தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது மரபு, உரிமை. இறுதியில் நாட்டுப்பண் பாடுவதற்குமுன் ஆளுநர் ஆர்.என்.ரவி அவசரப்பட்டு வெளியேறினார் என்று சொல்ல முடியாது. சட்டப்பேரவையை அவமரியாதை செய்வதன் மூலம் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களை அவமதித்து விட்டார் அவர் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒன்றிய அரசின் பிரதிநிதி ஆளுநர் என்பதால், இவருக்குப் பின்னால் மோடியின் நிழல் தெரிகிறது.

புதிய கல்விக் கொள்கை, நீட் போன்ற ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழர்களும் பாஜகவைப் புறக்கணிக்கிறார்கள் என்பதால் தமிழ்நாட்டின் மீது வெறுப்பை உமிழ்கிறார்கள் அவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு பேரவையில் ஆளுநரின் செயல்.

பேரவையில் நாட்டுப்பண் பாடவில்லை என்று ஆளுநர் சொல்வது உளுத்துப் போன வாதம். அவர்களுக்கு வழிகாட்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சிகளில் 'தேசிய கீதமே' பாடுவதில்லை என்பது ஆளுநருக்குத் தெரியாதா?

தைத்திருநாள் பொங்கல் தமிழர்களின் தலையாய விழா.

அந்த நாளில் கூட தமிழர்கள் நிம்மதியாக இருக்கக் கூடாது என்று யுஜிசி நெட் தேர்வை பொங்கல் அன்றே நடத்துவதாகத் திட்டமிட்டே அறிவிக்கப்பட்டு இருப்பதும் தமிழர்களுக்கு எதிரான செயல். அந்தத் தேர்வை வேறு ஒருநாளில் நடத்தலாம் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களே கடிதம் எழுதி இருப்பதோடு, அதற்கு எதிரான தனித்தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றவும் செய்திருக்கிறார்!

ஆனாலும் செவிடன் காதில் சங்கு ஊதியதுபோல இருக்கிறது ஒன்றியம்.

 ஒட்டுமொத்த அதிகாரங்களையும் கைப்பற்றும் நோக்கோடு ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சர்வாதிகாரக் காவி அதிபர் ஆட்சிக்கு வழிகோலுகிறது காவிக் கூட்டம்.

காவிக்கு எதிர்நிலை திராவிடம். திராவிடத்தின் பின்னால் அணிவகுப்போம், காவிக்கு எதிராக!

- கருஞ்சட்டைத் தமிழர்