இம்ரானாவிற்கு ஆதரவாக நமது ஊடகங்கள், என்.ஜி.ஓ. நிறுவனங்கள், பெண்ணுரிமை இயக்கங்களெல்லாம் களத்தில் குதித்துள்ளன. பாதிக்கப்பட்ட இம்ரானாவுக்கு நீதி வழங்குவது, முஸ்லிம் தனிநபர் சட்டத்தை ஒழித்துக்கட்டுவது, பொது சிவில்சட்டம் கொண்டு வரவேண்டும் எனச் சொல்வது என்பதாக இவர்களது பெண்ணுரிமை முழக்கங்கள் நமது செவிப்பறைகளைக் கிழிக்கின்றன. தன்னை முற்போக்காளராகவும், மனித உரிமைப் போராளியாகவும், முன்னாள் நக்சலைட்டாகவும், சொல்லிக் கொள்ளும் ஒரு பார்ப்பனர் இம்ரானாவுக்கு நீதி கேட்டு சென்னையில் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

நடந்ததைப் பத்திரிகைகள் வாயிலாக அறிந்திருப்பீர்கள். வடக்கு உ.பி. - முஸாப்பூர் மாவட்டம் - சர்தாவால் கிராமம். படு ஏழையான, கல்வி அறிவற்ற ஒரு முஸ்லிம் குடும்பம். சுமார் 16 வயதில் திருமணமாகி ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்த இம்ரானாவுக்கு வயது இப்போது 28. அவரது கணவர் நூர் இலாஹி ஒரு ரிக்ஷா ஓட்டுநர். குழந்தைகள், கணவன், மாமனார், மாமியார், நாத்தனார் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசிக்கும் இம்ரானா கடந்த ஜூன் 3ஆம் தேதியன்று தனது 68 வயது மாமனார் மீது ஒரு அதிர்ச்சியளிக்கும் புகாரை முன்வைத்தார். முந்தின நாள் இரவு அவர் தன்னைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார் என்பதே குற்றச்சாட்டு. பத்திரிகைகள் தொடர்ந்து இது தொடர்பான செய்திகளை வெளியிட்டன, வெளியிட்டு வருகின்றன.

உள்ளூர் ஜமா அத்தினர் வழங்கிய ‘ஃபத்வா’ (இப்படித்தான் பத்திரிகைகள் எழுதின) மாமனாரின் பாலியல் வன்முறையைவிடக் கொடுமையாக இருந்தது. மருமகளை வன்முறையாகப் பாலியல் உறவுக்கு உட்படுத்திய மாமனார் இதன் மூலம் அவளது கணவராகிவிடுகிறார். தனது பழைய கணவருடனான அவரது திருமண உறவு ரத்தாகிறது. குழந்தைகளின் மீதும் அவருக்கு உரிமையில்லை.

கொடுமையான தீர்ப்புதானே. எந்தப் பெண்ணுரிமையாளருக்கும் மனம் துடிக்கத்தானே செய்யும். பத்திரிகைகள் பத்தி பத்தியாக எழுதின. என்.ஜி.ஓக்கள் தமது இந்த மாத சுற்றுலாத் தலமாக சர்தாவால் கிராமத்தைத் தேர்ந்தெடுத்தனர். பெரிதும் மதிக்கப்படக்கூடிய தியோபாந்த் தாருல் இஸ்லாம் முஃப்டிகளும் கூட இம்ரானாவை மாமனாருடன் வாழச் சொல்லி பத்வா அளித்ததைக் கண்டித்து ‘இந்து’ நாளிதழ் தலையங்கம் (ஜூலை 2, 2005) தீட்டியது. அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும் மேற்படி ‘பத்வா’வை ஆதரிக்கிறது. தியோபாந்த் முஃப்டிகள் தமது தீர்ப்பை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை என்றெல்லாம் தொடர்ந்து செய்திகள்.

தியோபாந்த் பத்வாவிற்கு எதிராக முஸ்லிம் சமூகத்தில் தோன்றிய எதிர்ப்புகளை அமுக்கி மைய நீரோட்டப் பத்திரிகைகள் ஒட்டுமொத்தமாக முஸ்லிம் சமுதாயம் முழுமையும் இந்தக் காட்டுமிராண்டித்தனமான தீர்ப்பிற்கு ஆதரவாக நிற்பதாகவே படம் காட்டின. கருத்தியல் குழப்பங்களாலும், ஆதிக்கப் போட்டிகளாலும் பலவீனப்பட்டுக் கிடக்கும் இந்துத்துவ சக்திகள் வழக்கம் போல முஸ்லிம்களின் தனித்துவத்தை நோக்கிய தாக்குதலுக்கு இந்நிகழ்வைப் பயன்படுத்திக் கொண்டன. அத்வானியும் அருண் ஜெட்லியும் முஸ்லிம் தனிநபர் சட்டத்தைத் தாக்கினர். பொது சிவில் சட்டம் பற்றிக் கூவினர். இது தொடர்பாகக் கிடைத்துள்ள அனைத்துத் தகவல்களையும் தொகுத்துப் பார்க்கும் போது நமக்குப்படுகிற சில உண்மைகள்:

மேற்குறித்த கண்டிக்கத்தக்க பத்வாவை அளித்தது ஒரு உள்ளூர் பஞ்சாயத்து தானே ஒழிய அது மார்க்க அறிஞர்கள் நிரம்பிய ஒரு ஷரியத் கவுன்சில் அல்ல. மார்க்க அறிஞர்கள் யாரும் அதில் இல்லை. உள்ளூர் மவுலவி ஒருவரின் கருத்து மட்டுமே கேட்கப்பட்டுள்ளது. பத்வா எதையும் அளிப்பதற்கான அதிகாரம் உள்ள அவையல்ல அது. ‘பத்வா’ என அதை ஊடகங்கள் குறிப்பிடுவது தவறு.

‘இந்து’ இதழ் எழுதியது போல இம்ரானாவை மாமனாருடன் வாழ வேண்டுமென தியோபாந்த் முஃப்டிகள் பத்வா அளிக்கவில்லை. மாறாக பஞ்சாயத்தாரின் இம்முடிவை அது கண்டிக்கவே செய்தது. அசல் தாய் தந்தையருக்கும் குழந்தைகள் மீது உரிமையில்லை என்பதையும் தியோபாந்த் கண்டித்தது. இனி இம்ரானா தனது அசல் கணவருக்கு மனைவியாக வாழ முடியாது என்பதை மட்டுமே அது ஏற்றுக்கொண்டது.

பத்வா என்பது ஒரு கருத்துதானே ஒழிய அதற்கு நீதிமன்றத் தீர்ப்புக்கு உரிய அதிகாரம் எதுவும் கிடையாது. தியோபாந்த் ஃபத்வாவிற்கும் இது பொருந்தும். இப்பிரச்சினையை இரண்டு அம்சமாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.

1.மாமனார் உண்மையிலேயே பாலியல் வன்முறையை மேற்கொண்டிருந்தால் அவருக்கு அளிக்கப்பட வேண்டிய தண்டனை.

2. வன்முறையை ஒட்டி இம்ரானாவின் திருமண நிலை குறித்து அளிக்கப்பட்ட ஃபத்வா.

மாமனார் இம்ரானாவைப் பாலியல் வன்முறைக்குட்படுத்தி இருந்தால் அதற்குரிய தண்டனை அளிக்கப்படவேண்டும் என்பதை எந்த முஸ்லிம் அமைப்பும் மறுக்கவில்லை. ஆனால் அவரை விட்டுவிட்டு இம்ரானா-வுக்குத் தண்டனை அளிக்க வேண்டுமென மட்டுமே முஸ்லிம் சமூகம் முழுவதும் ஒருமித்த குரலில் கூறுவது போலவே ஒரு கருத்தை நமது பத்திரிகைகளும் பார்பபன அறிவுஜீவிகளும் ஏற்படுத்தி வருகின்றனர். இது குறித்து பத்வா வழங்கிய தியபோந்த் முஃப்டி ஹபிபுர் ரஹ்மானைக் கேட்கும்போது அவர் கூறுகிறார்: “இஸ்லாமியச் சட்டத்தின்படி அந்த மாமனாரைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும். ஆனால் இதை நாம் இந்தியாவில் நிறைவேற்ற இயலாது. எனவே இந்தியச் சட்டத்தின்படி விசாரித்து அவருக்குத் தண்டனை வழங்க வேண்டும்’’ (மில்லி கெஸட், ஜூலை 16 - 31, 2005)

மாமனார் அலி முஹம்மது இப்போது கைது செய்யப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளார். இந்தப் பிரச்சினை தொடர்பாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக மிக முக்கியமான அம்சம் முஸ்லிம் சமூகம் இந்த பத்வாவைக் குறித்து ஒற்றைக் கருத்துடன் இல்லை என்பதே. தியோபாந்த் பத்வாவை எதிர்க்கும் முஸ்லிம் அமைப்புகளும், தனிநபர்களும், மார்க்க அறிஞர்களும் அதிகம். சொல்லப்போனால் இந்த விஷயத்தில் தியோபாந்த் குழுவினர் தனிமைப்பட்டுப் போயுள்ளனர் என்பதே உண்மை. முஸ்லிம் சட்ட வாரியம் பத்வாவை ஆதரித்தாக வந்த செய்தி தவறானது. வாரியத்திலுள்ள இரு உறுப்பினர்கள் மட்டுமே பத்வாவை ஆதரித்துள்ளனர். பெண்கள் சட்ட வாரியம், அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் - ஏ - முஷாவரத், முஸ்லிம் அரசியல் மாநாடு, மில்லி கெஸட் இதழ், நாடறிந்த அறிஞர் தாஹிர் மஹ்முத், முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.எம்.அஹமதி, டாக்டர் தஸ்லீம் ரஹ்மானி முதலியோர் தியோபாந்த் பத்வாவைக் கடுமையாக எதிர்த்துள்ளவர்களில் ஒரு சிலர். தமிழகத்தைப் பொருத்தமட்டில் இந்திய தேசிய லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் முதலிய அமைப்புகள் (இதுவரை நான் கவனித்த வகையில்) பத்வாவை எதிர்க்கின்றன. மார்க்க அறிஞர்களான மவுலவி பி.ஜைனுல் ஆபிதீன், பேரா.அ.முஹம்மது கான் பாகவி, அஸ்கர் அலி இமாம் மெஹ்தி ஸலஃபி, மவுலவி எஸ்.கமாலுத்தின் மதனி, அரபிக் கல்லூரி முதல்வர் எஸ். லியாகத் அலி மன்பஈ, தமிழ்நாடு வக்ப் வாரியத் தலைவர் பதர் சயீத் முதலியோரும் பத்வாவை எதிர்த்துள்ளனர். இம்ரானாவுக்கு உரிய நியாயங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதில் இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர். எனவே முஸ்லிம் சமூகத்திற்குள் நுழைந்து இம்ரானாவை மீட்டெடுத்துக் காப்பாற்றுவதாக நமது இந்துத்துவ, உயர்சாதி அதிரடிப்படையினர் தோள் தட்டுவது தேவையற்ற வேலை.

இஸ்லாமிய அறிஞரும் பத்தி எழுத்தாளருமான யோகிந்தர் சிக்கந்த் குறிப்பிடுவது போல இம்ரானா பிரச்சினை உலமாக்களின் அதிகாரம் குறித்த ஆழமான, மனச்சாட்சியை உசுப்புகிற விவாதங்களை முஸ்லிம் சமூகத்திற்குள் ஏற்படுத்தயுள்ளது ஒரு வகையில் நல்லதே. திருக்குர்ஆன், நபிமொழிகள் (ஹத்திஸ்) முதலான புனிதப் பிரதிகளின் மீதான பல்வேறு வாசிப்புச் சாத்தியங்கள் குறித்த விவாதத்தையும் நாம் இதில் காண முடிகிறது. பாரம்பரியமான இஸ்லாமிய நீதியியல் காலத்திற்கும், சூழலுக்கும் தக்காற்போல மாற்றிக்கொள்ளத்தக்கதுதானா என்பது குறித்த சூடான விவாதங்களும் இன்று அறிஞர்கள் மத்தியில் நிலவுவதையும் நாம் கவனிக்க இயலுகிறது. பேராசிரியர் தாஹிர் முஹம்மது போன்றோர் 1400 ஆண்டுகட்கு முன்னர் அரபியச் சூழலில் உருவாக்கப்பட்ட ‘புராதன நீதியியல் மூதறிவு’ (Ancient Juristic Wisdom) இன்று இந்தியச் சூழலுக்குப் பொருந்துமா என்கிற கேள்வியையும் எழுப்புகின்றனர். விவாகரத்து செய்யப்பட்ட மனைவியர் எளிதில் மறுதிருமணம் செய்து கொள்ளும் சாத்தியமுள்ள அந்தச் சமூகத்தில் பெண்ணுக்குச் சாதகமாக உருவாக்கப்ட்ட ஒரு விதிகூட இன்றைய இந்தியச் சூழலில் நேர் எதிராக அமையக்கூடிய நிலையையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

முஸ்லிம் சமூகத்திற்குள் பல்வேறு பிரிவுகள் இருப்பதையும், பல்வேறு வழமைச்சட்டங்கள் நிலவுவதையும் நாம் கவனிக்க வேண்டும். சன்னிப் பிரிவிற்குள் மட்டும் நான்கு வகைச் சட்டங்கள் பின்பற்றப்படுவதாகத் தெரிகிறது. அவற்றுள் ஒன்றான ஹனஃபி வழமைகளின்படியே தியோபாந்த் பத்வா வழங்கப்பட்டுள்ளது. பிற பிரிவினர் மாற்றுக் கருத்துக்களையும் முன்வைக்கின்றனர் ஹனஃபி பிரிவின் இவ்விதியும் கூட மறுபரிசீலனைக்குரியதே என்கிறார் மவுலானா அக்லக் ஹ§சைன் கஸ்மி.

“சிக்கலான பிரச்சினையில் தீர்வு காண முயலும்போது வெறும் ஹனஃபி மத்ஹபு என்று பார்க்காமல் எல்லா இமாம்களின் கருத்துக்களையும் கவனத்தில் கொண்டு மார்க்கத்திற்கும், சமூகத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் ஏற்ற வகையில் தீர்ப்புகள் அமைவது இன்றைய இந்தியச் சூழலில் மிகவும் நல்லது. ஒரு இமாமின் கருத்தை மட்டும் வைத்துக்கொண்டு பெண்களுக்கு அநீதி இழைக்கும் முடிவு உருவாகியுள்ளது நல்லதல்ல’’ எனத் திருநெல்வேலி அரபிக் கல்லூரி முதல்வர் லியாக்கத் அலி மன்பஈ. குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. “இன்றைய இந்தியச் சூழலில்’’ என அவர் குறிப்பிடுவது (உணர்வு, ஜூலை 08 - 14) நமது மனத்தை நெகிழ்ச்சியடையச் செய்கிறது.

முஸ்லிம் சமூகத்திற்குள்ளும் பிற சமூகங்களைப் போலவே இப்படிப் பன்முகப்பட்ட கருத்துக்களும் நிலவுகிற சூழலில் பொது சிவில் சட்டம் குறித்துக் கூவுவோரின் பேதமை நமக்கு எரிச்சலை அளிக்கிறது. மாமனாரால் இம்ரானாவுக்கு அநீதி இழைக்கப்பட்ட நிகழ்வு உண்மையானது என்று வைத்துக்கொண்டே மேற்கூறியவற்றை எழுதியுள்ளேன். இந்நிகழ்வின் உண்மைத்தன்மையை ஐயத்திற்குள்ளாக்கக் கூடிய பல நம்பத்தகுந்த, ஆதாரபூர்வமான செய்திகள் வந்துள்ளதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். டாக்டர் காசிம் ரசூல் இலியாஸ் தலைமையில் முஸ்லிம் சட்ட வாரியம் சென்ற ஜூன் 30 அன்றும், மவுலானா நுஸ்ரத் அலி தலைமையில் ஜமாத் - ஏ - இஸ்லாமி ஹிந்த் அமைப்பு ஜூன் 2 அன்றும், டாக்டர் தஸ்லீம் ரஹ்மானி தலைமையில் டெல்லியிலுள்ள முஸ்லிம் அரசியல் மாநாடு ஜூன் 25 அன்றும் உண்மை அறியும் குழுக்களைச் சம்பவ இடத்திற்கு அனுப்பித் தொடர்புடைய அனைவரையும் சந்தித்துத் தகவல்களைச் சேகரித்துள்ளன. டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி திரட்டப்பட்ட உண்மைகளும் இம்ரானாவின் வாக்குமூலம் உட்பட வீடியோ செய்யப்பட்ட அனைவரது பேச்சும் ஆதாரபூர்வமாக முன்வைக்கப்பட்டன. சம்பந்தப்பட்டோரின் நேர் காணல்கள் மூன்று மணி நேரம் ஓடக்கூடிய வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும் போது மாமனாரால் இம்ரானா பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டாரா என்பதே ஐயத்திற்கிடமான ஒன்றாக உள்ளது. இம்ரானாவுக்கும் அவரது மாமனாருக்கும் இடையில் ஒரு சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது. கடனை அடைப்பதற்காக அவர்கள் இருந்த வீட்டை இருபதாயிரம் ரூபாய்க்கு விற்க முயன்றுள்ளார் மாமனார் அலி முஹம்மது. வீடு விற்கப்பட்டால் எங்கே செல்வது என்கிற நியாயமான கவலையில் ஐய்ந்து குழந்தைகளின் தாயான இம்ரானா இம்முடிவை எதிர்த்துள்ளார். மனம் நொந்த அலி முஹம்மது ஒரு முறை விஷமருந்தித் தற்கொலை செய்து கொள்ளவும் முனைந்துள்ளார். ‘உனக்கு ஒரு பாடம் கற்பிக்கிறேன்’ என இம்ரானா மாமனாரிடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

இருபதாயிரம் ரூபாயே பெறுமானமுள்ள ஒரு சிறிய வீட்டில், தனியான அறைகள் இல்லாத சூழலில் மாமியார், ஐந்து குழந்தைகள், நாத்தனார் இவர்களுக்கிடையே இம்ரானாவை அந்த 68 வயதுக் கிழவர் பாலியல் வன்முறைக்குள்ளாக்கியிருக்க இயலுமா என்கிற ஐயத்தைப் பலரும் எழுப்புகின்றனர். ஏன் எதிர்ப்பு காட்டவில்லை என்கிற கேள்விக்கு இம்ரானா சொல்லும் காரணம் அலி ஒரு நாட்டுத் துப்பாக்கியை வைத்து மிரட்டினார் என்பதே. அப்படித் துப்பாக்கி எதையும் போலிஸ் கைப்பற்றவில்லை. இம்ரானா முன் வைத்த குற்றச்சாட்டு வெளியே கசியத் துவங்கியவுடன் ‘தய்னிக் ஜாக்ரன்’ என்கிற இந்திப் பத்திரிகையின் உள்ளூர் நிருபர் ஒருவர் அலி முஹம்மது குடும்பத்தை மிரட்டியுள்ளார். செய்தி வெளியே தெரியாதிருக்க 10,000 ரூபாய் கேட்டிருக்கிறார். அவர்களால் கொடுக்க இயலவில்லை. ‘தய்னிக் ஜாக்ரன்’ செய்தியை வெளியிட்டது. ‘ஸீ’ தொலைக்காட்சி களத்திற்கு விரைந்தது. பத்திரிகையாளர்கள், என்.ஜி.ஓக்கள் குவியத்தொடங்கினர்.

ஜூன் 20 அன்று டெல்லியில் உள்ள சேர்ந்த ‘முஸ்லிம் பெண்கள் அமைப்பு’ (விகீதி) என்கிற என்.ஜி.ஓவைச் சேர்ந்த இரு பெண்கள் இம்ரானாவைச் சந்தித்து 5000 ரூபாய் கொடுத்துள்ளனர். ஷரியத் தீர்ப்பை ஏற்க முடியாது எனவும், சிவில் நீதிமன்ற விசாரணையே வேண்டுமெனவும் கோருமாறு இம்ரானாவை அவர்கள் நிர்ப்பந்தம் செய்துள்ளனர். இதற்கிடையில் தியோபாந்த் பத்வாவும் அதையட்டிய நிகழ்வுகளும் பிரச்சினையை இந்திய அளவிற்கு விசாரித்தன.

மவுலானா அகீல் அல் கார்வியும், மில்லி கெஸட் ஆசிரியர் டாக்டர் ஸஃபருல் இஸ்லாம் கானும் சம்பவ இடத்திற்குச் சென்று இம்ரானா, மாமியார் ஸரீஃபுன்னிஸா, கணவர் நூர் இலாஹி ஆகியோரைச் சந்தித்த செய்தி உருக்கமானது. சர்தாவால் கிராமத்தில் ஸரீஃபுன்னிஸாவும் சுற்றி இருந்த மக்களும் இம்ரானாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். சகோதரர்கள் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ள இம்ரானாவையும் அவர்கள் சந்தித்துள்ளனர். ஈக்கள் மொய்த்த அந்த எளிய குடிலின் வாசலில் அமர்ந்த வண்ணம் உள்ளேயிருந்த இம்ரானாவிடம் குடும்ப வாழ்வின் முக்கியத்துவம், மன்னிக்கும் மாண்பு, பிரச்சினைகளை நமக்குள் தீர்த்துக் கொள்ளுதல் குறித்தெல்லாம் மவுலானா கார்வி பொதுவாகப் பேசத் தொடங்கியவுடன், “எனக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது’’ என இம்ரானா வெடித்திருக்கிறார். அவருக்கு ஆறுதல் சொன்ன மவுலானா கணவர் நூர் இலாஹி பக்கம் திரும்பி, “அப்படி ஒன்றும் நடக்கவில்லை என உன் அம்மா சொல்கிறார்களே, அதை நீ நம்புகிறாயா?’’ என்று கேட்டவுடன் “ஆம்’’ என்று அவர் பதிலளித்துள்ளார். “உன் தந்தை இப்படிச் செய்திருப்பார் என நீ நினைக்கிறாயா?’’ என மவுலானா மீண்டும் வினவிய போது, “இல்லை, இப்படிப்பட்ட காரியத்தை அவர் செய்திருக்க முடியாது’’ எனக் கூறியுள்ளார்.

டெல்லிப் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் டாக்டர் தஸ்லீம் ரஹ்மானி போட்டுக்காட்டிய மூன்று மணி நேர வீடியோ காட்சியில் பாலியல் வன்முறை நடக்கவில்லை எனவும், டெல்லி என்.ஜி.ஓவினர் 5000 ரூபாய் கொடுத்ததாகவும் இம்ரானா கூறியது காட்டப்பட்டது. உண்மை வெளிப்படாமல் போகப் போவதில்லை. இம்ரானாவை அவரது மாமனார் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினாரோ இல்லையோ நமது ஊடகங்கள் பலமுறை அதைச் செய்துவிட்டன.

Pin It