பல்லாண்டு காலம் நடத்தப்படாத நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் இப்போது அறிவிக்கப்பட்டுத் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தி.மு.க ஆட்சிக் காலங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் எப்போதும் உரிய காலத்தில் நடைபெற்றுள்ளன. ஆனால் அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர் காலம் தொட்டு எப்போதுமே உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்தவரை நடக்காமலும், தவிர்க்கமுடியாமலும் கட்டாயம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது தள்ளாட்டத்துடன் நடைபெற்றது என்பது வாடிக்கை.

1957 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க முதன்முதலாக போட்டியிட்டு 15 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றது. 1959ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலில் வெற்றி வாகை சூடி மாநகராட்சியைக் கைப்பற்றியது.

தி.மு. கழகத்தின் முதல் மேயராக அ.பொ. அரசு பொறுப்பேற்றார். அப்போதெல்லாம் மாநகராட்சியின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். அதில் மேயர்களின் பதவிக்காலம் ஓராண்டு மட்டுமே.

 1977ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சி பொறுப்பேற்ற பின் 1986 வரை உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படவில்லை.

1991ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பு ஏற்ற அம்மையார் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. 1996ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின் மீண்டும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன.

 2006ஆம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் தி.மு.கழகம் மீண்டும் வெற்றி வாகை சூடி, மக்கள் தொண்டர் மா.சுப்பிரமணியம் மேயர் பொறுப்பினை ஏற்றார். 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சைதை துரைசாமி மேயராகத் தேர்வு செய்யப்பட்டார். 2016ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படவில்லை.

தேர்தல் தோல்வி பயத்தில் உள்ளாட்சித் தேர்தல்களைத் தவிர்த்து வந்தனர். தேர்தலை நடத்தச் சொல்லி வழக்குத் தொடர்ந்து ஒருவழியாக 2020ஆம் ஆண்டு கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதிலும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தாமல் தவிர்த்தனர்.

 2021-இல் திமு கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அவற்றில் தி.மு.கழகம் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. இப்போது முதல்வர் ஸ்டாலின் நகப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த ஆணையிட்டுள்ளார்.

கொரோனாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 4000 நிதிஉதவி உடன் 14 மளிகைப் பொருட்கள், பயிற்சி பெற்ற அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகப் பணி நியமனம், தமிழ்நாடு அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தரும் வகையில் தமிழில் தேர்ச்சி பெறுவோருக்கு மட்டுமே அரசுப் பணி என உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த அதிமுக ஆட்சியில் வட மாநிலத்தவர் எளிதாக தமிழ்நாடு அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பு பெற அதிமுக அரசு வாசல் கதவைத் திறந்து வைத்திருந்தது.

 மருத்துவக்கல்லூரி உயர் படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மோடியின் ஒன்றிய அரசு பறித்தபோது இபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் ஏனென்று கேட்கத் துணிச்சல் இன்றி வேடிக்கை பார்த்த நிலையில், கழகத் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் 27% இட ஒதுக்கீடு வழங்க பிரதமர் மோடியை முடிவெடுக்க வைத்தார். அதுமட்டுமல்ல அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

 மோடி அரசின் வேளாண் விரோதச் சட்டங்களை ஏற்கமாட்டோம் என்று துணிச்சலுடன் முடிவெடுத்து, ஓராண்டு காலத்திற்கும் மேலாகப் போராடி வருகின்ற வடமாநில விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினார்.

இதன் விளைவாக ஒன்றிய அரசு தனது கொடிய வேளாண் திட்டங்களைத் திரும்பப் பெற வைத்தது பெரும் சாதனையாகும். தொழில் துறையிலும் பல்வேறு வெளி மாநில, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தற்போது தமிழகத்தில் முதலீடு செய்து தொழில் தொடங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

கல்வி, வேலைவாய்ப்பு, வேளாண்மை, தொழில், மகளிர் முன்னேற்றம் என அனைத்துத் துறைகளிலும் நல்லாட்சி செலுத்தும் நம் முதல்வர் உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடர நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தி வருகிறார்.

சரியான முறையான குடிநீர் திட்டம் எதுவும் அதிமுக ஆட்சியில் எதிர்பார்க்க முடியாது. மழைநீர் வடிகால் வசதிகளும், சாக்கடை வடிகால் வசதிகளும் முறையாகத் திட்டமிடப்படாததால் மழைக்காலங்களில் மாநகர மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

 தெருவிளக்குகளில் பொருத்தப்பட்ட எல்இடி விளக்குகளில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதைத் திமுக பலமுறை அம்பலப்படுத்தியுள்ளது.

எனவே சீர்மிகு நிர்வாகம் மக்களுக்குக் கிடைக்க உள்ளூர்த் தேவைகளான சாலை வசதி, தெருவிளக்குகள் பராமரிப்பு, சாக்கடை வடிகால் மேம்பாடு போன்ற அடிப்படைத் தேவைகளைத் தமிழக அரசின் துணையோடு மிகச் சிறப்பாகச் செய்ய, உள்ளாட்சியில் நல்லாட்சி காண மதச்சார்பற்ற முற்போக்குத் தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது நமது கடமை.

- பொள்ளாச்சி மா.உமாபதி