பொருளாதார வீழ்ச்சி சரி செய்யப்படும் என்று கூறியுள்ள நிர்மலா சீதாராமன், அதற்குப் பின்னால் அறிவித்து வரும் அறிவிப்புகள், மேற்கொள்ளும் செயல்கள் யாவும் நாட்டு மக்களுக்கு அச்சத்தை மேலும் அதிகரிக்கவே செய்திருக்கிறது.

nirmala sitharaman on bank mergingதொடர்ந்து 2ஆவது முறையாக பாஜக ஆட்சியமைத்து 100 நாட்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் சிறு குறு நிறுவனங்கள் முதல் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பெரு நிறுவனங்கள் வரை கடுமையான தொழில் மந்தத்தை எதிர் கொண்டுள்ளதாக அன்றாடம் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அசோக் லேலாண்ட், டிவிஎஸ், மாருதி போன்ற முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் ஊழியர்களுக்குக் கட்டாய விடுமுறை அளித்து நெருக்கடியை சமாளிக்க முயன்று வருகின்றன. பார்லே ஜி பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் 10ஆயிரம் பேரை நீக்கத் திட்டமிட்டுள்ளது. பொருளாதார மந்த நிலையைச் சமாளிக்க முடியாமல் பல சிறு குறு நிறுவனங்கள் மூடுவிழா கண்டு வருகின்றன. கோவையில் வட இந்திய தொழிலாளர்கள் மட்டும் சுமார் 40 ஆயிரம் பேர் வேலையிழந்து சொந்த ஊர் திரும்பி வருவதாக அதிர்ச்சியளிக்கும் செய்திகள் வெளியாகின. ஒட்டுமொத்த பொருளாதாரமும் சரிந்து உற்பத்தித் துறை முற்றிலும் முடங்கியிருப்பதை உணர்த்தும் விதமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5 விழுக்காடாகச் சரிந்திருப்பதை புள்ளியல் துறை தரவுகள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த சரிவு என்பது கடந்த 21 காலாண்டுகளில் இந்தியா கண்டிராத அளவுக்கு மிகப் பெரியது.

பொருளாதார வீழ்ச்சியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அரை குறையாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இதற்கு நேர்மாறாக 100 நாள் ஆட்சியில் மிகப்பெரிய சாதனையைச் செய்துவிட்டோம் என்று கூறிவருகிறார் மோடி. வீழ்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வதுதான் இவர்களின் சாதனை போல. அது ஒருபுறம் இருக்கட்டும்.

உபரி நிதி ரூ. 1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அளிப்பதாக அறிவித் திருக்கிறது. அந்த நிதியை என்ன செய்யப் போகிறார்கள் என்பதற்கும் இதுவரையில் விளக்கம் இல்லை. ரிசர்வ் வங்கியின் உபரி நிதியைப் பெறவே முன்னாள் ஆளுநர்கள் ரகுராம் ராஜன், உர்ஜித் பட்டேல் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டார்களா? அவர்கள் பதவி விலகச் செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு நெருக்கமான, பொருளாதாரத் துறைக்குச் சம்பந்தம் அற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி சக்திகாந்த தாஸ் ஆளுநராக நியமிக்கப்பட்டாரா என்ற சந்தேகமும் இப்போது வலுத்துள்ளது.

இதனிடையே ஆகஸ்ட் 30ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் 4 பெரிய பொதுத் துறை வங்கிகளுடன் 6 சிறிய பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்படுவதாக அறிவித்தார். இவரது அறிவிப்பின்படி பஞ்சாப் நேசனல் வங்கியுடன் (இந்த வங்கியில் தான் ரூ. 13,800 கோடி மோசடி செய்துவிட்டு லண்டன் தப்பியோடினார் நீரவ் மோடி) ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 2 வங்கிகள் இணைக்கப்படு கின்றன.

தமிழகத்தின் பட்டிதொட்டி தோறும் கிளைகளைப் பரப்பி, லாபகரமாக இயங்கும் கனரா வங்கியுடன் நட்டத்தில் இயங்கும் சிண்டிகேட் வங்கி இணைக்கப்படுகிறது. யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கியும், கார்ப்பரேசன் வங்கியும் இணைக்கப்படு கின்றன. அதேபோல இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகள் தொடர்ந்து இணைக்கப் படுவதால் 2017இல் 27ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை தற்போது 12ஆகக் குறைந் துள்ளது. பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்படு வதால் உலகின் மிகப் பெரிய வங்கிகள் இந்தியா வில் இருக்கும் என்றும், இதன்மூலம் பொருளா தாரம் வளர்ச்சி அடையும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறுகிறார்.

வீழ்ச்சியடைந்த துறைகளின் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றைச் சரிசெய்து மந்த நிலையைப் போக்காமல் வங்கியை இணைத்தால் போதும், எல்லாம் சரி ஆகிவிடும் என்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து ஏற்கத் தக்கதாக இல்லை. வங்கிகளை இணைத்து விட்டால் வங்கிகளின் பிரச்சினை தீருமா என்பதே மிகப் பெரிய கேள்விக்குறி. இந்திய பொதுத் துறை வங்கிகளின் அடிப்படை சிக்கல் என்பதே வாராக் கடன்தான். மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 6 ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் கூடிதான் உள்ளதே தவிர குறைந்த பாடில்லை. 2019ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி கணக்குப்படி பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு 7.9 லட்சம் கோடி ரூபாய். இந்த கடனை மீட்பதற்கான முயற்சிகள் குறித்து எந்த அறிவிப்பையும் நிர்மலா சீதாராமன் வெளியிட வில்லை. அதற்கு மாறாக மறுமூலதன நிதி என்ற பெயரில் வாராக்கடன் சுமையி லிருந்து மீள அரசு உதவுவது போல நாடகங்கள் அரங்கேறுகிறது. பல ஆயிரம் கோடிகளில் கடனை பெற்றுவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்ற பண முதலைகளிடம் வாராக் கடனை வசூலிப்பதும், இனி ஏமாறாமல் இருப்பதும் தான் பொதுத் துறை வங்கிகளைக் காப்பாற்றும் என்பதுவே பொருளாதார ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அது மட்டுமின்றி, உலகம் முழுவதும் 50 விழுக்காடு வங்கி இணைப்புகள் கூட வெற்றி அடையவில்லை என்கிறார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ஒய்.வி.ரெட்டி.

வங்கி இணைப்பு நடவடிக்கையால் ஊர்ப் புறங்களில் உள்ள கிளைகள் ஒவ்வொன்றாகக் குறைக்கப்படலாம். ஏடிஎம்கள் எண்ணிக்கை குறைக்கப்படலாம். அவ்வாறு குறைக்கப் பட்டால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகலாம். தற்போது நாடு முழுவதும் 4 லட்சத்துக்கும் அதிகமான வங்கி ஊழியர்கள் உள்ளனர். வங்கி இணைப்பு வங்கி ஊழியர்களின் பணிக்கு உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தும். படிப்படியாக ஆட்குறைப்புகள் செய்யப்படலாம். புதிய பணியிடங்களின் தேவை பெருமளவில் குறைந்துபோகும். பதவி உயர்வுகள் குறையும். இந்த அச்சத்தாலேயே வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும், போராட்டத்தில் குதித்தனர். ஆனால் வங்கி ஊழியர்கள் வேலை பறிபோகாது என்று நிர்மலா சீதாராமன் கூறுகிறார். பண மதிப்பழிப்பு, ஜிஎஸ்டியின் போதும்கூட எந்த பாதிப்பும் இல்லை என்று இப்படித்தான் நம்பிக்கை அளித்தார்கள். ஆனால் பொருளாதார சரிவுக்கு அடித்தளமிட்டதே அவையிரண்டும்தான் என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

வங்கிகள் இணைக்கப்பட்டு பெரிய வங்கிகளாக இருந்தால் பொருளாதாரம் வளரும் என்பது உண்மையானால், மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ ஏன் வாராக் கடன் சுமையி லிருந்து மீள முடியாமல் தவிக்கிறது என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். எஸ்.பி.ஐ. வங்கியுடன் இதுவரை 5க்கும் மேற்பட்ட சிறிய வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. வங்கிகள் இணைக்கப் பட்ட பின்னர் வாராக் கடன் சுமை குறைய வில்லை, மாறாக அதிகரித்துக் கொண்டேதான் உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் சுமார் ரூ. 32,000 கோடி மதிப்பிலான 2,480 வங்கி மோசடிகள் 18 பொதுத் துறை வங்கிகளில் நடந்துள்ளன. இதில் எஸ்.பி.ஐ வங்கியில் மட்டும் ரூ. 12,012.77 கோடி மதிப்பிலான 1,197 மோசடிகள் நடந்துள்ளன. அதாவது ஒட்டு மொத்த மோசடிகளில் சுமார் 50ரூ எஸ்.பி.ஐ. வங்கியில்தான் நடந்துள்ளது. குறைவான மோசடிகள் நடந்த வங்கிகளாக இந்தியன் வங்கி, ஆந்திரா வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கிகள் உள்ளன. இந்த தகவல்கள் ஆர்டிஐ மூலம் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவரால் அண்மையில் பெறப் பட்டது. பெரிய வங்கிகள் எல்லாம் வலுவான வங்கிகள் என்று நம்பவைக்கும் தந்திரம் இதன் மூலம் பொய்த்துப்போனது.

இலாபகரமாக இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களுடன் நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இணைத்தபோது இதற்கு முன்பும் பொருளாதாரம் வளர்ந்து விடவில்லை என்பதும், லாபத்தில் இயங்கிய நிறுவனங்களும் நட்டத்தை மேலும் சந்தித்ததுதான் மிச்சம் என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டியது. குறிப்பாக ஏர் இந்தியா நிறுவனம் ஒருகாலத்தில் லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.

2007ஆம் ஆண்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியாவுடன் இணைக்கப் பட்டதில் இருந்துதான் ஏர் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் இழப்பைச் சந்தித்து வருகிறது. இன்று ஏர் இந்தியா 50,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனில் சிக்கித் தவிக்கிறது. கடும் நெருக்கடியிலிருந்து ஏர் இந்தியாவை மீட்க முடியாமல் இப்போது அதனை விற்பதற்குத் தனியார் நிறுவனங்களின் கதவைத் தட்டி கொண்டிருக்கிறது மத்திய அரசு. ஆனால் எந்த நிறுவனமும் ஏர் இந்தியாவை வாங்க இதுவரை யிலும் முன்வரவில்லை. வேறு வழியின்றி ஏர் இந்தியாவின் சொத்துகளை ஒவ்வொன்றாக விற்றுக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. ஏர் இந்தியா விமானங்களின் எண்ணிக்கையையும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனால் ஊழியர்கள் வேலையிழப்பும் அரங்கேறி வரு கிறது.

நட்டத்தை காரணம் காட்டி மற்ற பொதுத் துறை நிறுவனங்களை விற்கும் போக்கை போல, வாராக்கடனை காரணம் காட்டி நாளை பொதுத் துறை வங்கிகளும் தனியாருக்குத் தாரை வார்க்கப் படும் சூழலும் ஏற்படலாம். வங்கித் துறையை 100ரூ தனியார் மயமாக்கும் முயற்சிக்கான அடித்தளமாக வங்கி இணைப்புகள் அமையலாம். ரயில்வே துறையையே தனியார் மயமாக்கத் துணிந்து விட்டவர்களுக்கு வங்கிகளை தனியார் மயமாக்கு வதில் மட்டும் என்ன தயக்கம் இருக்கப் போகிறது?

பொதுத்துறை வங்கிகளுக்கு மூடுவிழா காண ஒவ்வொன்றாக இணைத்து வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதைத் தீவிரப்படுத்தி யுள்ளார்கள் என்பதாகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது.

- ர.பிரகாஷ்

(கட்டுரையாளர் : பெரியாரிஸ்ட் - ஊடகவியலாளர்)

Pin It