அ.தி.மு.க புள்ளிகள் நடத்தும் நாடகம் அனைத்தும், பா.ஜ.கவிடம் சரணடைய அமித்ஷா எழுதிக் கொடுப்பதுதான் என்பது மீண்டும் ஒரு முறை செங்கோட்டையனால் நிரூபிக்கப்பட்டுள்ளது. மன நிம்மதி வேண்டி அவர் 'ஹரித்வார்' போகிறேன் எனப் புறப்பட்டாலும், நிறைய நடிக்காமல், கார்கள் மாறாமல், முழுதும் நனைந்த பின்னர் முக்காடு எதற்கு என நேரடியாக அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்துவிட்டார்.
செங்கோட்டையனைத் தொடர்ந்து அமித்ஷாவைச் சந்தித்து வந்திருக்கிறார் டி.டி.வி.தினகரன்.
எடப்பாடி முதலமைச்சர் ஆகக்கூடாது என்பதை இவ்விருவர் மூலமாக, அ.தி.மு.க எனும் ஆடுகடித்த இலைக் கட்சிக்கு அமித்ஷாவால் விதிக்கப்படும் நிபந்தனை என்று புரிந்துகொள்ள முடிகிறது. கூட்டு அமைச்சரவை என்ற அமித்ஷாவின் முழக்கத்தை ஏற்காத எடப்பாடியார் அல்லது ஏற்கவைக்கப்படாத எடப்பாடியார் தான் இப்போது அமித்ஷாவின் சிக்கல்! அவரை அடிபணிய வைக்கப் பணப்பெட்டிகளும் ஆசைப் பெட்டிகளும் திறந்து வைக்கப் பட்டிருக்கின்றன.
ஆனாலும் இலையை மீட்டெடுப்பதற்குப் பதிலாக அந்தக் கட்சியின் மூத்தவர்கள், எடப்பாடியின் அசைவுகளைக் கட்டுப் படுத்துவதாகத் தெரிகிறது. இல்லை என்றால் அவராவது இவ்வளவு கெடுபிடி காட்டுவதாவது!
ஜெயலலிதாவின் மறைவை முன் கூட்டியே கணித்து, சசிகலாவின் தலையில் கை வைத்துச் சென்றார் மோடி! அன்றே தொடங்கிவிட்டது அ.தி.மு.க வின் அழிவு. இவர்கள் ஊழல் செய்து ஈட்டி வைத்திருந்த கொள்ளைப் பணத்தில் பாதியை ரெய்டு மிரட்டலுக்குப் பயந்து, பகிர்ந்து, மிச்சத்தையாவது காப்பாற்றிக்கொள்ளலாம் என்றால் அதற்கும் வேட்டு வைத்து இரண்டாம் நிலை புள்ளிகளை எல்லாம் தூண்டிவிட்டு சரியான நாடகம் நடத்தியிருக்கிறது பா.ஜ.க. இலைக்கட்சியைச் சிதைத்து, ஆட்சியிலும் தோள் மீது உட்கார்ந்து தாங்கள் நினைத்தவை எல்லாம் சாதித்துக் கொள்ள முயல்கிறார்கள் பா.ஜ.கவினர், தமிழ்நாட்டில்.
தமிழ்நாட்டு மக்களிடம் கிராமம் கிராமமாக, திண்ணை தோறும் சென்று அமர்ந்து பரப்புரை செய்து, அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்லி, பா.ஜ.க.வின் துரோகங்களை எடுத்துச் சொன்னதால், தமிழ் நாட்டு மக்கள் தங்களைக் காக்கும் எஃகு கோட்டையென தி.மு.க வை ஆட்சியில் அமர்த்தினார்கள். எதிர்க்கட்சியானது அ.தி.மு.க. ஆனால் அவர்கள் எதிர்க்கட்சியாகக் கூடச் செயல்பட விடவில்லை.
எடப்பாடி கட்சியைக் காப்பாற்றவே பெரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறார். சசிகலா அம்மையார் ஏற்கனவே சோரம் போனவர்களை நம்பி மிஞ்சியதை அவிழ்க்கவும் துணிவின்றி இருக்கிறார். அமித்ஷாவை நோக்கியே அ.தி.மு.கவின் புள்ளிகள் நகர்வதைப் பார்க்க முடிகிறது.
இந்தியா முழுக்க கள்ள, மோசடி ஆட்டத்தில் சிறப்பான பயிற்சியும், மெச்சத்தகு தேர்ச்சியும் பெற்றிருந்தாலும் கூட, தமிழ்நாட்டில் அவ்வளவு இலகுவாக இவர்களின் கள்ள ஆட்டத்தை முடிக்க முடியாமல் உள்ளபடியே 7 ஆண்டுகளாகத் திணறுகிறது பா.ஜ.க. தொடர்ச்சியாக எத்தனை தலைவர்களை மாற்றினாலும் தமிழ் நாட்டில் பெரிய பாதிப்பையோ அல்லது வெற்றியையோ அடைய முடியாது என்று உணர்ந்தவர்கள் பா.ஜ.கவினர். தலைவர்கள் அவர்களுடைய தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்திக் கொள்கிறார்கள். நிர்மலா சீத்தாராமன் கட்சியைக் கெடுத்து விட்டதாகக் குற்றப்பத்திரிகை வாசித்ததற்கு கொஞ்சமும் நேர்மை மாறாமல், அண்ணாமலை சிறப்பாக சர்ச்சைகள் கிளப்பிக் கொண்டு, சொத்துகள் சேர்த்துக் கொண்டு இருந்திருக்கிறார். அதனால் தான் அவர்மீது எந்த அச்சமுமின்றி சென்ற ஒன்றிய தேர்தலில் எடப்பாடியாரே கூட்டணியை முறித்துக் கொண்டார். என்ன இருந்தாலும் கல்வியால் கொஞ்சம் சுயமரியாதையும் முதுகெலும்பும் பெற்றவர்கள் தானே அ.தி.மு.க.வினரும்.
இந்த முறை எப்படியும் அ.தி.மு.க வை ஒடுக்கி, அமைச்சரவையில் இடம் பிடித்து விட வேண்டும் அல்லது தனித்து எதிர்க் கட்சியாகவாவது வந்து விட வேண்டும் எனத் திட்டமிடுகிறது பா.ஜ.க.
அதற்காக அமித்ஷாவின் அடுத்த பட்டியலில் செங்கோட்டையன், டி.டி.வி. இன்னும் அந்தப் பட்டியலில் யார் யாரோ? எவ்வளவு பேரமோ? அண்ணாவின் பெயரைத் தாங்கிய அ.தி.மு.க. எனும் கட்சி காப்பாற்றப் பட வேண்டும். கட்சியில் சுயமரியாதையைத் தக்க வைத்துக்கொண்டு, அமைதியாக இன்னும் கட்சிக்கு உயிர்க்காற்று அளித்து வரும் மூத்தவர்கள் அதைச் செய்ய வேண்டும். அடுத்தத் தேர்தலில் ஒருவலுவான எதிர்க்கட்சியாக, 'பா.ஜ.க. முகமூடி' இல்லாத ஒரு திராவிடக் கட்சியாக வரவேண்டும் என்பதே தமிழ் நாட்டுத் திராவிட அரசியல் நோக்கர்களின் எண்ணம்! காத்திருப்போம்!
- சாரதாதேவி