ஆந்திராவின் துணை முதலமைச்சர் பவன் கல்யாண், தன்னை ஒரு சர்வாதிகாரி போலக் கருதிக் கொண்டு இந்தியாவிலே இருக்கிற எல்லோரையும் மிரட்டுகிறார். சனாதனம் பற்றிப் பேசுவதற்கு முன்னால் ஆயிரம் முறை யோசிங்கள் என்கிறார். சனாதனத்தை அழிப்பேன் என்று யாராவது சொன்னால், அவர்கள் அழிந்து போவார்கள் என்று வேறு அச்சுறுத்துகிறார்.

pavan kalyan 376அவர் மறைமுகமாக - இல்லை யில்லை, நேரடியாகவே யாரைச் சொல்கிறார் என்பது எல்லோருக்கும் புரிகிறது. சனாதனம் ஒரு கொசுவைப் போல, டெங்குவைப் போல - அதனை ஒழிக்க வேண்டும் என்று சொன்ன தமிழ்நாட்டின் இன்றைய துணை முதலமைச்சர் உதயநிதியைத்தான் அவர் மிரட்டுகிறார் என்பது புரிகிறது. இந்தச் சலசலப்புக்கு எல்லாம் ஒரு நாளும் அஞ்சுகிறவர் இல்லை உதயநிதி!

மிக நிதானமாக, சிரித்த முகத்தோடு, "அப்படியா.... பொறுத்திருந்து பார்க்கலாம்!" என்று விடை கூறி இருக்கிறார், நம் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர்!

சனாதனத்தைப் பற்றி யாரும், எதுவும் பேசவே கூடாது என்று மிரட்டும் பவன் கல்யாண் ஆனாலும் சரி, மற்றவர்கள் ஆனாலும் சரி, இன்று வரையில் சனாதனம் என்றால் என்ன என்னும் ரகசியத்தை மட்டும் சொல்லவே இல்லை! அது பற்றிய விளக்கம் எந்தப் புத்தகத்தில் இருக்கிறது, இந்து மதம், வருணாசிரமம், சனாதனம், அனாதி மதம் இவைகளுக்கு இடையில் எல்லாம் என்ன வேறுபாடு இருக்கிறது என்பதைப் பவன் கல்யாண் சொல்ல வேண்டும்!

1905 ஆம் ஆண்டு பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும், 1926 ஆம் ஆண்டு ரெங்கசாமி ஐயங்கார் ஆகியோர் சனாதனம் பற்றி விளக்கியுள்ளனர். இரண்டிலும் சனாதனம் என்பது வர்ணாசிரமம் என்பதற்கு மிக நெருக்கமான இடத்தில்தான் இருக்கிறது!

வருணாசிரமம் என்றால் என்ன என்று நாம் அறிவோம். அந்தச் சொல்லின் வேராக இருக்கும் வருணம் என்பது மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில், மேல், கீழ் என்று பிரிப்பது. வருண அடிப்படையில்தான் ஒருவன் பிராமணன் என்றும், இன்னொருவன் சூத்திரன், பஞ்சமன் என்றும் சொல்லப்படுகிறான். காலகாலத்திற்கும் மாறாத இந்த இழிவை வருணாசிரமம்தான் நம் மீது திணிக்கிறது. அதை நாம் ஏன் ஏற்க வேண்டும்?

எதிர்ப்போம்! எந்தக் கோட்பாடு நம்மை இழிவு படுத்துகிறதோ, அதைச் சாகும் வரை எதிர்ப்போம்! வருணாசிரமத்தை எதிர்ப்பவர்கள் அழிந்து போவார்கள் என்று பவன் கல்யாண் சொன்னால், அதற்கு ஒரே ஒரு விடைதான் இருக்கிறது. அது நம் உதயநிதி சொல்லி இருக்கிற, "பொறுத்திருந்து பார்ப்போம்!" என்பதுதான்!

- சுப.வீரபாண்டியன்