இந்திய ஒன்றியம் என்பது மதச்சார்பற்ற நாடு என்பதை நேர்மையுள்ள அனைவரும் ஏற்றுக் கொள்வர்.

இங்கு பல்வேறு மொழிகள், இனங்கள், பண்பாட்டுக் கூறுகள், வெவ்வேறு மதம் சார்ந்தவர்கள் வாழ்கின்றனர். என்றாலும், மதவேறுபாடுகளைக் கடந்து இணக்கமுடன் அவர்கள் வாழ்ந்து வருன்றனர். இதனைச் சீர்குலைக்கும் சக்திகளும் இல்லாமல், இல்லை.

அனைத்துத் தரப்பு மக்கள் வரிப்பணத்தில் இயங்கி வரும் அரசு அலுவலகங்கள் மத வேறுபாடுகளைக் கடந்ததாக இருக்க வேண்டும்.

ஆனால் நிலைமை அப்படி இருப்பதாகத் தெரியவில்லை.

29-04-1968ஆம் நாளிட்ட தமிழக அரசின் அரசாணையின் படி, அரசு அலுவலகங்களில் எந்தவொரு மதத்தைச் சேர்ந்த கடவுள்களின் படங்களோ, சிலைகளோ, மத நடவடிக்கைகளோ இருக்கக் கூடாது என்று அன்றைய தலைமைச் செயலாளர் பெயரால் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஆணை இருந்தாலும், அது முறையாக நடைமுறைக்கு வரவில்லை என்றே தெரிகிறது.

கடவுள் படங்களுடன், ஆயுத பூசை உள்ளிட்ட இந்து வழிபாட்டுப் பூசைகள் அங்கு நடைபெற்று வருகின்றன.

இது போன்ற செயல்பாடுகள் மதச்சார்பின்மைக்கு ஊறு விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை.

 எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும் இவை போன்றவைகளைக் களையெடுப்பது அவசியமாகும்.

குறிப்பாக அரசு அதிகாரிகள் இதனைக் கவனத்தில் கொண்டு, நடவடிக்கைகளை எடுத்து, இது மதச்சார்பின்மை நாடு என்பதை உறுதி செய்ய வேண்டும்.