தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தலைவர்கள் எந்தந்த சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார்கள் என்று இப்போதே ஹேஷ்யங்கள் வெளியிடப்பட்டு தேர்தல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ளது.

அதிமுகவில் பெரும்பாலும் ஜெ இரண்டு தொகுதியில் போட்டியிட இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆண்டிப்பட்டி மற்றும் காங்கேயம் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எதிர்க்கட்சியின் கூட்டணி பலம் கண்முன் பூச்சாண்டி காட்டுவதால், பாதுகாப்பு கருதி ஜெ இரு தொகுதிகளில் போட்டியிட இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது இப்போதைய செய்தி ஒரு தொகுதி மட்டும்தான் என்று நிலை எடுத்தால் ஆண்டிப்பட்டியையே இரத்தத்தின் இரத்தங்கள் விரும்புகிறார்கள். ஜெவின் மனதில் என்ன உள்ளதோ தெரியவில்லை.

திமுக தலைவர் கலைஞரைப் பொறுத்தவரையில் மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த முறை கலைஞர் சென்னையை விட்டுவிட்டு வெளியில் வந்து போட்டியிட வேண்டும் என்று கழக உடன்பிறப்புகள் விரும்புகிறார்கள். அப்படி சென்னையைத் தவிர்த்து வெளித்தொகுதிகளில் நிற்பதாக இருந்தால் எந்தத் தொகுதி கலைஞருக்கு ஏற்ற தொகுதி என்று சிந்தித்துப் பார்த்தால் நினைவுக்கு வரும் தொகுதி தஞ்சைதான். அன்றும் இன்றும் என்றும் திமுகவின் அசைக்கமுடியாத கோட்டை தஞ்சாவூர்.

நிலையான திமுக ஓட்டு வங்கி கொண்ட நகரம். கலைஞர் மீது பாசம் கொண்ட மக்கள் நிறைந்த தொகுதி. ஏற்கனவே தஞ்சையின் சட்டமன்ற உறுப்பினராகக் கலைஞர் இருந்திருக்கிறார். மேலும் மத்திய இணையமைச்சர் பழணிமாணிக்கம் மற்றும் கோசி.மணி போன்ற ஆற்றல் மிக்க தளபதிகள் உள்ளதால் இம்முறை கலைஞர் தஞ்சையில் போட்டியிட வேண்டும் என்று கழக உடன்பிறப்புகளும் விரும்புகிறார்களாம். இறுதி முடிவு கலைஞரின் கரங்களில் உள்ளது.

முதலமைச்சர் தொகுதி என்ற பெருமையை தஞ்சை பெற வேண்டும் என்று தஞ்சை உடன்பிறப்புகள் நினைப்பதால், கலைஞர் போட்டியிடாத நிலையில் தளபதி ஸ்டாலின் தஞ்சையில் போட்டியிட வேண்டும் என்று திமுகவின் இனைஞர்கள் உற்சாகக்குரல் எழுப்புகின்றனர்.

தற்போது வரை ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதிதான் என்று பரவலாகப் பேசப்படுகிறது. வேறு சிலர் திருச்சி சட்டமன்றத்தொகுதிகளில் ஒன்றாக இருக்கும் என்றும் கூறுகின்றனர். அதனால்தான் திருச்சியில் திமுக தேர்தல் மாநாடு என்று கூறுகிறார்கள்.

மதிமுகவின் வைகோ கூட்டணி ஊசலாட்டத்தில் இருந்தாலும் கட்சித் தொண்டர்கள் அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார்களாம். நெல்லை மாவட்டம்தான் பாதுகாப்பு என்பதால் அங்குள்ள ஏதாவது ஒரு தொகுதியில்தான் போட்டியிடுவார். திமுக கூட்டணியில் தொடரும் நிலையில் அவர் சட்டமன்றத்தேர்தலில் போட்டியிடக்கூடும். அணி மாறினால் அல்லது தனித்து நின்றால் தான் போட்டியிடாமல் தொண்டர்களுக்கு வாய்ப்பளித்துவிட்டு ஒதுங்கிக்கொள்ளவும் கூடும்.

கார்த்திக் முதுகுளத்தூர் அல்லது உசிலம்பட்டியில் தொகுதியிலும் வி‎ஜயகாந்த் மதுரையிலும் போட்டியிட விருப்பம் கொண்டுள்ளனர். நடிகர் வி‎ஜயகாந்த் பாமக பெல்ட் தொகுதிகளில் ஒன்றில் நின்று வெற்றி பெற வேண்டும் என்றும் நினைக்கிறார் என்று அவருடன் இருப்பவர்கள் கூறுகிறார்கள். எனவே அவரும் இரு தொகுதிகளில் வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது.

விஜயகாந்த் இறுதி நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டால் ஒரு தொகுதியில் மட்டுமே நிற்பார். ஆனால் ஜெவுக்கு அவருடன் கூட்டு வைக்க விருப்பம் இல்லை. தனியாக நின்று திமுக கூட்டணி ஓட்டுக்களைப் பிரிக்க வேண்டும் என்றே விரும்புவார். அதற்காக மறைமுகமான ஆதரவு மற்றும் வைட்டமின் எம் தாராளமாக வழங்கப்படலாம்.

திமுகவின் மீது அதிருப்தியாக இருக்கும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களின் ஓட்டுகளை விஜயகாந்த் பிரித்து விடுவார் என்று கணக்குப் போட்டு அதிமுக காய் நகர்த்துவதால் விஜயகாந்த் தனியாக மூன்றாவது அணியாக நிற்பதைத் தவிர வேறு வழி அவருக்கு இல்லை.

மன்னார்குடி குடும்பங்களும் ‏இத்தேர்தலில் களம் ‏இறங்க காய்களை நகர்த்தி வருகி‎ன்‎றன. ‏‏இந்தத் தடவை துணை முதல்வர் பதவிக்கு சசிகலா முயலுவதாக செய்திகள் கசிகின்றன. அவர் அருப்புக்கோட்டையைக் குறி வைத்துள்ளார்.

இந்தத் தேர்தலில் நிறைய புதுமுகங்களுக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பளிக்க அனைத்துக் கட்சி தலைமைகளும் முடிவு செய்திருப்பது ஏற்கனவே பதவியில் உள்ளவர்களுக்கும் பதவியை எதிர்பார்க்கும் பெரிசுகளுக்கும் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. 

- அக்னிப்புத்திரன்

Pin It