வறட்டுத்தனமும்
வருணப்பூச்சும் நிறைந்த சாதிய வெளியில்
எவற்றினைக் கூறிட்டுப் பார்த்தாலும்
கூர்தீட்டப்பட்டிருக்கிறது
தூய்மையும் தீட்டும்

சுயஅடையாளமற்று எவரொருவரும்
அசைந்திட முடியா
பிறப்பின் வாசத்தையும்
சாதியின் தோற்றத்தையும் வைத்தே
வெளியின் அதிகாரம் பரவலாக்கப்படக்கூடும்

வக்கிரப்படிநிலை கொண்ட
சாதியின் கொடுவாள்கள்
தேவையின் தன்மை உணர்ந்து
தக்கவைத்துக் கொள்ளும்
தன் அடையாள இருப்பை

எவற்றையெல்லாம் தீட்டென
ஒதுக்கி வைத்தாயோ
அதையும் சதுர்வர்ணத்தாலே
நக்கிடத்துடிக்கும் சபலப்புத்தியும்
வெக்கங்கெட்ட சாதிவெறியும்
தெறிக்கும் உன் விரைத்த குறியில்

பிய்த்தெறியப்பட்ட வெளியில்
உயிர் வதைக்கும் வலியாய்
சேரி தீட்டென
ஒதுக்கி வைத்த எம்குலப்பெண்களை
பொய்ப்பித்தலாட்ட வலையில் மல்லாரச்செய்து
மண்டியிட்டு நக்கும் போது
எங்கே போனது?
உனது சாதிய கோட்பாடு

நீ தொட்டு நக்குவது
காலையோ, கையையோ அல்ல
பிறப்பால் இழிவென ஒதுக்கித்தள்ளிய
சேரியின் பிறப்புறுப்பை

ச்சீ………..ச்சீ…….
நாய்கள் புணரும் நடுவீதியில்
நான்கைந்து பேர் சேர்ந்து
நக்கிடத்துணியும்
உரிமையை யார் தந்தது உனக்கு

புனிதமும் தீட்டும் மோதிக்கொள்ளும்
முரண்களுக்கிடையில் கிளர்ந்தெழும்
மானங்கெட்ட சாதிக்கோட்பாட்டின் வதை குழியில்
யாரை ஒதுக்கித் தள்ளுகிறாய்?

ஆகமக் குருதியையும், ஆதிக்கவெறியையும்
புறத்தே வைத்து முறுக்கேறிய
மிருகத்தின் வெறிகொண்டலையும் ஆண்குறியை
அறுத்தெறிய காத்திருக்கிறது
சேரியின் பண்ணரிவாள்கள்………

- நீதிமலர், வழக்குரைஞர்