ஆளுநரும், முதலமைச்சரும் இணைந்து செயல்பட்டால் மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொடுக்கலாம் என்று புதுவை துணை நிலை ஆளுநர் பேசியிருக்கிறார். வரவேற்கத்தக்க நல்ல கருத்து. ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லையே!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து மக்களுக்கானத் திட்டங்களை வகுக்கிறார், செயல்படுத்துகிறார்.

இப்போது கூட ஏழை நடுத்தர குடும்பத் தலைவிகளுக்குக் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட “த்தை பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் இருந்து செயல்படுத்த நிதி ஒதுக்கி, அதற்கானப் பணிகளைச் செய்ய உத்தரவிட்டுள்ளார். ஆனால் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுடன் இணக்கமாக ஒத்துழைக்கவில்லை.

தமிழ்நாடு அரசால் அனுப்பப்படும் மசோதாக்களைக் கிடப்பில் போடுவதும், சனாதனம் என்றும் சனாதன நாடு என்றும் மனுவாதப் பேச்சுகளைப் பேசிக்கொண்டு இருக்கிறார்.

அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கிவிட்டேன் என்றார், அடுத்த நான்கு மணி நேரத்தில் அதை நிறுத்தி வைக்கிறேன் என்கிறார், பிறகு இதற்கான சட்ட ஆலோசனை பெற டில்லி போகிறேன் என்று நிலையற்றுப் பேசி டில்லிக்குச் சென்று விட்டார்.

அதே சமயம் கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் செய்த அமைச்சர்களான விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டால் மவுனம் சாகிக்கிறார்.

அனுமதி கேட்டு அரசு கோப்பு கிடைக்கவில்லை என்றார். கோப்பு ஆளுநர் மாளிகையால் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டை அரசு வெளியிட்டதும் அவரின் பேச்சே காணவில்லை.

இப்படி மக்கள் நலம் பேணுகின்ற தமிழக முதல்வருடன், இணக்கமாகப் போகாமல், தன் போக்காகவும், பா.ஜ.க வின் ஊதுகுழலாகவும் இருக்கும் ஆர்.என்.ரவியால் தமிழ்நாட்டிற்கு எந்தப் பயனும் இல்லை.

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It