dindugal liyoniஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தியைப் படித்ததும், அதிர்ச்சியடைந்து நண்பர் லியோனி எண்ணுக்குத் தொலைபேசி செய்தேன். ஒரு சாலை விபத்தில் லியோனி இறந்துவிட்டார் என்பதே அந்தச் செய்தி.

அந்தத் தொலைபேசியை யார் எடுக்கப் போகின்றாரோ என்ற கவலையோடுதான் தொலைபேசினேன். இன்ப அதிர்ச்சியாக அவரே பேசினார்.

"திட்டமிட்டுச் சிலர் கிளப்பியுள்ள வதந்தி அது" என்றார். "அப்படியா, உங்கள் மீது யாருக்கு அவ்வளவு கோபம்? ஏன் இந்த வதந்தி?" என்று கேட்டேன். "நேற்று திருவண்ணாமலையில் ஒரு கூட்டத்தில் பேசினேன். அதிலிருந்து இந்த வதந்தி சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது" என்றார்.

திருவண்ணாமலையில் நண்பர் லியோனி என்ன பேசினார்?

2016 தேர்தல் நேரம் அது! அந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை, அக்கட்சி, முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தது. 234 இடங்களிலும் அக்கட்சி தனித்துப் போட்டியிட்டது. அன்புமணி பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்டார்.

எனினும் தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை. ஓரிடத்தில் கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை என்பதோடு, முதல்வர் வேட்பாளரான அன்புமணியே, பென்னாகரம் தொகுதியில், திமுக வேட்பாளரிடம், 18446 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

அந்தத் தேர்தலின்போது, தமிழ்நாடு எங்கும் அக்கட்சியின் சார்பில் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டது. அவர் படத்தைப் போட்டு, "மாற்றம், முன்னேற்றம், டாக்டர் அன்புமணி" என்று அச்சிடப்பட்டிருந்தது. அந்தச் சுவரொட்டியின் வடிவமைப்பும், சொல்லமைப்பும் கவரத்தக்க வகையில் இருந்ததால், அது குறித்துப் பரவலாக ஒரு பேச்சு இருந்தது.

திருவண்ணாமலை தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், திமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய லியோனி, அந்தச் சுவரொட்டி பற்றியும் பேசினார். அவர் பேச்சின் சாரம் இதுதான்: "வர வழியில ரெண்டு சுவரொட்டிகள பாத்தேன். ஒன்னுல, மாற்றம், முன்னேற்றம், டாக்டர் அன்புமணின்னு இருந்துது. இன்னொன்னு, அதுக்குப் பக்கத்துல ஒட்டியிருந்தாங்க. "மூலம், பௌத்ரம், ஆண்மைக்குறைவு"ன்னு இருந்துது. ரெண்டுக்கும் ஒரே டாக்டரா, இல்ல, வேற வேறயான்னு தெரியல"

அன்று மாலையிலிருந்து அவருக்கு மிரட்டல் மற்றும் ஆபாசத் தொலைபேசிகள் வந்துகொண்டே இருந்தன. மறுநாள், அவர் இறந்துவிட்டார் என்ற வதந்தி பரப்பப்பட்டது. அதன்பின் பல நாள்கள் அவர் வீட்டிற்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இப்போது லியோனி தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் புனிதமான பதவியிலிருந்து (அதில் என்ன புனிதம் இருக்கிறது?) அவரை நீக்கிவிட்டு, ஒரு கல்வியாளரை அந்த இடத்தில் நியமிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் அறிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல், செயின்ட் மேரி மேல்நிலைப்பள்ளியில், 1981 முதல் 2011 வரையில், 30 ஆண்டுகள் லியோனி இயற்பியல் (physics) ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அதனைக் கல்வித் தகுதியாகத் தைலாபுரம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அவர் நியமனத்தை எதிர்க்கிறார். மேடையில் தரமாகப் பேசுகின்றவர்களை அந்தப் பதவியில் அமர்த்த வேண்டுமாம். ஓ...முன்பு அப்பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர் வளர்மதி போல மேடையில் தரமாகப் பேச வேண்டும் போலிருக்கிறது.

இந்து முன்னணி, தினமலர் ஏடு ஆகிய இடங்களிலிருந்தும் எதிர்ப்பு வந்துள்ளது. அவர்கள் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி போல மேடையில் தரமாகப் பேசுகின்றவர்களை எதிர்பார்க்கின்றனர் போலும்!

வாழ்த்துகள் தோழர் லியோனி! இவற்றை விடவும் சிறப்பான சான்றிதழ்கள் இனி என்ன வேண்டியிருக்கிறது உங்களுக்கு?

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண்" விடும் நம் முதலமைச்சரைப் பாராட்டியே தீரவேண்டும்!

- சுப.வீரபாண்டியன்

Pin It