இந்திய ஒன்றியத்தில் உரிமையியல் (சிவில்) மற்றும் குற்றவியல் (கிரிமினல்) என இரு வகையாக சட்டங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் கிரிமினல் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சிவில் சட்டத்தில் மட்டும் மதம், பழக்கவழக்கம், பாரம்பரியம் ஆகியவற்றின் அடிப்படையில் சில தனி நபர் சட்டங்கள் உள்ளன. ஆயினும் சிவில் சட்டத்தில் 80 சதவீதத்துக்கும் மேலான அம்சங்கள் அனைவருக்கும் பொதுவாகத்தான் இருக்கின்றது. மக்கள் தாங்கள் பின்பற்றும் மதம் தொடர்புடைய மிகச் சில அம்சங்கள் மட்டும் தனி நபர் சிவில் சட்டங்கள் எனப்படுகின்றன. அந்த தனி நபர் சட்டங்கள் மட்டும் சிலவற்றில் மாறுபடுகின்றன.

இந்து மதத்தைப் பொறுத்தவரை குடும்பவியல், திருமணம், வாரிசு, சடங்கு, கூட்டுக் குடும்ப முறை, குழந்தைகளைத் தத்தெடுத்தல், ஜீவனாம்சம், மலை வாழ் மக்களின் பழக்கவழக்கம் என பல்வேறு இந்து தனி நபர் சட்டங்கள் உள்ளன. ‘ஷரியத்’ சட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் ‘முஸ்லிம் தனிநபர் சட்டம்’ 1937இல் இயற்றப்பட்டது. முஸ்லிம் தனிநபர்கள், குடும்பம், திருமணம், மணமுறிவு, வாரிசு, வக்பு உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களைக் கையாள்வது என இதில் இடம் பெற்றுள்ள அம்சங்களை முஸ்லீம்கள்கள் பின்பற்றி வருகின்றனர். சீக்கியர்கள் எந்நேரமும் கத்தி வைத்திருக்கவும், காவல் துறை மற்றும் ராணுவத்தில் பணிபுரிந்தாலும் கூட அங்குள்ள விதிகளுக்கு மாறாக அவர்கள் தாடி மற்றும் தலையில் டர்பன் வைத்துக் கொள்ளவும் சீக்கியர்களுக்கான தனி நபர் சட்டம் அனுமதிக்கிறது.uniform civil code 640அனைத்து மக்களும் தங்களது மத நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பின்பற்றிக் கொள்வதற்கான உரிமையை இந்திய அரசியலமைமைப்பு சட்டம் வழங்கியிருக்கிறது. மதம் சார்ந்த சட்டங்களில் முரண்பாடுகள் இருக்குமானால் காலத்தின் போக்குக்குத் தகுந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ளலாமே தவிர அதற்கு பொது சிவில் சட்டம் தீர்வு ஆகாது.

பொருளாதார சீர்கேடு, கர்நாடகா தோல்வி, மணிப்பூர் கலவரம் என பா.ஜ.க தொடர்ந்து மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் சூழலில் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பும் அக்கட்சியை மேலும் பதட்டத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் எதை தின்றால் பித்தம் தெளியும் என்பதைப் போல் பொது சிவில் சட்டத்தை அமல் படுத்தும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது.இதற்காக நாடாளுமன்ற நிலைக் குழு 10.10.2022 அன்று அமைக்கப்பட்டு குழுவின் தலைவராக பீகார் முன்னாள் துணை முதல்வர் பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் சுசில்குமார் மோடி நியமிக்கப்பட்டுள்ளார். 22 ஆவது சட்ட ஆணையம் 14.06.2023 அன்று வெளியிட்ட அறிக்கையில் “பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகள் 30 நாட்களுக்குள் கருத்துகள் தெரிவிக்கலாம்” என்று கூறியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21 ஆவது சட்ட ஆணையம் பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகளிடம் கருத்துக் கேட்பு நடத்தி 185 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அளித்தது. அதில் “நாட்டில் பொது சிவில் சட்டம் அவசியம் இல்லை. தற்போதைய சூழலில் அது விரும்பத்தக்கதும் அல்ல. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தினால் அது நாட்டில் நிலவும் பன்முகத்தன்மைக்கும் மதச்சார்பின்மைக்கும் முரணாக அமையும். நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையை பொது சிவில் சட்டம் மூலம் சமரசம் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அது தேசத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஆகிவிடும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொது சிவில் சட்டம் அமல்படுத்த பா.ஜ.க முயல்வது இதன் மூலம் மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் தான்.

வாஜ்பாய் அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு எதிராகவே இருந்தது. 17.08.2000 அன்று மக்களவையில் இது குறித்து பா.ஜ.க. உறுப்பினர் யோகி ஆதித்யநாத் (இன்றைய உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர்) கேள்வி எழுப்பிய போது அன்று சட்ட அமைச்சராக இருந்த அருண்ஜெட்லி “சிறுபான்மைச் சமூகத்தினரிடமிருந்து தேவையான முன்முயற்சிகள் வராத வரை அவர்களின் தனிப்பட்ட சட்டங்களில் தலையிடக் கூடாது என்பது அரசின் நிலையான கொள்கை ஆகும். எனவே, இது தொடர்பாக எந்த காலக் கெடுவையும் வகுக்க முடியாது” என்று பதில் அளித்திருக்கிறார். இதே பதிலை 29.11.2001 அன்று மீண்டும் அமைச்சர் அருண்ஜெட்லி நாடாளுமன்றத்தில் உறுதி செய்துள்ளார்.

பொது சிவில் சட்டத்தின் நோக்கமானது மத உள்நோக்கமே தவிர, சீர்திருத்தம் அல்ல. முஸ்லீம் தனிநபர் சட்டம் குறித்து கோபம் கொண்டு “அனைவருக்கும் சமநீதி” வேண்டும் என பேசும் இவர்கள் இன்றும் தொடரும் “ஜாதிக்கொரு நீதி” குறித்து பேச மறுப்பது ஏன்? ஒரு தார மணம், ஜீவனாம்சம், பெண்களுக்கு சொத்துரிமை, வாரிசுச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்து இந்து சட்டமசோதாவை 1951 ஆம் ஆண்டு அன்றைய சட்ட அமைச்சர் அண்ணல் அம்பேத்கர் கொண்டு வந்த போது எதிர்த்தவர்கள் இன்றைக்கு பொதுசிவில் சட்டம் கொண்டு வரத் துடிப்பவர்களின் முன்னோடிகள் தானே.

பொது சிவில் சட்டம் சிறுபான்மையினர், பட்டியல் இன, பழங்குடி மக்களது தனிச்சட்டங்கள் உரிமைகளைப் பறிப்பதாகவும் இருக்கும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் தனி உரிமைச் சட்டங்களை ஒரே நாளில் தூக்கி எறியவும் இது அடிப்படை அமைத்துத் தரும். இந்த ஆபத்தை உணர வேண்டும்.

“அனைவரும் சமம் அனைத்தும் பொது” என்று நினைக்காதவர்கள் கொண்டு வருவது பொதுவான சட்டமாக இருக்காது. அனைத்து மதங்களும் அனைத்து மொழிகளும் அனைத்து இனங்களும் சமம் என்று நினைக்காதவர்கள் கொண்டு வருவது பொது நோக்கம் கொண்டதாகவும் இருக்காது. எனவே பொது சிவில் சட்டத்தை எதிர்த்து அனைவரும் சட்ட ஆணையத்திற்கு கருத்துகளை அனுப்பி இதை தடுத்து நிறுத்துவதன் மூலம் நாட்டை துண்டாட நினைக்கும் போலி தேச பக்தர்களின் முகத்திரையைக் கிழிப்போம்.

- வழக்கறிஞர் இராம. வைரமுத்து

Pin It