள் நிறுவனங்களால் புண்படுத்தப்பட்டவர்களாக, துன்புறுத்தப்பட்டவர்களாக, சிறுமைப்படுத்தப்பட்டவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களால் சக்தி பெற்றவர்கள் அவர் களை நாடிச் செல்வதை எந்த நிறுவனங்களாலும் தடுக்க முடியாது. அந்தச் சின்னக் குழுவால் அவர்கள் போற்றப்படுவார்கள். கொண்டாடப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் வழியாக அந்த ஆற்றல் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தாமாகவே போய்ச் சேர்ந்துவிடும்.

ஒரு மாற்றம் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறுகிற அம்சங்களின் மீது கவனத்தைக் குவிக்கும் படைப்பே மிகச் சிறந்த படைப்பு. அப்படிப்பட்ட படைப்புகளை உருவாக்குகிறவர்களே மிகச் சிறந்த கலைஞர்கள். சுந்தர ராமசாமியின் படைப்புகள் அத்தகைய சாரத்தை முழு அளவில் உள்வாங்கியவை.

Pin It