இந்த ஆண்டு காதலர்தினம் வழக்கத்தைவிடச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வாழ்த்து அட்டைகள், இதய வடிவில் பலூன்கள், மலர்க் கொத்துக்கள், பரிசுப்பொருட்கள் என்பதாக இளம் காதலர்கள் மகிழ்ந்தார்கள். பெருநகரங்களில் மட்டுமே காதலர் தினம் கொண்டாடப்படுவது என்கிற நிலை மாறி சிறுநகரங்களிலும் கொண்டாட்டங்கள் பரவத் தொடங்கியுள்ளன.

பத்திரிகைகள் அனைத்தும் காதலர் தினத்தை ஒட்டி சிறப்புக் கட்டுரைகள் வெளியிட்டிருந்தன. வழக்கமான வடிவில் அன்றி சில ஆழமான கட்டுரைகளும் கூட காணக்கிடைத்தன. உலகப் புகழ்பெற்ற காதல் நவீனங்களைப் பற்றி ஒரு இதழிலும் இந்திய மரபில் காதலைப் போற்றுதல் பற்றி இன்னொரு இதழிலும், காதலுணர்வு உடலில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள் அதன் விளைவுகள் குறித்து வேறொரு இதழிலும் கட்டுரைகள் வெளிவந்தன.

வழக்கம்போல சிவசேனை, பா.ம.க. போன்ற கலாச்சாரப் போலிஸ்களின் எதிர்ப்புகள் பற்றிய செய்திகள் தென்பட்டாலும் எதிர்ப்பு வலுவிழக்கத் தொடங்கியுள்ளதே வெளிப்பட்டது. உடைந்து பலவீனப்பட்டுப் போயுள்ள சிவசேனாவின் ‘சாம்னா’ இதழ் “இதயங்களில் வசந்தம் மலரும்போது” என்றொரு கட்டுரை (பிப்ரவரி 9) வெளியிட்டிருந்தது. காதலர் தினத்திற்கு எங்கே, என்ன பொருள்களை வாங்கலாம் என்கிற தகவலும் அதில் அடங்கியிருந்ததாம். பிரிந்துபோன மருமகன் ராஜ்தாக்க ரேயின் ‘பாரதீய வித்யார்த்திசேனா’ அமைப்பு, ‘காதலர் தினத்தை கொண்டாடப் போவதில்லை. எதிர்க்கப் போவது மில்லை’ என அறிவித்துவிட்டது. அடிக்கடி ஒழுக்க உபதேசம் செய்பவரும் பார் நடனங்களைத் தடை செய்தவருமான மகாராஷ்டிர உள்துறை அமைச்சரின் தேசிய காங்கிரஸ்காரர்கள் மும்பையில் காதலர்தினக் கொண்டாட்டங்களில் பங்கு பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலும் எதிர்ப்பாளர்கள் ரொம்பவும் அடக்கியே வாசித்தனர். ஒன்றை நினைவிற் கொள்வது உசிதம். மிகப்பெரிய இளைஞர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது நமது நாடு. 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் 30 வயதுக்கும் குறைவானர்கள். கலாச்சாரப் போலீஸ்களின் பாடு கொஞ்சம் சிக்கல்தான்.

கொசுறு: கல்லூரிகளில் மாணவர் சங்கத் தேர்தல்கள் தேவை தானா என ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட லிங்தோ குழு இந்த மாதம் சென்னை வந்திருந்தது. அண்ணா பல்கலைக் கழகத்தில் உடைக்கட்டுப்பாடு (டிரஸ்கோட்) கொண்டு வந்த துணைவேந்தர் விசுவநாதன் மாணவர் தேர்தல் தேவையில்லை. ஆசிரியர்கள் பங்கு பெறும் ‘அகாடமிக் கவுன்சில்’ போன்ற அமைப்புகளிலேயே மாணவர் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் எனக் கருத்துரைத்துள்ளார்.

Pin It