நம் நாட்டு பிராமணப்பத்திரிகைகளும் அதன் பிராமண நிரூபர்களும் செய்து வரும் அயோக்கியத்தனங்களைப் பற்றி நமது பத்திரிகையில் கடுகளவு சுத்த ரத்தம் உள்ளவர்களுக்கும் இனி இம்மாதிரி நடக்காமலிருக் கும்படியும், மானம், வெட்கம் வந்து தீரும்படியும் பல தடவைகளில் எழுதி வந்திருக்கிறோம். அநேகக் கூட்டங்களிலும் நன்றாய்ப்படும்படி பேசியும் வந்திருக்கிறோம். வேறொரு கூட்டத்தாராய் இருந்தால், ஒன்று யோக்கியர்களாகி இருப்பார்கள் அல்லது தற்கொலையாவது புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால், என்ன சொன்னாலும் தங்கள் காரியமானால் போதும் என்கிற எண்ணத்தின் பேரில் மற்றவர்களை எப்படியாவது ஒழித்து வயிறு வளர்ப்பதற்கு மனுஷ சுபாவத்தையே உதறிவிட்டு மேலும் மேலும் அயோக்கியத்தனமான காரியங்களையே செய்து வருகிறார்கள். இந்த மானமற்ற, கூட்டத்தை நமது நாட்டில் இப்படியே வைத்துக்கொண்டு நாம் எப்படி விடுதலையடைய முடியும்? ஸ்ரீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் நாகை தொழிலாளர் கூட்டத்தில் பேசியவற்றைப் பற்றி ‘இந்து’, ‘சுதேசமித்திரன்’ பத்திரிகைகள் அதன் நிரூபர்கள் எழுதுகிறார்கள் என்று எழுதியிருப்பதானது வேண்டுமென்றே எழுதியிருக்கும் அயோக்கியத்தனமான எழுத்துக்களாகும். நல்ல ஜாதியான்களாயிருந்தால் நாயக்கர் பேசியவற்றை எழுதி அதற்கு தகுந்த மறுப்புகளை எழுதும். அப்படிக்கில்லாமல் பாமர ஜனங்களை ஏமாற்றிப்பிழைக்கிற ஜாதியானதால் பேசியவைகளையும் விட்டு, நடந்த விஷயங்க ளையும் விட்டு, நடக்காததை எழுதி வயிறு வளர்க்க ஆசைப்படுகிறது.
அக்கூட்டத்தின் முடிவில் சங்க உதவி அக்கிராசனர் எழுந்து ஸ்ரீமான் நாயக்கரின் அபிப்ராயந்தான் தனது அபிப்பிராயமென்றும் இவ்வருஷம் சங்க ஆண்டு விழாவுக்கு ஒரு தொழிலாளரையே அக்கிராசனராய்த் தெரிந்தெடுக்கப்போவதாயும், ஆனால் சங்கத்தில் உள்ள சில அங்கத்தினர் ராஜீய விஷயங்களில் பிரவேசித்து சங்க நடவடிக்கையைக் கெடுக்கிறார்கள் என்றும், உதாரணமாக சங்கத்தின் சார்பாய் ஒரு கதர் டிப்போ வைப்பதை சங்கத்தில் உள்ள சுயராஜ்யக்கட்சியைச் சேர்ந்த அங்கத்தினரே கெடுத்தார் என்றும், இன்னும் பலவிதமாய் ராஜீய அபிப்ராயங்களை சங்கத்தில் கொண்டு வந்து விட்டு சங்கத்தை ஒழுங்காய் நடைபெற முடியாமல் சூழ்ச்சிகள் செய்கிறார்கள் என்றும், ஆதலால் தான் இதில் ஸ்தானம் வைப்பதில் பிரயோஜனமில்லை என்றும் சொல்லி ராஜிநாமா கடிதத்தை வாசித்தார். சங்க காரியதரிசியும் இதை ஒட்டியே சில வார்த்தைகள் சொன்னார். பிறகு, பலர் கேட்டுக் கொண்டதின் பேரில் அதைத் திருப்பி வாங்கிக் கொண்டார். இப்படி இருக்க ஸ்ரீமான் நாயக்கர் சொல்லுவதைத் தான் ஒப்புக் கொள்ளவில்லை என்றும், அந்நியர்கள்தான் சங்கத்திற்கு உதவி தலைவராயிருக்க வேண்டுமென்று சொல்லி அதற்காகவேதான் ராஜிநாமா செய்வதாக சொன்னாரென்றும் ‘ இந்து’, ‘சுதேசமித்திரன்’ பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன. இது யோக்கியமானதாகுமா? நாம் கடினமான பதம் உபயோகிப்பதாய்ச் சொல்லும் மிருதுவான பதக்காரர்கள் இதற்கு என்ன பதில் சொல்லுவார்கள்?
தொழிலாளர் சங்கத்தில் தொழிலாளி அல்லாதவர்கள் ஆதிக்கம் இருக்கக் கூடாது என்றால், இந்த அய்யர், அய்யங்கார் கூட்டங்களுக்கு இவ்வளவு ஆத்திரம் வந்து, இவ்வளவு அல்பத்தனமான காரியம் செய்வானேன்? டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள்கூட தொழிலாளர் நிர்வாகத்தில் அந்நியர் கூடாது என்பதை ஒப்புக்கொள்ளுகிறார். பாவம்! ஏழைத் தொழிலாளரான வாயில்லாப் பூச்சிகளை ஏமாற்றி, தலைவர்களாகி, அவர்களின் ஓட்டு வாங்கி, பிராமணரல்லாதார் தலையில் கையை வைப்பதற்கு யாராவது விரோதமாயிருந்தால் அவர்களை அடியோடு ஒழிப்பதற்கு இவ்வளவு கொலை பாதகம் செய்யவேண்டுமா? இதுபோலவே கொஞ்ச நாளைக்கு முன் ஸ்ரீமதி அலர்மேலுமங்கைத் தாயாரம்மாள் சொன்ன காலத்திலும் இந்தப் பிராமணப்புலிகள் சீறி விழுந்தனர். இந்த பிராமண சிகாமணிகளுக்கு தொழிலாளிகளிடம் அன்பு இருக்குமானால் வெளியிலிருந்து செய்யட்டுமே. முனிசிபல் எலக்ஷனில் யாராவது ஒரு தொழிலாளியை நிறுத்தி ஓட்டு வாங்கிக்கொடுக்கட்டுமே. சட்டசபைக்கு யாரையாவது நிறுத்தி ஓட்டு வாங்கிக் கொடுக்கட்டுமே. ஸ்ரீமான் புர்ரா, பாஷ்யம், மல்லய்யா, ஈ.எல். அய்யர் ஆகிய இந்த பிராமணர்களுக்காக பணம் சிலவு செய்து கவுன்சிலராக்குகிறவர்கள் ஏன் இந்த தொழிலாளிகளில் ஒன்று இரண்டு ஆள்களுக்கு செய்யக்கூடாது. அதையெல்லாம் விட்டு விட்டு தொழிலாளிகளுக்கு என்ன வேண்டும் என்பதே தெரியாத சில பொறுப்பற்ற பிராமணர்கள் ஒன்று சேர்ந்து கொள்வதும், நாங்கள் தான் தொழிலாளிகளுக்கு தர்மகர்த்தா, எங்களுக்கு ஓட்டுக் கொடுங்கள். உங்களுக்கு சாதித்து விடுகிறோம் என்று அவர்களை ஏமாற்றுவதும் அதற்கேற்றாற் போல் தொழிலாளிகள் கூட்டத்தில் ஏதாவது ஒன்று இரண்டு வாயாடிகளை ஏதேனும் கொடுத்து சுவாதீனம் செய்துக்கொண்டு அவர்கள் தயவில் உபசாரப்பத்திரம், மாலை, வண்டி சவாரி, ‘ஜேய்’ முதலியவைகள் அநுபவிப்பதுமான காரியங்களுக்கு மாத்திரம் தொழிலாளிகளின் தலைவர்களாக வேண்டுமானால் இது எப்படி நடக்கும்? இனியாவது நமது தொழிலாள சகோதரர்கள் இந்த பொய்யர்கள், வம்பர்கள், சுயநலப்புலிகள் ஆகிய கூட்டத்தாருக்கு இடம் கொடுக்காமல் தங்கள் காலிலேயே தாங்கள் நிற்கும்படியான யோக்கியதையை அடைய வேண்டுகிறோம். அதோடு கூடவே இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளையும் நம்பி மோசம் போகாதீர்கள் என்று எச்சரிக்கை செய்கிறோம்.
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.06.1926)