pegaus incidentஉளவு பார்ப்பது அல்லது வேவு பார்ப்பது என்பது காலங்காலமாகத் தொடர்ந்து வரும் ஒன்றாகும். ஒரு நாட்டை இன்னொரு நாட்டிடம் இருந்து காத்துக்கொள்ள உளவு பார்ப்பது என்பது மன்னர்கள் காலந்தொட்டு நடந்து வருவதை நாம் பார்க்கிறோம். மற்ற நாடுகளில் உள்ளச் சூழலை உளவு பார்ப்பது என்பதையும் தாண்டிச் சொந்த நாட்டின் குடிகளையும் உளவு பார்க்கக்கூடியச் செயல்களும் எப்போதும் நடந்து வருகின்றன.

அரசாள்பவர்களைக் கடந்து சாமானிய மக்களும்கூட வேவு பார்க்கிறார்கள். கணவன் மனைவியை உளவு பார்ப்பது, பெற்றோர்கள் குழந்தைகளை உளவு பார்ப்பது என்பதும் இந்தச் சமூகத்தில் நிகழக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது. எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக அளவிட முடியாது என்பதும் உண்மையாகும்.

சில சமயங்களில் அறம் தவறி செயல்படுபவர்கள் செய்யும் குற்றங்களைக்கூட இப்படித்தான் கண்டுபிடிக்க முடிகிறது. அதற்காகத்தான் அரசாங்கம் உளவுத்துறை என்று தனியாக ஒரு துறையை வைத்திருக்கிறது. இருந்தும் அரசாள்பவர்கள் இன்று தொழில்நுட்ப வளர்ச்சியின் துணைகொண்டு யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கண்காணிக்க முடியும் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. இது உலகளாவிய ஒரு பெரும் விவகாரமாக இன்று உருவெடுத்திருக்கிறது. இது ஒரு கண்ணுக்குத்தெரியாத உலகமாக இயங்கி வருகிறது.

பெகாசஸ் போன்ற உளவு பார்க்கும் செயலிகள் (spyware) உருவாக்கப்பட்டு, வேவு பார்ப்பதற்காக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதையும், அதில் யார் யார் வேவு பார்க்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற  50 ஆயிரம் தொலைபேசி எண்கள் கொண்ட ஒரு பட்டியலையும்  ‘தி கார்டியன்’ இதழ் வெளியிட்டிருக்கிறது.

‘சைபர் சர்வெயலன்ஸ்’ என்று சொல்லப்படும் இணையத் தொழில் நுட்பச் செயல்பாடுகளைக் கண்காணிக்கக் கூடிய இந்த முறை உலகம் முழுவதும் தவறாகப் பயன்படுத்தக்கூடியப் போக்குகளே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன.

எப்படி, தற்காத்துக்கொள்ளப் பயன்படுத்தக்கூடியக் கருவிகளை அழிவு காரியத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றனவோ, அதே போன்றுதான் இந்த பெகாசஸ் போன்ற செயலிகள் தீவிரவாதத்திற்கு எதிராகவும் குற்றச் செயல்களுக்கு எதிராகவும் மட்டுமே பயன்படுத்தப்படும் என்கிற உறுதிப்பாட்டுடன் உருவாக்கப்பட்டு பின்னர் தனிமனிதர்களை, இயக்கங்களை, கட்சிகளை, பத்திரிகையாளர்களை, சமூகச் செயற்பாட்டாளர்களை, மனித உரிமை ஆர்வலர்களை வேவு பார்க்கப் பயன்படுத்தப்படுகின்றன.

நாம் சாதாரணமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தினாலே அதில் உள்ள மற்ற செயலிகள் (softwares) போல் இது போன்ற உளவு பார்க்கும் செயலிகளும் (spywares) செயல்படுத்தப்பட்டு, நம்முடைய தொலைபேசியில் இருக்கக்கூடிய அனைத்துத் தகவல்களையும் எடுத்துக்கொள்ளவும் முடியும், இல்லாதவற்றை இடம்பெறச் செய்யவும் முடியும். அதேபோல் அதுவே ஒரு இரகசிய ஒலிவாங்கியாகவும் செயல்பட்டு நாம் பேசக்கூடிய அனைத்தும் இன்னொருவர் கேட்கும் வசதியும் கொண்டது.

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்த பெகாசஸ் செயலி மூலம் வேவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலை ஊடகங்களுக்குக் கொடுத்திருக்கிறது. இதில் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பது Financial Times, CNN, The New York Times, France 24, The Economist, Associated Press, Reuters போன்ற உலகின் முன்னனிப் பத்திரிக்கைகளின் ஆசிரியர்களும் பத்திரிக்கையாளர்களும் தான்.

இந்தப் போக்கு என்பது உலகைச் சர்வாதிகாரிகளின் கைகளுக்குள் கொண்டுபோய்ச் சேர்க்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அவர்கள் கையிலிருக்கும் தொழில்நுட்பம் அணுஆயுதங்களைவிட நூறு மடங்கு ஆபத்தானது. இந்திய அளவில் இங்கே நடைபெறக்கூடிய பாசிச ஆட்சிக்கு இதுபோன்ற உளவு பார்க்கக்கூடிய ஸ்பைவேர் எவ்வளவு பெரியக் கொடையாக அமைந்திருக்கும் என்பதை நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

நாடெங்கும் மூடநம்பிக்கையையும், கும்பல் கலாச்சாரத்தையும், பிற்போக்குத் தனத்தையம் வளர்த்தெடுக்கும் இவர்கள் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை எவ்வளவு சாதகமாக முறையற்ற வகையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை இந்த நாட்டு மக்கள் உணர வேண்டும்.

ஒரு பக்கம் நாடாளுமன்றத்தில் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் கொடுத்த அந்தப் பட்டியலே பொய்யானது என்றும்  இது மக்களின் பிரச்சினையைப் பேசவிடாமல் இந்தியாவில் குழப்பத்தை விளைவித்து அரசின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகச் செய்யப்படுகிறது என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.

இன்னொரு பக்கம் ஒரு அரசுக்கு அனைவரையும் உளவு பார்க்க உரிமை இருக்கிறது என்றும் இதில் ஒன்றும் தவறில்லை என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

பா.ஜ.கவினர் இப்படியெல்லாம் செய்யவில்லை என்றால்தான் நாம் வியப்படையவேண்டும். அமெரிக்காவின் வாட்டர் கேட் ஊழலை, இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

தேர்தலில் எதிர்த்தரப்பினர் வியூகங்களை உளவு பார்த்து வெற்றி பெற்ற அதிபர் நிக்சன், பின்னாளில் அவர் உளவு பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டு வாட்டர் கேட் ஊழலாக உருவெடுத்து அவர் பதவி விலகினார் என்பது வரலாறு.

- மா.உதயகுமார்

Pin It