நமது நாட்டில், மற்ற சமூகங்களை நசுக்கித் தாமே தலைமைப் பதவியில் இருக்க வேண்டும் என்னும் கருத்துடைய பார்ப்பன சமூகத்தின் கையில் கல்வி அகப்பட்டுக் கொண்டிருக்கிறது.

-- தந்தை பெரியார் (விடுதலை 17.05.1941)

anitha neetஆதிக்கத் திமிர் கொண்ட மத்திய அரசும், அடிமைத்தனமே அரிச்சுவடியாகக் கொண்ட மாநில அரசும் இணைந்து சமூக நீதியைப் படுகொலை செய்த நாள் இன்று. ஆம்! இன்று சகோதரி அனிதாவின் நினைவு நாள்! (01.09.2017).

 காலகாலமாகத் திராவிட இயக்கத்தால் சீரிய முறையில் கட்டமைக்கப்பட்ட தமிழ்நாட்டின் மருத்துவ அமைப்பின் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதலே நீட் தேர்வு. கல்வியில் தரத்தைக் கொண்டு வருகிறோம் என்ற பெயரினால் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வால் எத்தனை எத்தனை குளறுபடிகள், அலைக்கழிப்புகள், உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பதைத் தமிழ்நாடே அறியும். அரசுப் பள்ளிகளிலும், கிராமப் புறங்களிலும் பயிலும் மாணவர்களுக்குச் சமவாய்ப்பினை மறுக்கும் காரணத்தாலேயே, 2006 ஆம் ஆண்டு தி.மு.க. அரசால் முனைவர் அனந்தகிருஷ்ணன் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் நுழைவுத் தேர்வு தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டது. தரத்தை கொண்டு வருவதல்ல, சமத்துவத்தைத் தகர்க்க வந்ததே நீட் தேர்வு என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தனியார் பயிற்சி மையங்களின் பெயரால் கார்ப்பரேட் முதலாளிகளைக் கொழுக்க வைக்கவும், சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கான சமூகநீதியை மறுக்கவும் ஏற்படுத்தப்பட்ட நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும். இது இடைக்காலத் தீர்வு மட்டுமே. எனினும், கல்வியை அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்றுவதே இதற்கான இறுதியான தீர்வாகும்.

மாநிலங்களின் சுயாட்சி என்பதற்கான பொருள் என்னவென்றால், கல்வி, சுகாதாரம் முதலிய சேவைகளை ஒவ்வொரு மாநிலமும் தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு தனது குடிகளுக்கு வழங்குவதாகும் என்கிறார் அம்பேத்கர். (டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும், தொகுதி 1, ப. 340).

அறிஞர் அண்ணாவின் “மாநில சுயாட்சி” முழக்கம், தி. மு. கழகத்தால் முன்னெடுக்கப்பட்டு இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். மாநில உரிமைகள் தொடர்ந்து நடுவண் அரசால் பறிக்கப்படுவதைத் தடுக்க மாநில அரசுகள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அப்போது தான் உண்மையான கூட்டாட்சி முறை இந்தியாவில் ஏற்படுத்தப்படும்.

Pin It