பதவியேற்ற சில நாட்களிலேயே நடந்த சூலூர் சிறுமி கொடூரக் கொலை, த.வெ.க அரசின் நிர்வாகக் கட்டமைப்பின் தளர்வைக் காட்டுகிறது. "தனிப்பட்ட குற்றங்களுக்கு முதலமைச்சர் பொறுப்பாக முடியுமா? முந்தைய ஆட்சியில் நடக்கவில்லையா?" போன்ற வாதங்கள் அபத்தமானவை. ஆளும் அரசின் உடல் மொழியே காவல்துறையை இயக்கும். புதிய அரசின் முழு கவனமும் பி.ஆர் (PR) வேலைகளிலும் கொண்டாட்டங்களிலும் சிதறிக் கிடப்பதே குற்றவாளிகளுக்குத் துணிச்சலைத் தருகிறது. முந்தைய ஆட்சிகளின் தவறுகளைக் காட்டித் தப்பிப்பது நீங்கள் சொல்லிய 'மாற்றத்திற்கு' நேர் முரணானது.

மாற்றத்தின் முகமூடியாக முன்னிறுத்தப்படும் த.வெ.க-வின் முற்போக்கு பிம்பத்தின் பின்னால் உள்ள கருத்தியல் சறுக்கல்கள் மிக ஆபத்தானவை.

7 பட்டியலின அமைச்சர்கள் இருப்பதால் இது சமூக நீதி ஆகிவிடாது. 2021ல் மோடியின் அமைச்சரவையில் 12 தலித் அமைச்சர்கள் இருந்தும் ரோகித் வெமுலா, ஹாத்ரஸ், உனா என விளிம்புநிலை மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் தொடரவே செய்தன. கருத்தியல் தீர்க்கமற்ற பிரதிநிதித்துவம் வலதுசாரி கட்டமைப்புகளின் வெறும் நாடகம்.

பார்ப்பன ஆதிக்கத்தை உடைக்க நீதிக்கட்சி உருவாக்கிய ‘இந்து சமய அறநிலையத் துறையை’, 2026 இல் பார்ப்பனரான எஸ்.ரமேஷ் வசம் ஒப்படைத்திருப்பது வரலாற்றுப் பெருந்துயரம். "அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்" என்ற பெரியாரியக் கனவைச் சிதைக்கும் மாபெரும் கருத்தியல் பின்னடைவு இது.

மாநில உரிமைகளுக்கும் சமூக நீதிக்கும் எதிரான ‘தேசிய கல்விக் கொள்கையை’ (NEP) ஆதரிக்கும் ஏ.பி.வி.பி (ABVP) அமைப்பினர், எவ்விதத் தடையுமின்றி முதல்வரைச் சந்திக்கிறார்கள். அதைத் திட்டவட்டமாக நிராகரிக்க வேண்டிய முதல்வர் விஜய், "பரிசீலிப்போம்" என நழுவுவது நவீன குலக்கல்விக்குக் கதவு திறக்கும் செயல். பெரியார், அம்பேத்கர் படங்களை இவர்கள் மாநாட்டு மேடைகளில் வைப்பது வெறும் பி.ஆர் வியூகம் மட்டுமே என்பது இதன்மூலம் வெட்டவெளிச்சமாகிறது.

தந்தை பெரியார் கற்பித்த 'சுயமரியாதையை' அழித்து, "விஜய் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்" என்ற ஒற்றை மனித வழிபாட்டு மனநிலைக்கு இளைஞர்கள் தள்ளப்படுகிறார்கள். அதேபோல், பெண்களின் தன்னுரிமை மற்றும் சொத்துரிமையைப் பேசாவிடாமல், 'தாலிக்குத் தங்கம்' வழங்கும் திட்டங்கள் பெரியார் ஒழிக்க நினைத்த ஆணாதிக்கத் திருமண முறையையும் வரதட்சணையையுமே மீண்டும் ஊக்குவிக்கின்றன.

ஒரு அரசின் நம்பகத்தன்மை திரையில் பேசும் வசனங்களில் இல்லை, தரையில் செயல்படுத்தும் கருத்தியல் உறுதியில்தான் இருக்கிறது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது வெறும் திரைப்பட வசனம் அல்ல, அது அதிகாரத் திமிரோடு சமரசம் செய்யாமல் போராட வேண்டிய தத்துவம். த.வெ.க அரசு அந்தப் போராட்டத்திற்குத் தயாராக இல்லை என்பதையே அதன் செயல்பாடுகள் காட்டுகின்றன.

திரை விலகியதும் நிஜம் முகம் காட்டத் தொடங்கியிருக்கிறது!

- பாலா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.