மத்தியில் யார் ஆண்டாலும், தமிழகத்திற்கென்று ஒரு மதிப்பு இருந்தது. நாம் விரும்பாத ஜெயலலிதா ஆட்சி வரையில் கூட அது இருந்தது. இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தில்லி சென்ற தமிழகத்தின் துணை முதல்வர், 20 நிமிடங்கள் காக்க வைக்கப்பட்ட பின், இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனால் திருப்பி அனுப்பப்படுகிறார்.

ops and nirmala seetharaman

இது வெறும் நிகழ்ச்சியன்று. பல்வேறு நுண் அரசியலை உள்ளடக்கியுள்ள நாடகம். தமிழகத்திற்கு நேர்ந்திருக்கும் அவமானம். அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளவர்களின் ஒப்புதல் வாக்குமூலம்.

இந்த நாடகக் காட்சியில் நேரடியாக மேடைக்கு வந்திருப்பவர்கள் இருவர். அவர்களுள் ஒருவர் ஓ.பன்னீர்செல்வம், இன்னொருவர் நிர்மலா சீதாராமன். திரைக்குப் பின்னால் பல முகங்கள்!

ஓ.பன்னீர்செல்வம் நடத்திய நாடகங்கள் எத்தனை! ஜெயலலிதா கல்லறையில் நடத்திய ‘யோகா யுத்தம்‘ தொடங்கி, எடப்பாடியுடன் நடத்திய ‘தர்ம யுத்தம்‘ வரையில் அவர் அரங்கேற்றிய எந்த நாடகமும் வெற்றி பெறவில்லை. இப்போது வேறு நோக்கத்துடன் தில்லி சென்ற அவர், ‘நன்றி சொல்லும் நாடகத்தை’ முன்வைத்தார். மத்திய அரசுக்குப் பாராட்டு என்று கருதி, தன் தம்பிக்கு இராணுவ விமானத்தைத் தந்த நிகழ்வை அவர் வெளியிட்டார். அதுவே அவருக்குக் கேடாக முடிந்துவிட்டது.

தான் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதை இப்படிப் போட்டு உடைத்து விட்டாரே என்று மத்தியில் கோபம் என்கின்றனர். அது மட்டுமன்று, அதனையும் தாண்டிச் சில உண்மைகள் மறைந்து கிடக்கின்றன என்று வேறு சிலர் கூறுகின்றனர். வேறு என்ன, ‘கொடுக்கல் வாங்கலில்’ எங்கோ தவறு நடந்திருக்கும்.

இல்லையானால், நேற்று, சட்டத்திற்குப் புறம்பாக இராணுவ விமானத்தை அனுப்பியவர்கள், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்க வேண்டும் என்று எடப்பாடியைக் கூட விட்டுவிட்டு, ஓ.பன்னீர்செல்வத்தைக் கேட்டவர்கள், இன்று வீட்டு வாசலுக்கு வந்தவரைப் பார்க்காமல் திருப்பி அனுப்புவார்களா?

அமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றியும் சில செய்திகளைப் பகிர வேண்டியுள்ளது. ஊடகவியலாளர்களிடம் பேசும்போது, அவர் உடல்மொழியில் ஓர் ஆணவம் பீறிட்டு எழுவதைப் பலரும் கவனித்திருக்கக் கூடும். சில வேளைகளில் ‘இரண்டு ஜெயலலிதா’ போல அந்தத் தோற்றம் இருக்கும். இருக்கத்தானே செய்யும். ஸ்ரீரங்கத்தில் பிறந்த ‘அவாள்’ ஆயிற்றே! அதனால்தானே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொன். ராதா கிருஷ்ணனுக்குச் சாதாரணத் துணை அமைச்சர் பதவி. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இந்த அம்மையாருக்கு, மிகப் பெரிய பாதுகாப்பு அமைச்சர் பதவி.

இந்த அம்மையார்தான், தமிழகத்தின் (ரகசிய) முதலமைச்சர் வேட்பாளராம். அதில் என்ன ரகசியம் வேண்டியிருக்கிறது என்று கேட்கலாம். தேர்தலுக்கு முன்பே அதைச் சொன்னால் வருகிற ஒரு விழுக்காடு வாக்குகளும் வராமல் போய்விடுமே என்ற கவலைதான்.

இதுவரை காணாத காட்சிகளையெல்லாம் தமிழகம் கண்டுகொண்டிருக்கிறது. எத்தனை ஏமாற்று, எத்தனை பித்தலாட்டம், எத்தனை அவமானம்! இந்த நாடகத்தில் இன்னும் எத்தனை எத்தனை காட்சிகள் இப்படி இருக்கின்றனவோ தெரியவில்லை!

தலைவர் கலைஞர் 50

தி.மு.கழகத்தின் தலைவராகக் கலைஞர் 1969 ஜூலை 27 அன்று பொறுப்பேற்றார். 49 ஆண்டுகள் நிறைவடைந்து, 50 ஆம் ஆண்டில் இப்போது அடியெடுத்து வைக்கின்றார். ஓர் அரை நூற்றாண்டு காலம், ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர் நம் தலைவர் கலைஞர் மட்டுமே! அவர் படைத்த பல வரலாற்று நிகழ்வுகளில் இதுவும் ஒன்று!

Pin It