"முதலமைச்சர் வேட்பாளரை (எடப்பாடியை) மாற்றினால் நாங்கள் ஆதரவளிப்போம்" என்கிறார் டி.டி.வி.தினகரன்.
"பழனிச்சாமி, கட்சிக்கு (அதிமுகவுக்கு) துரோகம் செய்து விட்டார்" இப்படிக் குற்றம் சாட்டுகிறார் ஓ.பன்னீர்செல்வம்.
"நான்தான் அதிமுகவின் பொதுச் செயலாளர்" இது சசிகலா.
"அதிமுகவை 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும்... ஒருங்கிணைத்தால் கட்சிக்கு நல்லது" என்று ஹரித்துவார் பக்கத்தில் அமித்ஷாவிடம் போய் முறையிட்டு வந்திருக்கிறார் செங்கோட்டையன்.
"அதிமுக இரண்டாகவோ, மூன்றாகவோ உடையவில்லை. திமுக தான் சலசலத்துள்ளது" பரப்புரையின்போது எடப்பாடியின் குரல் வாக்குமூலம் இது.
கட்சியை ஒன்றுபடுத்தி பலமாக்க வேண்டும் என்றால் அந்தக் கட்சித் தலைவர்கள் கூடிப் பேசுவது மரபு. அதை விட்டுவிட்டு, இரு ஆட்டுக் குட்டிகள் நரியிடம் நீதி கேட்டதுபோல, அதிமுக காரர்கள் பாஜகவிடம் கட்சியை ஒன்றுசேர்க்க முறையிட்டுக் கொண்டு இருக்கிறார்களாம்.
இதில் எடப்பாடியைத் தவிர ஏனைய நான்கு அதிமுகவும், நடிகர் விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்கப் போவதாக தகவல்கள் கசிகின்றன.
பனையூர் பண்ணையார் போல வாழும் நடிகர் விஜயின் கட்சி ஒரு சினிமா கம்பெனியைப் போலத்தான் இருக்கிறது. அவர் வார இறுதிநாள் 'சனிக்கிழமை அரசியல்வாதி' போலக் காட்சி தருகிறார்.
இதற்கிடையில், தொடர்ந்து திமுகவை விமர்சித்து வந்த அண்ணாமலை, திமுக கட்டுக்கோப்பாக பலமாக இருக்கிறது என்று திடீரெனப் பேசியிருக்கிறார்.
இங்கேதான் அதிமுக குறித்து திருமூலரின் பாடலொன்று நினைவுக்கு வருகிறது:
"குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடும் குழிவிழு மாறே"