kolathoor mani 232பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பொருட்டு அண்மையில் டெல்லி சென்று இந்தியாவின் பல்வேறு முக்கியக் கட்சிகளின் தலைவர்களை மேற்கு வங்க முதல்வர் திரு.மம்தா பானர்ஜி அவர்கள் சந்தித்திருக்கிறார்கள். இது பற்றியத் தங்களுடையக் கருத்து.

இது தேவையான ஒன்றுதான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும்  ஒவ்வொரு  நிகழ்ச்சி நடந்து இருக்கிறது. 1967 ஆம் ஆண்டு ஒரு மாற்றம் ஏற்பட்டது. அப்போது பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. அப்போதிருந்துதான் மாநில சுயாட்சிக் கோரிக்கை வலுவானது. வீரேந்திர பாட்டீல் என்பவர் கர்நாடக முதலமைச்சராக இருந்தவர். அவர் தேர்தல் அறிக்கையிலேயே மாநிலங்களுக்கானக் கூடுதல் அதிகாரங்கள் பற்றி  எந்த அளவிற்குச் சொன்னார் என்றால், மாநிலங்களுக்கு அதிகாரமே இல்லாத நிலை தொடர்ந்தால் டெல்லியில் இருக்கும் மாநிலங்களுக்கான இல்லங்கள் தூதரகங்களாக மாறும் நிலை ஏற்படும் என்கிற அளவிற்குச் சொன்னார். அவர் காங்கிரஸ் முதலமைச்சராக இருந்தவர். அப்போது தமிழ்நாடு, கேரளா, அசாம், உத்தரப் பிரதேசம் என பல மாநிலங்களில் மாநில சுயாட்சிக் குரல் எழுந்தது. அதற்குக் காரணம் அங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. அதேபோன்று இப்போது மாநில உரிமைகளை வலுவாகப் பேசுகின்ற கட்சிகள் மாநிலங்களில் ஆட்சிக்கு வந்திருக்கின்றன. இது ஒரு நல்ல வாய்ப்பான நேரமாக நாம் பார்க்கிறோம்.

பல்வேறு கட்சிகள் இணைந்து ஒரு அணி உருவாகும் போது அந்த ஆட்சியோ அல்லது அந்தக் கூட்டணியோ சிறிது காலத்திலேயே முடிவுக்கு வந்து விடுவதைப் பார்க்கிறோம். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பாடங்கள் மூலம், தவறுகள் இருந்தால் கற்றுக் கொள்ள வேண்டும். குறைந்த பட்சத் திட்டம் என்ற ஒன்று இதற்கு முன் வைத்துக் கொண்டதில்லை. இப்போது அதையெல்லாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பழைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, புதிய முயற்சிகளை எடுக்க வேண்டும்.

இந்திய அளவில் பாஜகவிற்கு எதிராகக் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் தமிழகத்தின் முன்னெடுப்பு பற்றி.

ஒருமுறை சந்தித்திருக்கிறார்கள். ‘ஒன்றியம்‘ என்று நாம் சொன்னதற்குப் பின் தற்போது பல்வேறு மாநிலங்களில் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அதேபோல் ஜிஎஸ்டி கவுன்சிலில் நாம் எழுப்பிய கோரிக்கைகள் பல மாநிலங்களில் எதிரொலிக்கின்றன. முழுமையாக இல்லாவிட்டாலும் அது பற்றி ஓரளவிற்காவது சிந்திக்கும் போக்கு தற்போது வந்திருக்கிறது. ஆகையால் தமிழ்நாட்டில் நாம் நேரடி முயற்சி எடுக்கவில்லை என்றாலும் நம்முடைய முன்னெடுப்புகள் பலருக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றன.

தமிழகத்தின் நலனுக்காகப் பிரதமரைச் சந்திக்கிறோம் என்று திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களும் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் சொல்வது பற்றி.

தமிழக நலனுக்காகச் சந்திக்கிற அவர்கள் எப்போதோ சந்தித்திருக்கலாம். ஒருவேளை அவர்கள் கட்சிச் சிக்கலைத் தீர்ப்பதற்காகப் போனார்களோ அல்லது முருகனை மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டும் என்று இவர்களை அழைத்துப் பேசியிருக்கலாம்.  ஏனென்றால் பாஜகவினர் வந்து கேட்கும் அளவிற்குக் கூட இவர்கள் இல்லை. உள்துறை அமைச்சர் இவர்களுக்கான நேரம் ஒதுக்காமல் ஒரு நாள் தங்கியிருந்து பார்க்கும் அளவிற்குத்தான் இவர்களுடைய மரியாதை இருக்கிறது. தாங்கள் ஆட்சியாளர்களாக இருந்தபோது தமிழ்நாட்டு நலனுக்காகப் போகாதவர்கள் இப்போது அதற்காக போகிறோம் என்று சொல்வது சுத்தப் பொய் என்று எல்லோருக்கும் தெரியும். அதிமுக உறுப்பினர்கள் கூட அப்படி நம்ப மாட்டார்கள். அல்லது இப்போது ரெய்ட் எல்லாம் நடப்பதால் பாதுகாப்பு கருதிக் கூடப் போயிருக்கலாம்.

நீண்ட நெடும் பொதுவாழ்க்கையில், சமூகநீதிப் போராளியாக, பல்வேறு ஆட்சிகளைச் சந்தித்திருக்கும் தங்கள் அனுபவத்திலிருந்து இன்றைய புதிய ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

  இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் தமிழக அரசு செயல்பட்டது. முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் கொரோனாவைக் கட்டுப்படுத்தப் போராடியது, அனைத்துத் தரப்பினரும் பாராட்டக் கூடிய ஒன்றாகும்.

 சமூகநீதியைத் தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர். பாஜகவினர் கூட இடஒதுக்கீடு பற்றிய கேள்வி வந்த போது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ்நாட்டில் மட்டும் அதை ஆதரிக்கிறோம் என்று சொன்னார்கள். இவையெல்லாம் வாயளவில் சமாளிப்பதற்காகப் பேசப்படுகிறது. உளப்பூர்வமாக அதைக் கொள்கையாகக் கொண்டிருக்கக்கூடிய கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம். ஏனென்றால் எதிர்க்கட்சியாக இருந்த காலகட்டத்தில் கூட ஒன்றிய அரசின் மருத்துவ இடஒதுக்கீட்டுக்காக வழக்கு நடத்தி, தொடர்ந்து போராடியது திமுகதான். எனவே சமூக நீதிப் பணிகளில் அவர்கள் முழு அக்கறையோடு இருப்பார்கள்.

‘மதச்சார்பின்மை’ என்பது நாம் இப்போது பாதுகாக்க வேண்டியதாக இருக்கிறது. ஒரு புதுத் திட்டம் தொடங்குவது என்பது அடிக்கல் நாட்டு விழா என்றுதான் சொல்லப்பட்டு வந்தது. இப்போது பத்திரிக்கைகள் தொடங்கி அனைத்து இடங்களிலும் பூமி பூஜை என்று சொல்லும் மாற்றம் வந்துவிட்டது. அரசு நிகழ்ச்சி அரசு நிகழ்ச்சியாகத்தான் நடக்க வேண்டும். இது போன்ற நிகழ்ச்சிகள் நிறைய நடப்பதை நாம் பார்க்கிறோம். 

1967இல் திமுக ஆட்சிக்கு வந்தபோது ஆறு மாதம் எந்தவித விமர்சனமும் ஆட்சியின் மீது வைக்காதீர்கள் என்று காமராஜர் சொன்னார். அதனால் ஒரு காலகட்டம் ஆக வேண்டும். அரசின் நடவடிக்கைகளை எல்லாம் புரிந்து கொள்வதற்கு 10 நாள் 100 நாள்களில் எல்லாம் நாம் பேசிவிட முடியாது. ஏதாவது பேச வேண்டும் என்று பேசுவதற்காகத்தான் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன.

முதலமைச்சர் எல்லாக் கட்டத்திலும் சிறப்பாகச் செயல்படுவதைப் பார்க்கிறோம். தலைமைச் செயலாளர் தொடங்கி பல்வேறு அதிகாரிகளை நியமித்தது என மிகவும் ஆழமாக யோசித்து ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுத்து வருவதை நாம் பார்க்கிறோம். நல்ல முன்னெடுப்புகளாகத்தான் இருக்கின்றன.  இவை தொடர வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். ஏனென்றால் கடந்த 10 ஆண்டுகளில் ஜனநாயக போராட்டங்களுக்குக் கூட இடமில்லாத ஆட்சியாகத்தான் இருந்தது.

நேர்கண்டவர்: மா.உதயகுமார்

Pin It