மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தேசிய அளவில் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்மையில் வெளியிட்டது. அதில் முதல் நூறு இடங்களில் இருபதுக்கும் மேற்பட்டவை தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரிகள். முதல் இடத்தை IIT சென்னையும், எட்டாம் இடத்தை அண்ணா பல்கலைக்கழகமும் பிடித்தன. ஆனால் இது சிலருக்குப் பிடிக்கவில்லை.

surappa anna universityகற்றோர் ஏத்தும் தமிழகக் கல்விக் கட்டுமானத்தைச் சீர் குலைப்பதற்கான முயற்சிகள் மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த நாள் முதல் எடுக்கப்பட்டு வருகின்றன. மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வின் மூலம் முட்டுக்கட்டை போடப்பட்டது. பொறியியல் கல்வியையும் பொடிப் பொடியாக்குவதற்குப் பொருந்தாத ஒருவரைத் துணை வேந்தராக நியமனம் செய்தனர்.

பா.ஜ.க வினர் நியமிக்கும் ஆளுநர்களும், ஆளுநர்கள் நியமிக்கும் துணை வேந்தர்களும் குழப்பம் விளைவிப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதில்லை. எல்லா நாடுகளிலும் ஒரு அமைப்பை வலுப்படுத்துவதற்கு ஏற்ற தகுதிவாய்ந்த அறிஞர்களைப் பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பின் தேர்வு செய்வர். ஆனால் இங்கு மட்டும் தான் நன்றாகச் செயல்பட்டு வரும் ஒரு அமைப்பைச் சீர்குலைப்பதற்கு தகுதிவாய்ந்தவர்களைப் பல நாள் தேடலுக்குப் பின் தேர்வு செய்கின்றனர்.

நாடு போற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சென்ற ஆண்டு கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்தார். இந்த நியமனத்தில் நடந்த முறைகேடுகளை அன்றைக்கே “கருஞ்சட்டைத் தமிழர்” இதழில் எழுதியிருந்தோம். குழப்பங்களை விளைவிப்பதற்காக நியமிக்கப்பட்டவர், அவர் பணியைச் சரியாகச் செய்கிறார். இந்த ஓராண்டில் பல முறை அண்ணா பல்கலைக்கழகம் சர்ச்சைகளைச் சந்தித்தது. இப்போது மீண்டும் ஒரு குழப்பம்.

“தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் துணைக் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளை மட்டும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும்” என்று பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்தார். துணை வேந்தர் சூரப்பாவின் ஆணைப்படி இந்த அறிவிப்பு வெளியானது. இது நுழைவுத்தேர்வு அறிவிக்கையை எதிர்பார்த்திருந்த பொறியியல் பட்டதாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்புப் பல்வேறு தரப்பாலும் கண்டிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேருவதற்காக தமிழ்நாடு பொதுநுழைவுத் தேர்வு (TANCET) என்ற பெயரில் அண்ணா பல்கலைக்கழகம் நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. ஆனால் இந்த ஆண்டு அண்ணா பல்கலைகழகத்திற்கு மட்டும் AUCET என்ற பெயரில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனால் மற்ற கல்லூரிகளில் முதுநிலைப்பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் தனியாக இன்னொரு நுழைவுத் தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டது. இது பொறியியல் பட்டதாரிகள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

தற்போது இந்த முடிவு மாற்றிக் கொள்ளப்பட்டு, வழக்கம் போல் TANCET நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது.

நாம் நுழைவுத் தேர்வே கூடாது என்று குரல் கொடுக்கிறோம். ஆனால் அவர்கள் இருக்கிற வழக்கத்தையே மாற்றிப் பல நுழைவுத் தேர்வுகளை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

எப்படியாவது தமிழக உயர்கல்வி வளர்ச்சியை வீழ்த்திட நினைக்கிறார்கள். அதற்காக முதலில் குழப்பமான முடிவுகளை அறிவித்து எதிர்வினை எப்படி இருக்கிறது என்று பார்ப்பது. எதிர்வினை அவர்களுக்குப் பாதகமாக அமையும் பட்சத்தில் உடனே அதனைத் திரும்பப் பெறுவது.

மே மாதம் வந்தால் மாணவர்களுக்குக் கோடை விடுமுறை வருகிறதோ இல்லையோ, இவர்கள் கொடுக்கும் குடைச்சல் தவறாமல் வருகிறது.

Pin It