"மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்லெனும் சொல்"

என்ற குறளுக்கு நல்ல எடுத்துக்காட்டாய் விளங்கிக் கொண்டு இருக்கிறார் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.

அவருக்கு மென்மையான உள்ளம், ஆனால் துணிச்சலான கொள்கைப் பிடிப்பாளர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாடு ஒன்றில், 

"சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும்" என்று பேசினார்.

இந்தத் துணிச்சலான கொள்கைப் பிடிப்புமிக்க பேச்சு வட இந்தியக் காவிகளின் காதுகளில் நெருப்பாகத் தெறித்தது. இந்திய ஒன்றியம் முழுவதும் பேசப்படும் தலைவராக்கி விட்டது ஒரே நாளில் இப்பேச்சு.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ஒரு செங்கலைத் தூக்கிப் பிடித்து மக்கள் மத்தியில் சென்று பாஜகவைக் கதிகலக்கியது இவரின் தேர்தல் அரசியல். தலைவர் கலைஞர் அவர்களின் சாணக்கியத்தை இவரிடம் பார்க்கலாம்.

திமுகழக இளைஞர் அணியில் தொடங்கிய இவரின் அரசியல் பயணம், இன்று துணை முதலமைச்சர் வரை வந்துவிட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் தன் வாழ்த்துச் செய்தியில் "கொள்கைப் பற்றோடு உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! இளைஞரணி செயலாளராக, விளையாட்டுத் துறை அமைச்சராக, துணை முதல் அமைச்சராக நீ ஆற்றிவரும் பணிகளை மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன்!" என்று உள்ளம் பூரித்துச் சொல்கிறார்.

"தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்"

அவர்தான் தந்தை ஸ்டாலின். நாமும் நம் வாழ்த்துகளைத் தெரிவிப்போம்!

- கருஞ்சட்டைத் தமிழர்