இட்லர்தான் முன்னெடுத்த இனவழிப்பால் தப்பிவந்தார்
இங்கிலாந்தால் பாலத்தீன் நாட்டினிலே குடியமர்த்தி
விட்டதனால் உருவான இசுரேலாம் நாடன்று
விரட்டியடித் ததுவாமுள் ளூர்பாலத் தீனியரை !
ஒட்டகந்தான் கூடாரம் நுழைந்தகதை ஆனதுவாம் !
உள்ளூரில் பாலத்தீ னரபுமக்கள் நாடிழந்தார் !
வெட்டவெளிச் சிறைச்சாலை மேற்கரையில் காசாவில்
வெறிகொண்ட விசுரேலால் விலங்குகள்போல் வாழலுற்றார்!

அடிமைகளை ஒடுக்கிடவே அரசவிழ்க்கும் வன்முறையை
அமெரிக்கா ஏகாதி பத்தியத்தார் கண்டுகொள்ளார் !
அடிமையல்லார் சியோனிசத்தை எதிர்த்துத்தான் கிளர்ந்தெழுந்தால்
அவரெல்லாம் அச்சுறுத்தும் பயங்கரத்தின் வாதியென்பார் !
குடிகெடுப்பார் ஊதுகுழல் கூக்குரலைக் கேட்கின்றோம்
கொடிபிடிப்பார் போர்க்குரலில் கோட்டைகளை எச்சரிப்போம் !
வெடிசுமக்கும் கப்பலெல்லாம் விடுதலையைத் தடுத்திடுமோ ?
விளங்காத வீணரிவர் வரலாற்றை அறிவாரோ ?

ஆக்கிரமிப் பாளன் நீ ! இசுரேலே வெளியேறு !
ஆக்கமுடன் யூதயினத் தொழிலாளர் அரபுமக்கள்
ஊக்கமுடன் ஓரணியில் கொள்கையிலே ஒன்றுபட்டால்
ஓயாமல் தொல்லைதரும் சியோனிச வரசுவீழும் !
கூக்குரலாய் மத்தியத்துக் கிழக்கினிலே எழுந்துவரும்
கோரிக்கை சோசலிசக் குடியரசாய் மலர்ச்சியுறும் !
தீக்குணத்தால் இசுரேலும் அரபுமுத லாளியமும்
தீட்டுகின்ற நரித்தனத்தைத் தோலுரித்துக் காட்டிவிடும் !

- சோ.ஆற்றலரசு

Pin It