மானுடச் சமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண்கள், குழந்தை பெறும் பொறுப்பை இயற்கையின் விதிப்படி ஏற்ற காரணத்தால், ஆண்களுக்கு நிகராகப் பார்க்கப்படாமல் அங்கீகரிக்கப்படாமல் இருந்ததுதான் மானுடச் சமூகத்தின் வரலாறு. தாய் வழிச் சமூகமாக வேட்டையாடி வாழ்ந்த போது இருந்த மரியாதையோ அச்சமோ, நிலைபெற்று இனக்குழுக்களாக வாழும்போது மாறி விடுகிறது. வரலாறு நெடுகிலும் அங்கீகாரத்திற்காகவும் சமத்துவத்திற்காகவும் பெண்கள் பெரும் போராட்டங்களைத் தனி நபராகவும் கூட்டாகவும் எடுத்துக் கொண்டே வந்திருக்கின்றனர். இப்போது ஏற்பட்டிருக்கும் மாற்றம் எப்படி வந்தது? வரும் வாரம் பெண்கள் நினைவுகூரப் போகும் பெண்கள் நாளின் வரலாறு என்ன?

women 600 copyஇன்றிலிருந்து 120 ஆண்டுகள் பின்னோக்கிப் பார்ப்போம். உலகெங்கும் தொழிற்புரட்சி ஏற்பட்டு, நிலப்பிரபுத்துவம் வீழ்ந்து, முதலாளித்துவம் எழுந்த காலம். மேற்குலக, ஐரோப்பிய நாடுகளுக்குள் போட்டியால் முதல் உலகப் போர் மூளவிருந்த தருணம். ஆண்கள் பெருமளவில் போர்க்களங்களுக்குச் சென்று திரும்ப முடியாமல் நெடுங்காலம் வெளி நாடுகளில் தங்க நேரிட, குடும்பச் சுமைகள் பெண்கள் மீது விழுகின்றன.

பெண்கள் ஆலைகளுக்குப் பணிக்குச் செல்வது இன்றியமையாததாக மாறுகிறது. அவர்கள் கையில் பொருளாதாரம் வந்தாலும், ஆலை முதலாளிகள் வரம்பின்றிச் சுரண்டுவதையும் பாலினப் பாகுபாட்டையும் ஏற்க முடியாமல், முதலாளிகளுக்கு எதிராக அணி திரள்கிறார்கள். 1908 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் சிகாகோ நகர் தொடங்கி, நியுயார்க் வீதிகள்வரை 15000 பெண்கள் பணி நேரக் குறைப்பு, சம ஊதியம், ஓட்டுரிமை ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி அணிவகுத்துச் செல்கிறார்கள். இதுதான் பெண்கள் வரலாற்றில் முதல் திரட்சி. அமெரிக்காவின் சோசலிசக் கட்சி 1909 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் நாளை, பெண்கள் தினமாகக் கொண்டாடப் பிரகடனம் விடுக்கிறது. 1910 ஆம் ஆண்டு கோபன்ஹேகன் நகரில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்து கொண்ட இரண்டாவது உழைக்கும் பெண்கள் பன்னாட்டு மாநாட்டில், ஜெர்மன் சோசலிச ஜனநாயகக் கட்சியின் பெண் தலைவர் க்ளாரா ஜெட்கின், ஆண்டுதோறும் பன்னாட்டு மகளிர் தினத்தைக் கொண்டாடும் திட்டத்தை முன்மொழிய, ஏக மனதாக அது நிறைவேறுகிறது.

1911ஆம் ஆண்டு, முதல் பன்னாட்டுப் பெண்கள் தினத்தை ஒட்டி நடந்த பேரணிகளில் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டு பெண்களின் ஓட்டுரிமை, பாகுபாடு நீக்கம் ஆகிய கோரிக்கைகளை எழுப்புகிறார்கள். சிறிது நாள்களிலேயே மார்ச் 25ஆம் நாள் நியுயார்க் நகரில் 140 பெண்கள் பணியிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தம் இன்னுயிரை இழக்கிறார்கள். இக்கோர நிகழ்வு, அமெரிக்க நாட்டில் தொழிலாளர் நலச் சட்டங்களுக்கும், பெண்களின் உரிமைகளுக்கும், அதிகார அமைப்புகளின் தவிர்க்க முடியாத பங்களிப்பை உறுதி செய்தது.

1913 வரை, பிப்ரவரி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை பெண்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. கிரிகோரிய நாள்காட்டியில் அது மார்ச் 8 ஆகும். கிரிகோரிய நாள்காட்டியை உலகம் முழுதும் ஏற்றுக்கொண்ட பிறகே மார்ச் 8 க்கு மகளிர் நாள் மாற்றப்பட்டது.

1914 ல் லண்டன் ட்ரஃபால்கர் சதுக்கத்தில் உலகப் போருக்கு எதிராகப் பெண்கள் அணி திரண்டார்கள். 1917 ல் ருசியப் பெண்கள் 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களைப் போரில் இழந்ததை எதிர்த்து, “உணவும் அமைதியும்” வேண்டி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 4 நாள்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாத ஜார் மன்னர், அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்று, ஓட்டுரிமையும் அளித்தார். இதுதான் பெண்கள் ரஷ்யாவில் அடைந்த முதல் வாக்குரிமை. 1920இல் அமெரிக்காவும் அதற்கடுத்த சில ஆண்டுகளில் மற்ற ஐரோப்பிய நாடுகளும் பெண்களுக்கு வாக்குரிமை அளித்தன. 1921ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற நீதிக்கட்சி ஆட்சியில் பெண்கள் வாக்குரிமை பெற்றனர்.

ஐ.நா மன்றம் முதன் முதலாக 1975 ஆம் ஆண்டு தான் பன்னாட்டு மகளிர் நாளை அங்கீகரித்தது. 1996 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்துக் கொண்டாட்டங்களை முன்னெடுக்க அழைக்கிறது. இந்த ஆண்டு “generation equality” – “சமத்துவத்தின் தலைமுறை”என்ற கருப்பொருளில் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

பெண்கள் முன்னெடுத்த பணி நேரக் குறைப்பிற்கான போராட்டங்களே ஆண்களும் எட்டு மணி நேர வேலை நேரத்தை இன்று உலகெங்கும் அனுபவிக்கக் காரணமானவை. பெண்களுக்கான சமத்துவமும், அங்கீகாரமும் அவர்களுக்கு மட்டுமன்றி மொத்த மானுடத்திற்கே நன்மை பயக்கும் என்று சான்று பகரும் நாளே பன்னாட்டு மகளிர் நாள்.

Pin It