அண்மையில் கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த அகிலன் என்னும் 15 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்டு இறந்து போயிருக்கிறான்!
"மாட்டுக்கறி சாப்பிடுகிறவனா நீ?" என்று ஆசிரியர் வகுப்பறையில் கேட்க, ஆம் என்று அவன் சொன்னதும், மற்ற மாணவர்கள் சிரிக்க, மனம் உடைந்து போன அகிலன் தன் வீட்டிலேயே தூக்குப் போட்டுக் கொண்டு இறந்திருக்கிறான்!
ஆம், மாட்டுக்கறி தான் உண்கிறேன், அதில் என்ன குற்றம் அல்லது இழிவு என்று திருப்பிக் கேட்கிற அளவுக்கு அந்தச் சிறுவனுக்கு போதுமான வயதும், துணிவும் இல்லை!
அவன் இறந்த பிறகு, கடந்த 23 ஆம் தேதி அவன் பெற்றோர்களும், முற்போக்கு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் சிலரும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்!
இனிமேல் தங்கள் மகன் திரும்பக் கிடைக்க மாட்டான் என்பது உறுதி என்றாலும், நீதியாவது கிடைக்குமா என்று பெற்றோர்கள் அல்லல் படுகின்றனர்! பீளமேடு பகுதியில் உள்ள கே.கே நாயுடு பள்ளியைச் சேர்ந்த அந்த ஆசிரியரும், அதற்குப் பொறுப்பான மற்றவர்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட்டால்தான், இனி மற்றவர்களுக்கு ஒரு சிறு அச்சமாவது ஏற்படும்!
ஆனால் தமிழ்நாடு அரசு செயலற்று நிற்கிறது! அனைத்துக் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனத்தைத் தெரிவித்த பிறகும், பெரிதாக அங்கு எந்த அசைவும் ஏற்படவில்லை!
சாதியை மறுத்து, காதல் திருமணம் செய்து கொள்ளும் இளம்பிள்ளைகள் ஆங்காங்கு வெட்டிக் கொல்லப்படும் கொடூரத்தை நாம் பார்க்கிறோம்! அதனை ஆணவப் படுகொலை என்கிறோம்.
கொன்றால் மட்டுமே அதற்குக் கொலை என்று பெயர் இல்லை! தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுவதும் அதற்கு நிகரானதுதான்!
எனவே இவை போன்ற பரிதாபத் தற்கொலைகளையும், ஆணவப் படுகொலைகளாகவே கருதி, அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!
- சுப.வீரபாண்டியன்