ஒரு நாட்டின் பொருளாதாரத் தொழில் வளர்ச்சியை வங்கிகள்தான் தீர்மானிக்கின்றன.

1969 ஜூலை19 நள்ளிரவு இந்தியாவின் வங்கிப் புரட்சியாக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். பதினான்கு தனியார் வங்கிகள் அரசுடமையாக்கப்படும் என்றும், அது அன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்தார்.

indra gandhi1935-இல் தொடங்கப்பட்ட ரிசர்வ் வங்கிதான் இந்தியா சுதந்திரம் பெற்றபின் 1948-இல் அரசுடமையாகிய முதல் வங்கி. அதன்பின் 1955இல் இம்பீரியல் வங்கி அரசுடமையாக்கப்பட்டு, அதை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனப் பெயர் மாற்றம் செய்து ரிசர்வ் வங்கியின் நேரடித் தலைமையின் கீழ் கொண்டு வந்தனர்.

வங்கிகள் என்பது ஒரு பணத்தோட்டம் போன்றவை. எங்கே பணம் புரள்கிறதோ அங்கே பணத்தோட்டமும் உருவாகும். 1939-45இல் இரண்டாம் உலகப்போரால் பணப்புழக்கம் அதிகரிக்க அதிகரிக்க, புதிய வங்கிகள் தொடங்கப்பட்டன. 

பணப்புழக்கம் அதிகரித்தால் வங்கிகள் உருவாவதும், பணப்புழக்கம் மந்தமாகும் போது வங்கிகள் திவாலாவதும் 2009இல் அமெரிக்காவையும் 1941-44இல் இந்தியாவையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே புரியும்.

1969-இல் வங்கிகளை அரசுடைமையாக்கிய போது அந்த வங்கிகள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி இருந்தன. அதைக் காப்பாற்றத்தான் இந்திரா காந்தி அரசுடமையாக்கினார் என்ற குற்றச்சாட்டை எழுத்தாளர் பிரேம்நாத் பசாஸ் தன் ‘இந்திய வரலாற்றில் பகவத்கீதை’ என்ற நூலில் சொல்லியுள்ளார். 

வங்கிப் புரட்சிக்குப் பின் 1971இல் வங்கப் போரின் வெற்றியில் புகழின் உச்சத்தில் இருந்த இந்திரா காந்தி அரசு, 1972-இல் நிதிநிலை அறிக்கையில் 52 விழுக்காடு ராணுவத்துக்குச் செலவிடக்கூடிய அவலத்தில் இயங்கியது. அப்போதைய நம் பணவீக்கம் 40 விழுக்காடாக இருந்தது.

1969க்குப் பிறகு இந்திரா காந்தியின் அமைச்சரவையில் மோகன் குமாரமங்கலம் போன்ற கம்யூனிஸ்ட்கள் அமைச்சர்கள் ஆனதோடு சில முக்கிய பதவிகளிலும் அமர்த்தப்பட்டார்கள்.

1969இல் நடந்த வங்கி அரசுடமையாக்கலுக்குக் காரணம் இந்திராவின் தொலைநோக்குக்குச் சிந்தனையோ, கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட்களின் நிர்பந்தமோ, இல்லை, தனியார் வங்கிகளை நிதிநெருக்கடியில் இருந்து காப்பாற்றும் முயற்சியோ என மூன்று விதமான காரணங்கள் இருந்தன.

இதுவரை இந்தியாவின் பொருளாதார பலம் என்றால் அது அரசு வங்கித்துறையின் நம்பகத்தன்மைதான்.

இன்றைக்கு 2019 ஜூலை 19-இல் வங்கிப்புரட்சி நடந்து 50ஆண்டை கொண்டாடப் போகின்றன பொதுத்துறை வங்கிகள்.

இனிவரும் காலங்களில் அரசு வங்கிகள் இந்தியாவின் பொருளாதாரத்துக்கு ஒரு உந்துசக்தியாக இருக்கப் போவதில்லை.

அரசு வங்கிகளை அழித்தொழிக்கும் வேலையை மைய அரசு தொடங்கிவிட்டது.

ஒவ்வொரு அரசு வங்கியும் வாராக்கடன் என்ற வசூலிக்கமுடியாமல் போகும் கடன்கள், லட்சக்கணக்கான கோடிகளில் நிலுவையால் அடுத்தகட்டச் செயல்பாட்டுக்குப் போகமுடியாமல் திணறுகின்றன.

விஜய் மல்லையா 9,000 கோடி வங்கி கடன் ஏமாற்றினார் என்றால், அதில் 8,000 கோடி அரசு வங்கிகளில் வாங்கிய கடனாகத்தான் இருக்கும்.

இன்றைக்கு ரிலையன்ஸ் Jio நிறுவனம் 25 ஆயிரம் கோடியில் தொடங்கி அவற்றின் பேரில் ஒன்னேகால் லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்துக்கே இவ்வளவு கடன் கொடுக்கும் கொடுமை ஒருபுறம் இருக்க, சமீபத்தில் ரிசர்வ் வங்கி அளித்த மற்றொரு விவரத்தின் படி, வங்கிகள் வழங்கிய கடன்களில் 30 வாடிக்கையாளர்கள் மட்டும் சுமார் ரூ.8.42 லட்சம் கோடிகளைப் பெற்று உள்ளனர்.

 மொத்த வங்கிக் கடன்களின் மதிப்பு ரூ.85.16 லட்சம் கோடிகள். அதாவது மொத்தக் கடன்களில் 10 சதவீதத்தை வெறும் முப்பதே வாடிக்கையாளர்கள் பெற்றுள்ளனர். 

 விவசாயத் துறைக்கு வழங்கப்பட்ட மொத்தக் கடன்களின் மதிப்பே ரூ. 11.07 லட்சம் கோடிகள்தான். இதில் வாராக்கடன் என்பது 9 லட்சம் கோடிக்கு மேல் போய்விட்டது.

இன்றைக்கு இந்தியாவில் 27அரசு வங்கிகளும் 55 தனியார் வங்கிகளும் செயல்படுகின்றன. ஆனால் வாராக்கடன் அளவு 80விழுக்காட்டிற்கு மேல் அரசு வங்கிகளின் தலையில்தான் விழுந்துள்ளது.

25ஆயிரம் முதலீட்டோடு தொடங்கிய ஜியோவுக்கு ஒரு லட்சம் கோடி கடன் கொடுக்கும் இந்திய அரசுதான், நாலு லட்சம் கோடி சொத்து வைத்துள்ள பி.எஸ்.என்.எல்-க்கு நிதி திரட்ட முடியாமலும், ஊழியர்க்கு ஊதியம் கொடுக்ககூட முடியாமலும் பொதுத்துறை டெலிகாம் நிறுவனத்தை அழித்தொழிக்கும் வேலையைச் செய்து வருகிறது.

தனியார் முதலாளிகளின் நலனுக்காக அரசு வங்கிகளை, மீட்க முடியாத பாதாளத்துக்குள் தள்ளி, அரசு சொத்தைத் தனியார்க்குத் தாரை வார்த்து வருகிறது இன்றைய மோடி அரசு.

தற்சார்புப் பொருளாதார வளம் என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பு போன்றது.

அது மீண்டும் அந்நிய நாடுகளின் கைகளுக்கோ, தனியார் முதலாளிகளின் ஆளுகைக்கோ, போனால் அறிவிக்கபடாத அந்நிய ஆட்சியின் முதுகெலும்பற்ற கொத்தடிமைகள் போன்று மக்கள் வாழ வேண்டிய அவலநிலை உருவாகும். 

இன்றய இந்தியாவின் பொருளாதார வளம் என்பது வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுனங்கள் பொதுத்துறை நிறுவனமாக இந்திரா காந்தி அம்மையார் உருவாக்கிய வங்கி புரட்சியால் ஏற்பட்டவையே. 

இந்திரா காந்தியால் ஏற்பட்ட வங்கிப் புரட்சியை, தனியாருக்கும், பெரு முதலாளிக்கும் தாரைவாக்கும் வேலைகளைச் சங்கிப்புரட்சியாக சங்கிகள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

சங்கிப் புரட்சி முழுமையாக நிறைவேறினால் இந்தியாவின் எதிர்காலம் இருண்டகாலமாகத்தான் இருக்கும்...

Pin It