foxconn workers strikeஇந்த முறை மட்டும் திமுக ஆட்சிக்கு வரவில்லை என்றால் தமிழ்நாடு பாசிஸ்ட்டுகளின் கைகளில் மாட்டிக் கொண்டு சீரழிந்து விடும் என்று அதன் ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல் சில போலி புரட்சிவாதிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு பரப்புரை செய்தார்கள்.

அவர்களுக்கு நன்றாகவே தெரியும், திமுக அப்படி ஒன்றும் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் கட்சி அல்ல என்று. கடந்த காலங்களில் திமுக பல்வேறு முற்போக்கு அமைப்புகளையும் குறிவைத்து பழிவாங்கி இருக்கின்றது. தொழிலாளர்களின் மீது கொடுந்தாக்குதலை நடத்தி இருக்கின்றது.

கடந்த திமுக ஆட்சியில், என்எல்சி நிர்வாகமும், பாக்ஸ்கான் நிர்வாகமும் திமுகவின் தொழிற்சங்கமான தொமுசவும் இணைந்து நின்று தொழிலாளர்கள் ஏற்க மறுக்கும் ஒப்பந்தத்தை திணிக்க முயற்சி செய்கின்றார்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் நடத்தின.

இதுபோல் ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா செல்போன் தொழிற்சாலை போன்ற பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், தொழிலாளர்கள் பழி வாங்கப்படுவதாகவும் இத்தகைய தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு அன்றைய திமுக அரசு உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த திமுக ஆட்சியில் டாஸ்மாக் மற்றும் சத்துணவு தொழிலாளர்கள் போராடிய போது அவர்களை ஒடுக்க காவல் துறையை ஏவிவிட்டதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

திமுகவின் கடந்த கால கார்ப்ரேட் சேவைகளை பக்கம் பக்கமாக எழுதிய போலி புரட்சியாளர்களில் இருந்து கூலிக்கு மாரடிக்கும் முற்போக்குவாதிகள் வரை இதை நன்றாகத் தெரிந்து கொண்டுதான் திமுகவை ஆதரிக்கச் சொல்லி எந்த சங்கடமும் இன்றி ஓட்டு கேட்டார்கள்.

மக்களும் பேயிக்கு ஓட்டு போடவில்லை என்றால் பிசாசு வந்துவிடும் என்று பயந்து ஓட்டு போட்டார்கள். ஆனால் என்ன ஆனது? ஒரு கார்ப்ரேட் கட்சி எப்போதுமே தொழிலாளர்களின் நலனில் அக்கறையோடு செயல்படாது என்பதோடு, அந்த தொழிலாளர்கள் தங்களின் நியாயமான உரிமைக்காகப் போராடினால் அவர்களைத் திட்டுமிட்டு பழிவாங்கும் என்பதையும் தான் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆவதற்குள் மக்களுக்கு திமுக தெளிவுபடுத்தி உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஃபாக்ஸ்கான் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைக்கு வெளி மாவட்டங்களில் இருந்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்களை, தொழிற்சாலை நிர்வாகம் ஆங்காங்கே விடுதிகள் எடுத்து தங்க வைத்து உணவு வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் பூந்தமல்லி அருகே விடுதியில் வழங்கிய உணவை சாப்பிட்ட பெண்கள் 200 பேருக்கு திடீரென்று வாந்தி - மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 8 பெண்கள் திடீரென காணாமல் போனதாகவும், அந்த பெண் ஊழியர்கள் கெட்டுப் போன உணவு சாப்பிட்டு இறந்து போனதாகவும் தகவல் பரவியது. இதனால் 2000-க்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஓரகடம், வட்டம்பாக்கம், ஆகிய 4 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஆனால் திமுக அரசு தொழிலாளர்களுக்கு தரம் குறைந்த உணவை வழங்கக் காரணமான ஆலை நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்யாமல் தங்களின் உரிமைக்காகப் போராடிய 68 பெண் தொழிலாளர்களையும், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த CITU தொழிற்சங்க நிர்வாகிகள் 22 பேரையும் தனது அடிமை போலீசை விட்டு கைது செய்ய வைத்துள்ளது.

அவர்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொழிற்சங்க நிர்வாகிகள் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காஞ்சிபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

விடியல் அரசு யாருக்காக வேலை செய்து கொண்டு இருக்கின்றது என்பதை முகத்தில் அடித்தார்போல சொல்லிவிட்டது.

ஆனால் இன்னமும் பல முற்போக்கு அமைப்புகள் அதற்கு கண்டனம் கூட தெரிவிக்கத் துப்பற்ற அடிமை நிலையில் உள்ளன. நிச்சயமாக இவர்கள் தமிழகத்தில் பாசிசம் தலைதூக்கி விடக்கூடாது என்ற எண்ணத்தில் திமுகவிற்கு ஓட்டு கேட்டிருந்தால் இந்நேரம் திமுகவின் தொழிலாளர் விரோத நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுத்து இருப்பார்கள்.

ஆனால் இவர்களின் இன்றைய செயல்பாடுகள் இவர்கள் அனைவரும் விலை போனவர்கள் என்பதைத்தான் அப்பட்டமாகக் காட்டுகின்றது. இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு திமுகவிற்கு துதி பாடுவது மட்டுமே இவர்களின் வேலையாக இருக்கப் போகின்றது.

ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களின் பிரச்சினை என்பது வெறும் தரமற்ற உணவு, சுகாதாரமற்ற தங்குமிடம் போன்றவற்றை மட்டுமே சார்ந்த ஒன்றல்ல. அப்படி இருந்தால் ஆயிரக்கணக்கான பெண்கள் சாலைக்கு வந்து போராடி இருக்க மாட்டார்கள்.

பிரச்சினையின் மையம் என்பது அந்தத் தொழிலாளர்கள் ஒப்பந்தப் பணியாளர்களாக குறைவான கூலிக்கு ஒட்ட சுரண்டப்படுகின்றார்கள் என்பதுதான்.

ஒரு நிரந்தர தொழிலாளிக்கு கிடைக்கும் சம்பளமோ, வேலை உத்திரவாதமோ ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு எப்போதுமே கிடைப்பது கிடையாது.

நேரடி தொழிலாளர்களிலும் கூட டெம்ப்ரவரி, டிரைனிங், அப்ரண்டிஸ், பிக்ஸ்சுடு டெர்ம் எம்ளாய் எனப் பிரித்து குறைந்த கூலி அளித்து முதலாளிகள் கொள்ளை லாபம் பெறுகின்றனர்.

ஒப்பந்தப் பணியாளர்கள் பெரும்பாலும் தொழிற்சங்கம் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை அப்படி மீறி தொழிற்சங்கம் வைத்தால் இவர்களின் வேலை காலியாகிவிடும். பெரும்பாலான கார்ப்ரேட் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் அது தொமுசவாக இருந்தாலும் சரி, அண்ணா தொழிற்சங்கமாக இருந்தாலும் சரி, பாட்டாளி தொழிற்சங்கமாக இருந்தாலும் சரி ஒருபோதும் ஒப்பந்தப் பணியாளர்களின் உரிமைக்காக போராடுவது இல்லை.

பெரும்பாலான தொழிற்சாலைகளில் இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு குரல்கொடுக்க யாருமே இல்லை என்பதுதான் உண்மை. ஏன் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் பெரும்பாலான கார்ப்ரேட் தொழிற்சாலைகளில் கார்ப்ரேட் கட்சிகளின் தொழிற்சங்களுக்குக் கொடுக்கப்படும் அனுமதி கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. இதன் பின்னுள்ள வர்க்க நலன் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதே.

சமவேலைக்கு சம ஊதியம், 480 நாள் பணி முடித்தால் நிரந்தரம் என்று சட்டம் கூறினாலும், சம ஊதியமும் நிரந்தரமும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு எப்போதுமே எட்டாக்கனியாகவே நடைமுறையில் உள்ளது

பல தொழற்சாலைகளில் 20 வருடம், 25 வருடம் வேலை செய்தவர்கள் கூட இன்னும் ஒப்பந்தப் பணியாளர்களாகவே வைக்கப்பட்டுள்ளார்கள். இது எல்லாம் தொழிலாளர் நலத்துறைக்கும் ஆட்சியில் இருக்கும் கார்ப்ரேட் கட்சிகளுக்கும் தெரிந்தே நடக்கும் அயோக்கியத்தனங்களாகும்.

1970ல் பாராளுமன்றம் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை முறைப்படுத்தல் மற்றும் ஒழித்தல் சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டம், நிரந்தர தொழிலாளர்கள் பணிபுரிந்த இடங்களில் ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை முதலாளிகள் நியமித்து தொழில் செய்வதை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கிறது.

இதன் மூலம் மத்திய அரசின் தொழில் நிறுவனங்கள், மாநில அரசின் தொழில் நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள் அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக ஒப்பந்தத் தொழிலாளர் முறை கொண்டு வரப்பட்டது.

சமவேலைக்கு சமஊதியம் என்று 1970-ஆம் ஆண்டின் ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் கூறுகின்ற போதிலும், நிரந்தர தொழிலாளருக்கு வழங்கப்படும் ஊதியத்தை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு எந்த நிறுவனமும் எப்போதுமே வழங்குவதில்லை என்பதுதான் உண்மை.

மேற்சொன்ன 1970 ஆம் ஆண்டு சட்டப்படி, ஒரு நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர் முறையைத் தடை செய்வது பற்றிய முடிவை சம்பந்தப்பட்ட அரசாங்கம்தான் அது மத்திய அரசோ, மாநில அரசோ எடுக்க முடியும். நீதிமன்றங்களுக்கு இதற்கான அதிகாரம் இல்லை என்கிறது இந்தச் சட்டம்.

ஆனால் எந்த மாநில அரசும் கார்ப்ரேட்டுகளுக்கு லாபத்தை அள்ளிக் கொடுக்கும் இந்த ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிப்பது பற்றி நினைத்துப் பார்த்தது கூட கிடையாது. தொழிலாளர்களின் குறைந்தபட்ச கூலியைக் கூட நிர்ணயம் செய்யத் துப்பில்லாத அடிமை நிலையில் உள்ள அரசுகளால் இதை எப்படி சாதிக்க முடியும்?

இது போன்ற ஒப்பந்தப் பணியாளர்களுக்கு விடுப்புக்கான உரிமை கிடையாது. அகவிலைப்படி கிடையாது, சம்பளத்தில் ஊதிய உயர்வு கிடையாது, தொழிற்சங்க உரிமை கிடையாது, போனஸ் உத்தரவாதம் கிடையாது, ஓய்வு பெற்றால் பணிக்கொடை கிடையாது. இப்படி எதுமே கிடையாது என்பதுதான் அவர்களின் வாழ்க்கை.

அப்படியான இழிவான வாழ்க்கைதான் ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களை போராட வைத்திருக்கின்றது. ஆனால் பலருக்கு குறிப்பாக கார்ப்ரேட் அடிமைகளுக்கு இதைப் பற்றி தெரியவில்லை, தெரிந்தாலும் இதை விமர்சனம் செய்ய விரும்பவில்லை.

பிஜேபி, காங்கிரஸ், அதிமுக, திமுக போன்ற கட்சிகள் தங்களின் கொள்கைகள் வேறுபட்டவை என்று பொதுவெளியில் சொல்லிக் கொண்டாலும் இவர்கள் அனைவரும் ஒன்றுபடும் புள்ளி என்பது கார்ப்ரேட் சேவை.

பல கோடிகளை தேர்தல் நிதியாக வழங்கும் அம்பானியும், அதானியும், ஃபாக்ஸ்கானும் அவர்களுக்கு முக்கியமே ஒழிய ஒப்பந்தப் பணியாளர்களான குப்பனோ, சுப்பனோ அல்ல.

திமுக மோடியின் வழியில் ஒரு தீவிரமான கார்ப்ரேட் சாம்ராஜ்ஜியத்தை தமிழகத்தில் கட்டியமைக்க விரும்புகின்றது. அதற்குத் தடையாக யாராக இருந்தாலும் அது தனது கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியாகவே இருந்தாலும் இனி பழி வாங்கத் தயங்காது.

- செ.கார்கி

Pin It