மோடி தூய்மை என்பதை மலத்திலும், ‘கக்கூ’சிலும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அதையும் தாண்டி எண்ணத்தில், சிந்தனையில், உள்ளத்தில் இருக்க வேண்டிய தூய்மையை மோடியும், அவரின் அரசும், அவர் சார்ந்த பா.ஜ.க.வும் உணரத் தவறிவிட்டனர்.

மாற்றுக் கருத்துக்கு வழிவிடுவது சனநாயக மாண்பு. மாறாக, இந்துத்துவ மக்கள் விரோதச் செயல்களுக்கு எதிராக எழுதியவர்கள் என்பதற்காக கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கோவிந் பன்சாரே ஆகிய முற்போக்கு எழுத்தாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அண்மையில் கர்நாடகத்தில் பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஸ் கொல்லப்பட்டுள்ளார்.

இம்மூவரையும் கொன்றவன் ஒருவன்தான் என்று, கைரேகைப் பதிவை ஆய்வு செய்த தடய அறிவியல் துறை தன் அறிக்கை மூலம் உறுதி செய்திருக்கிறது.

மாற்றுக் கருத்தைத் தாங்காத அந்த கொலைகாரனின் தூய்மையற்ற இதயம் - இந்தத் தூய்மை இந்தியாவில்தானே இருக்கிறது.

அந்தக் கொலைகாரனை கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பிடிக்காமல், இழுத்தடித்துக் கொண்டிருக்கும் தூய்மையற்ற நிர்வாகம், இதே தூய்மை இந்தியாவில்தானே இருக்கிறது.

திருச்சி குழுமூரைச் சேர்ந்த ஏழை மாணவி அனிதா 1,176 மதிப்பெண் பள்ளி இறுதித் தேர்வில் பெற்றும், அந்தக் குழந்தையின் ‘மருத்துவ’க் கனவு மலக்குழிக்குள் புதைந்துப் போனது. காரணம் மோடியின் தூய்மையற்ற நீட் எனும் தேர்வு.

கட்சி வேறுபாடு இன்றி நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டமன்றத்தில் குரல் எழுப்பியும் கூடத் தீர்வு காணமுடியவில்லை.

‘‘சட்டம் இயற்றுங்கள். நீட்டுக்கு விலக்கு அளிக்கிறோம்" என்றார் பா.ஜ.க.வின் நிர்மலா சீதாராமன்.

அதே சீதாராமன் சட்டமன்ற தீர்மானம் குறித்து எதுவும் தெரியாது என்று அடுத்த சில நாட்களில் நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்.

நீட் தேர்வுக்காகப் பிணமாகி நெருப்பில் எரிந்தாளே குழந்தை அனிதா, அவளின் உடல் எரிந்த ‘கங்கு’ ஆறும் முன் அந்த நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சரவையில் மிக உயர்ந்த பதவி கொடுத்துள்ளார் மோடி.

நீட்டால் அனிதாவைக் கொலை செய்தது மத்திய - மாநில அரசுகள். அங்கே தூய்மையில்லை. அனிதாவின் கொலையை உதாசினப்படுத்திய நிர்மலாவின் இதயம் தூய்மையாக இல்லை. அவரை இராணுவ அமைச்சாராக்கிய மோடிக்கு எது தூய்மை என்று தெரியவில்லை.

மலத்தில் தேடுவதன்று தூய்மை! அது மனத்தில் இருக்க வேண்டும்.