கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவையே மோடி அரசு என்பதைத் தற்போது நடக்கும் நிகழ்வுகள் மெய்ப்பித்து வருகின்றன. இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடி கடனாகப் பெற்று, லண்டனுக்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையா, நாட்டை விட்டு வெளியேறும் முன்னர் நிதியமைச்சர் அருண் ஜெட்லியைச் சந்தித்ததாக லண்டன் நீதிமன்றத்திலேயே கூறியுள்ளது, அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

modi and vijay mallayaஇருவரது சந்திப்பை நேரில் பார்த்ததாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் பி.எல்.புனியா கூறியிருப்பதோடு, நாடாளுமன்ற சிசிடிவி கேமராக்களில் இச்சந்திப்பு பதிவாகியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பை அருண் ஜேட்லி மறுத்திருக்கும் நிலையில், பாஜகவின் சுப்பிரமணிய சாமியோ மல்லையா அருண் ஜேட்லியை சந்தித்துப் பேசியதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரான துஷ்யந்த் தவே, மல்லையா தப்பிச் செல்வதற்கு நான்கு நாட்களுக்கு முன்னரே அவரைத் தடுக்க உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு எஸ்.பி.ஐ. வங்கிக்கு அறிவுறுத்தியதாகவும், அந்த அறிவுரையை எஸ்.பி.ஐ. வங்கி புறந்தள்ளியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மல்லையா-ஜெட்லி சந்திப்பு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

நிதி அமைச்சருக்கும், மல்லையாவுக்கும் நடந்த சந்திப்பின் ரகசியம் என்ன?

நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மல்லையா உள்துறை அமைச்சகத்தின் அனுமதி இன்றி வெளிநாடு செல்ல இயலாது. அவ்வாறிருக்க அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டதன் பின்னணி என்ன?

முதலில் மல்லையாவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த சி. பி. ஐ - இன் Look out notice - இல் “கைது” (detain) என்றிருந்தது, “தகவல் தெரிவித்தால் போதுமானது” (inform) என்பதாக நீர்த்துப் போகச் செய்ததன் காரணம் என்ன? பிரதமர் ஒப்புதல் இல்லாமல் இவ்வாறு நடக்க இயலுமா?

மல்லையா குறித்து சி.பி.ஐ. அல்லது அமலாக்கத் துறைக்கு (ED) நிதியமைச்சர் தகவல் தெரிவிக்காதது ஏன்?

இக்கேள்விகளுக்குப் பதில் சொல்லும் தார்மீகப் பொறுப்பு நடுவண் அரசுக்கு உள்ளது. தன் மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்கு நேர்மையான விளக்கம் அளிக்க இயலாத நிலையில், அருண் ஜேட்லி நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகி, விசாரணையை எதிர்கொள்வதே அரசின் மீது உள்ள நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும்.    

நாட்டு மக்களுக்கு முன்னால் அம்பலப்பட்டு நிற்கிறது மோடி அரசு. ஏழைத் தாயின் மகன் என்ன பதில் சொல்கிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.  

Pin It