அ.ரமேஷ், திண்டிவனம்
பி.ஜே.பி.யின் உள்கட்சி விவகாரம் ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கு ஏன் போகிறது?

அது உண்மையில் ஆர்.எஸ்.எஸ். என்கிற வெளிக்கட்சி விவகாரம் என்பதால்தான்.

ம.அன்பரசன், விருதுநகர்
இன்றைய திரைப்படப் பாடல்களை எழுத்து வடிவில் வைத்துப் பார்த்தால் அவற்றுக்கு இலக்கியத் தகுதி உண்டா?

அண்மையில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கவிஞர் வைரமுத்து கூறியது - "கண்ணதாசன் கொடுத்து வைத்தவர். அவருக்கு தமிழ் சினிமா தாலாட்டு, தத்துவம், தாய்ப்பாசம் என்று பலதையும் கொடுத்தது எனக்கோ காதல், காதல், காதல் என்று அதை மட்டுமே கொடுத்தது. 'சிவப்பு மல்லி' போன்ற ஒரு சில படங்களில்தான் இடதுசாரிச் சிந்தனைகளைத் தர முடிந்தது". இருப்பது எல்லாம் காதல் என்றால் எத்தனையைத்தான் எழுதிவைத்து எடை போடுவது?

பொன்விழி, அன்னூர்
சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியப் பணம் மீண்டும் கிடைக்குமா?

அறுபது லட்சம் கோடி ரூபாய் என்கிறார்கள். இந்திய அரசின் ஆண்டு பட்ஜெட்டைவிட எத்தனையோ மடங்கு அதிகம். சுவிஸ் நாட்டு வங்கிகளின் கூட்டமைப்பு என்று ஒன்று இருக்கிறது. "வாடிக்கையாளர் பற்றிய விபரங்களைத் தருவது எங்களுஸக வாழ்க்கை இல்லை" என்று அது பளிச்சென்று சொல்லிவிட்டது. பனிமழை பொழியும் அந்த வெள்ளைநாட்டின் உள்விவகாரம் எல்லாம் கருப்புத்தான். உலகப் போலீஸ்காரன் போல பிற நாடுகளை மிரட்டும் அமெரிக்கா இந்த ஸ்விட்சர்லாந்தை மட்டும் ஏதும் சொல்வதில்லை, கவனித்தீர்களா? கருப்புப் பணப் பொருளாதாரம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஏற்றதே.

ரஜினியின் ஒவ்வொரு பட வரவிற்கு முன்பும் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி பரப்பப்படுவது ஏன்?

அதுவொரு வியாபார உத்தி. அரசியல் ஆசை உள்ள சினிமா ரசிகர்களைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் தந்திரம். விஜய்யும் இதே பாதையில் பயணப்பட்டிருக்கிறார். புதிய விஷயம் என்னவென்றால் ராகுல்காந்தி இதில் ஏமாந்து போனது. தந்திரத்தில் உயர்ந்தவர்கள் சினிமா நாயகர்களா, அரசியல் வாரிசுகளா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.

ப.சிவகுமார், பிரபு, திருப்பூர்-6
சமீபத்தில் நீங்கள் ரசித்துப் படித்து வியந்த புத்தகம் எது?

மதுரைப் புத்தகக் கண்காட்சியில் கிறிஸ்டோப் ஜபர்லோ எழுதிய "இந்தியாவின் மவுனப் புரட்சி - வட இந்திய அரசியலில் கீழ் சாதியினரின் ஏற்றம்" நூலை வாங்கினேன். இந்து அரசியல் இயக்கம் பற்றிய அவரது முந்தைய நூலை ஏற்கெனவே படித்திருக்கிறேன். பாரிசில் உள்ள ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் இவர். இந்தியாவின் சாதி - மத விவகாரங்களில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர். இந்த விவகாரங்களில் வெளிநாட்டுக்காரர்கள் ஆரம்பம் முதலே ஈடுபாடு காட்டி வந்திருக்கிறார்கள். அது பெரிய கதை. இது விஷயங்களில் அண்மைக்கால நடப்பு பற்றி ஆராய்ந்ததில் இவர் முக்கியமானவர். காங்கிரஸ் மற்றும் பிஜேபியில் நிலவும் உயர்சாதியினரின் ஆதிக்கம் பற்றி மட்டுமல்லாது, சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தோற்றம் - வளர்ச்சி பற்றியும் இந்த நூல் பேசுகிறது. இவை பற்றிய விவரங்கள் ஒருபுறமிருக்க, தரப்படும் சில முடிவுகள் அசைபோடத் தக்கவை. "உயர்சாதி மேல் தட்டினரிடமிருந்து அதிகாரமானது பல்வேறு விளிம்புநிலைக்குழுக்களுக்கு கைமாறிக் கொண்டிருக்கிறது. அனேகமாக சமாதானபூர்வமாகவே" இதுவொரு கணிப்பு.

கூடவே இன்னொன்றும் வருகிறது- "அரசியல் அரங்கிலும் நிர்வாகத்திலும் உயர்சாதியினர் தங்களது பிடியை இழந்து வந்தாலும், மண்டல்குழு அறிக்கையை அமுல்படுத்திய போதே நடந்து வந்த பொருளாதாரத் தாராளமயமானது தனியார் துறையில் உயர் சாதியினருக்குப் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது. எனவே, அதிகார வர்க்கத் துறையில் தங்களுக்குள்ள வழமையான ஏகபோகத்திற்கு சவால்விடப்படுவது கண்டு அவர்கள் வருத்தப்படப் போவதில்லை. "இந்த இரண்டு கணிப்புகளும் உண்மை போலவும், இன்னும் யோசித்துப் பார்த்தால் முரண் போலவும் படுகிறது. எப்படியோ, தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்பது போன்ற கோரிக்கை எழுவதன் வரலாற்றுப் பின்புலம் புரிபடுகிறது.

"திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன. எனவே திருமணங்கள் தேவையில்லை" (ஆனந்த விகடன் 9-9-09) என்கிற கமல்ஹாசனின் கருத்து சரிதானா?

தன்னை வைத்து உலகை அளக்கக்கூடாது. ஒரு தனிமனிதருக்கு திருமணம் தோல்வியாக முடிந்திருக்கக்கூடும். ஆனால், சகலருக்கும் இல்லையே? மேற்கத்திய நாடுகளுக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கும் உள்ள ஒரு முக்கியமான வேறுபாடு இங்கே சேமிப்புப் பழக்கம் இருப்பது. இதற்கு குடும்பத்தவர் மீதுள்ள பற்று முக்கியமான காரணம். நாட்டுப் பொருளாதாரத்திற்கே உதவியாக இருக்கும் திருமண முறை. குழந்தைகளுக்கு மிகப்பெரும் சமூகப் பாதுகாப்பு மையமாக இருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. இன்னொரு விஷயம். திருமணமுறை தேவையில்லை என்பவர்கள் அதற்கான மாற்றைச் சொல்வதில்லை. உண்மை என்னவென்றால் திருமணத்திற்கு மாற்று அதையும் விட உன்னதமான உறவு முறையாகவே இருக்க முடியும். அதை நோக்கிய பயணத்தில் இப்போது வேண்டப்படுவது ஜனநாயகக் குடும்பம். குழந்தைகளுக்காகப் பெற்றோர்கள் செய்யும் தியாகமாகக் குடும்பம் இருந்தால் நல்லது. இப்போதோ தாய் மட்டுமே தியாகம் செய்பவராக இருக்கிறார்; தந்தை யஜமானன் பொறுப்பை ஏற்றிருக்கிறார். இத்தகைய திருமணங்கள் தோல்வியில் முடிவதில் ஆச்சரியம் இல்லை. இது ஒருபுறமிருக்க, தனது கலைவாழ்வின் பொன்விழாவைக் கொண்டாடும் கமலை மனப்பூர்வமாகப் பாராட்டுவோம். விதவிதமான கெட்-அப்புகளில் கவனம் செலுத்துவதைவிட "மகாநதி" போன்ற வாழ்வின் யதார்த்தங்களை வெளிப்படுத்திய படங்களில் கவனம் செலுத்தி புதுப்புது வெற்றிகளை ஈட்டட்டும் என்று வாழ்த்துவோம்.

த.சத்தியநாராயணன், அயன்புரம்
நரேந்திர மோடி மீது போலி - என் கவுண்டர் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதே...?

சின்ன வயது மகள். அவளை அநியாயமாகச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் மோடியின் போலீசார். அவள் புரிந்த ஒரே "குற்றம்" அவள் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவள் என்பது! அந்தச் சமூகத்தைச் சார்ந்தவர்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்திச் சுட்டுக் கொன்றால் முதலமைச்சர் மோடியின் அபிமானத்தைப் பெறலாம் என்றே இந்தக் கொடூரத்தைச் செய்திருக்கிறார்கள். இப்படித் திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறது விசாரணை அறிக்கை. மோடியோ இதுபற்றி சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை. போலி - என்கவுண்டர் எனக் கண்டறிந்து சொன்ன இந்த விசாரணை அறிக்கையை போலி எனச் சொல்லி ஒதுக்கிவிட்டார் புண்ணியவாளர். விசாரணை அறிக்கை வெளிவந்ததும் "மோடி ராஜினாமா செய்ய வேண்டும்" என்று காங்கிரஸ் அறிக்கைவிட்டது. இவர்கள் அறிக்கை விட்டதும் ராஜினாமா செய்து விடுவாரா என்ன? அவ்வளவுதான். இப்போது பேச்சைக் காணோம். ஊடகங்களுக்கும் வேறு எத்தனையோ செய்தித் தீனிகள். இழந்த அந்த உயிர் மறந்த உயிர். ஐநூறு ஆண்டுப் பழமையான பாபர் மசூதியை இடித்தவரையே இந்த நாட்டின் உள்துறை அமைச்சராக ஆக்கி அழகு பார்த்த நாடு இது! இதெல்லாம் எம்மட்டு...?

ரா.தட்சிணாமூர்த்தி, கடலூர்
இந்தியாவில் இனி மார்க்சிசம் எடுபடாது எனக் கூறும் அறிவு ஜீவிகளுக்குத் தங்கள் பதில் என்ன?

மார்க்சிசம் எடுபடாது எனக்கூறும் அந்த அறிவுஜீவிகள் வேறு எந்த இசம் எடுபடும் என்கிறார்கள்? விஷயம் என்னவென்றால் இவர்களுக்கு எந்த மாற்று இசத்திலும் நம்பிக்கை இல்லை. இருக்கிற கேபிடலிசம் காலங்காலத்திற்கும் தொடரும் என்கிற மிதப்பில் இருக்கிறார்கள். இவர்கள் போற்றுகிற கேப்டலிசம் நேற்று இருந்ததில்லை. அப்படியெனில் இன்றிருப்பது நாளை இருக்காது எனும் எளிய உண்மை கூட இவர்களுக்கு உறைக்கவில்லை. சமுதாய மாற்றம் எப்படி நடக்கிறது என்கிற மகத்தான உண்மையைக் கண்டறிந்து சொன்னது மார்க்சிசமே. அது இந்தியாவுக்குப் பொருந்தாது என்றால் இங்கேயிருப்பவர்கள் மனிதர்கள் அல்ல, வேறு ஏதோ ஜந்துக்கள்  எனச் சொல்வதாகிவிடும். அந்த அவமானம் நமக்கெதற்கு? உலகின் இயக்கத்தை வரலாற்றுக் கண்கொண்டு பாருங்கள். மார்க்சிசம் அங்கிருந்து மீண்டும் மீண்டும் புதிதாய்ப் பிறப்பதை உணருவீர்கள்.

Pin It