பாஜகவின் அரசியல் 'சாணக்கியர்', 'ராஜதந்திரி' என்றெல்லாம் சொல்லப்பட்ட அமித்ஷா தமிழகம் வருகிறார் என்றால், சும்மாவா? தொகுதிகளின் பங்கீடு முடிந்துவிடும், யார் யாருக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்றெல்லாம் முடிவுக்கு வந்துவிடும் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார்கள் என்டிஏ வின் அதிமுக-பாஜக கூட்டணியினர்.

அமித்ஷாவும் தன் அதிகாரத்தைச் செலுத்தி எடப்பாடி பழனிச்சாமியைத் தன் கிடுக்கிப் பிடியில் கொண்டுவந்து 50 தொகுதிகளை பாஜகவுக்கு வாங்கிவிட்டுத்தான் டில்லி திரும்ப வேண்டும் என்றுதான் அமித்ஷாவும் வந்திருப்பார்.

ஆனால் என்ன செய்ய? பெய்த மழையில் கோலம் அழிந்துவிட்டது. வந்தவேகத்தில் திரும்பிவிட்டார் அமித்ஷா. அப்படியானால் என்ன நடந்தது?

தேர்தலுக்கு இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் தொகுதி உடன்பாடு செய்ய வேண்டிய எடப்பாடி, அமித்ஷாவைச் சந்திக்கவோ, பேசவோ மறுத்து விட்டார்.

பாஜகவுக்கு 50 தொகுதிகள் கொடுத்தாக வேண்டும். அதில் அதிமுக செல்வாக்குள்ள தொகுதிகளும் அடங்கும். பிறரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரைக் கூட்டணியில் கொண்டுவர வேண்டும். தேமுதிக, பாமக போன்ற கட்சிகளுடன் சில (உதிரிக்) கட்சிகளையும் என்டிஏ கூட்டணிக்குள் கொண்டுவந்து இதைமெகா கூட்டணியாகக் காட்ட வேண்டும் போன்ற நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளைப் போட்டால் எடப்பாடிக்குக் கோபம் வராதா என்ன? அதுதான் எடப்பாடி அமித்ஷாவைப் புறக்கணித்து வேலுமணியை அனுப்பி விட்டார். வேலுமணியிடம் என்ன பேச? அவரைத் திருப்பி அனுப்பிவிட்டு டில்லிக்குப் புறப்பட்டார் அமித்ஷா!

டி.டி.வி.தினகரன் திமுகவைவிட எடப்பாடியைத்தான் முதல் எதிரியாகக் கருதுகிறார். ஒபிஎஸ் கடிகாரத்தின் பென்டுலமா இருக்கிறாரே ஒழிய வேறொன்றும் அவரால் முடியவில்லை. தைலாவரத்தில் இன்னும் சமாதானத்தின் அறிகுறி தெரியவில்லை. தேமுதிக தடுமாறிக் கொண்டு இருக்கிறது, எந்தப்பக்கம் போகலாம் என்று. ஆனால் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி அன்று தொடங்கி இன்றுவரையும் உறுதியாகக் இருக்கிறார்கள்.

புதுக்கோட்டையில் அமித்ஷா சொல்கிறார், "மோடியின் ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்.. என்டிஏ கூட்டணி பெரும்பான்மையுடன் இங்கு ஆட்சியமைக்கும்".

எடப்பாடி சொல்கிறார், "அதிமுக 200 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்".

மக்கள் என்ன சொல்கிறார்கள், "தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தொடர்கிறார், தொடர்ந்து கொண்டுதான் இருப்பார், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!".

- கருஞ்சட்டைத் தமிழர்