எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார் ஆனால் அவருடனான நேர்காணல் ஏதும் கீற்று-வில் இது வரை இடம் பெறவில்லை. அவர் விருது பெற்றமை குறித்த பா.செ.வின் வயிற்றெரிச்சல் கட்டுரை மட்டுமே இடம் பெற்றது. எனவே எனது ஆய்வுக்காக அவருடன் நான் நிகழ்த்திய ஒரு நேர்காணலை அனுப்பி உள்ளேன். சிறுகதைத் தொகுதிகள் பதினெட்டு, குறுநாவல்கள் நான்கு, நாவல்கள் ஆறு, கட்டுரை நூல் ஒன்று என இருபத்தொன்பது நூல்கள் வெளிவந்துள்ளன. இன்னும் பலநூல்கள் வெளிவரத் தயாராக உள்ளன. சமீப காலமாக நிறைய பல்துறைக் கட்டுரைகள் எழுதி வருகிறார். அவரது மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பிற்குத்தான் சாகித்ய அகடெமி விருது வழங்கப்பட்டிருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள மேலாண்மறைநாடு என்னும் சிற்றூர்தான் அவர் பிறந்து வளர்ந்து வாழும் ஊர். அவ்வூரில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு இன்றும் உள்ள சிறு மளிகைக் கடையை தம்பியுடன் சேர்ந்து கவனித்துக் கொண்டு தன் வாழ்க்கையைத் தொடங்கினார். மனைவி பொன்னுத்தாய். இரு மகள்கள், ஒரு மகன், தம்பி கரிகாலனின் குடும்பம் சேர்ந்த கிராமிய கூட்டுக் குடும்பம். இதுதான் அவரது வாழ்க்கைச்சூழல். இனி அவருடனான உரையாடல்:
தாங்கள் எப்போது எழுதத் தொடங்கினீர்கள்?
எனது இருபத்தியோராம் வயதில் நான் பார்த்த ஒரு நிகழ்ச்சி அடிப்படையில் பரிசு என்னும் என் முதல் சிறுகதை செம்மலர் இதழில் வெளிவந்தது.
தாங்கள் முறையாக கல்வி பெறாமல் இருந்தும் எழுதக்கூடிய மொழியாற்றலை எவ்வாறு பெற்றீர்கள்?
படிக்க முடியவில்லையே என்ற மனக்காயமும் ஏக்கமும்தான் என்னைத் தீவிர வாசிப்புக்கு உள்ளாக்கியது. நூலகங்களே எனது கல்விச்சாலைகளாயின. அங்கு தமிழ் இலக்கியங்கள் இந்தி, ரஷ்ய மொழிபெயர்ப்பு இலக்கியங்கள், அதிலும் குறிப்பாக சிறுகதைகள், புதினங்கள் முதலானவற்றை நிறையப் படித்து கருத்து வளம், மொழிவளம் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டேன். அந்த அடிப்படையில் நூலகம் உருவாக்கிய எழுத்தாளனாக நான் எழுதும் திறன் கைவரப் பெற்றேன்.
தாங்கள் பொது உடைமை கொள்கையிலும் இயக்கச்செயல்பாடுகளிலும் ஈடுபாடு கொண்டவர். அதனால் இயக்கத்தை, பொருளியல் சமத்துவக் கோட்பாட்டை மட்டுமே முன்னிறுத்தி எழுதுவீர்கள். தனிமனித வாழ்க்கை மற்றும் உணர்வுச்சிக்கல்களுக்கு முதன்மை தர மாட்டீர்கள். அதனால்தான் ஆகாயச்சிறகுகள் புதினத்தில், கூச்சமே இயல்பான பெண்ணைக் கூட பொது வாழ்வில் ஈடுபடுவதாக படைத்துள்ளீர்கள் என்று விமரிசிக்கப்படுகிறதே ......
பொதுவாக இடதுசாரிச் சிந்தனையாளர்களும் முற்போக்குப் படைப்பாளிகளும் பொருளியல் காரணங்களையே முதன்மைப்படுத்துவர் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் எல்லாப் படைப்புகளுக்கும் அப்படியொரு முதன்மைப்படுத்துதலைக் கையாள முடியாது. நானும் என்னுடைய படைப்புகளில் பொருளாதாரக் காரணிகளை மட்டுமே முதன்மைப்படுத்தாமல் கல்வி, சமுகச் செயல்பாடுகள், சமுக விழிப்புணர்வு போன்ற பல்வேறு காரணங்களாலேயே பெண்களின் விடுதலை, பெண்களின் உரிமை குறித்த சிந்தனை அவர்களுக்கு ஏற்படுவதாக படைத்துள்ளேன். வறட்டுத்தனமாக, இயக்க ரீதியாக மட்டுமே சிந்திப்பவர்கள் இவ்வாறு எழுத முடியாது.
பெண்ணியம் என்பது குறித்து தங்கள் கருத்து என்ன? தங்கள் படைப்புகளில் எத்தகைய பெண்ணியச் சிந்தனைகளை வெளிப்படுத்துகிறீர்கள்?
மேலைநாட்டுப் பெண்ணியச் சிந்னைகள் நம் நாட்டில் செல்வாக்குப் பெற முடியாது. கீழை நாட்டுப் பெண்ணியமே இன்று நம் நாட்டில் ஏற்கப்படுகிறது. குடும்ப அமைப்பு உடைபடாத பெண்ணியமே இன்று நான் வலியுறுத்துவது; குடும்பத்தை ஜனநாயகப்படுத்துவதன் முலமே பெண்ணுரிமை ஏற்படமுடியும்; குடும்பத்தை உடைப்பதால் அல்ல. ஆணும் பெண்ணும் தோழமையுடன் வாழும்படியான சூழ்நிலையைப் பெண்ணியச் சிந்தனைகள் உருவாக்கவேண்டும் என்பதே எனது கருத்து. ஆனால் இன்று அப்படி இல்லாமல் ஆணுக்குப் பெண்ணடிமை என்ற நிலை அல்லது ஆண்களை மையப்படுத்தி, அவர்களது கௌரவம் கருதியே பெண்கள் செயல்படும் நிலை; இவையே இங்கு நிலவும் சுழ்நிலை. இந்நிலை மாறி ஆணும் பெண்ணும் தோழமையுடன் வாழும் நிலை வேண்டும். அதற்கான களமாக சமுகம் அமைய வேண்டும் என்பதையே எனது எழுத்துகளில் வலியுறுத்துகிறேன்.
தங்களது "முற்றுகை" புதினம் பற்றிச் சொல்லுங்கள்
நான் எழுதிய முதல் புதினம் "முற்றுகை". பூர்ஷ்வா சிந்தனைகளால் முற்றுகை இடப்பட்ட ஆண்கள், பெண்களே அதிக அளவு இடம் பெற்றுள்ளனர். ராமானுஜம் நிலப்பிரபுத்துவப் பண்பாட்டு வாழ்க்கை வாழ்ந்து, பல பெண்களுடன் உறவுகொண்டு தன் சொத்தை எல்லாம் இழந்து விட்டு இறந்துவிடுகிறவர்; அவர் மனைவியும் கூட அவரை எதுவும் கேட்கமுடியவில்லை. நமது திருமணமுறை, திருமணத்திற்குப் பிறகு வேறு நபருடன் உறவு என்பதெல்லாம் பூர்ஷ்வா சிந்தனைகளின் வெளிப்பாடுதான். அதனால்தான் நமது குடும்பத்தில் ஜனநாயகம் இல்லை. இதனையே அப்புதினத்தின் வாயிலாக உணர்த்தியுள்ளேன். நிலப்பிரபுத்துவச் சிந்தனைகளால் மனத்தளவில் முற்றுகை இடப்பட்டவர்கள் வாழ்வில் ஆண்-பெண்ணிடையில் சமவாழ்வுரிமைக்கு வழி இல்லை என்பதே அப்புதினத்தின் மைய இழையாகும்.
பெண்களின் கல்வி, வேலை வாய்ப்பால் அவர்கள் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படவில்லையா?
பெண் கல்வி, பெண்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவை தற்போது அவர்களுக்கு, அவர்களது உயர்வுக்குப் பயன்படுவதை விட, அவர்களது குடும்பத்திற்குப் பயன்படுவதைவிட இன்றைய முதலாளித்துவ சமுகத்திற்குச் சாதகமாகவே பயன்படுத்தப்படுகின்றன; நமது சமுதாயத்தின் மரபு வாழ்க்கை முறையான கூட்டுக் குடும்பமுறை மறைந்து தனிக்குடும்பம் பெருகி வருகிறது. பெண்களுக்குத் தொழிற்சாலைகளில் வேலை கொடுப்பதிலும், ‘அவர்கள் எளிதில் போராடமாட்டார்கள்; குறைந்த ஊதியத்திற்கு வருவார்கள். சில ஆண்டுகள் பணிசெய்துவிட்டுத் திருமணமானபின் வேலையை விட்டுவிடுவதால் பணிநிரந்தரம், ஓய்வூதியம் போன்ற சிக்கல்கள் உருவாக்காதவர்கள்’ போன்றவற்றை பூர்ஷ்வா முதலாளித்துவச் சமுதாயம் தனக்கு சாதகமான அம்சங்களாகக் கருதியே அவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கின்றன. பெண்கல்வி, வேலைவாய்ப்பு உருவான அளவு விழிப்புணர்ச்சி, வாழ்வுரிமை ஏற்பட்டுவிடவில்லை. உயர்ந்த கல்வி, பணியில் இருப்பவர்கள் கூட அஞ்சி அஞ்சியே உரிமையின்றி வாழ்வதையே காண முடிகிறது. ஒருசில விதிவிலக்குகளை மட்டுமே எதார்த்த வாழ்வில் காண்கிறோம்.
"முற்றுகை" புதினத்திற்கு எதிரான மனப் போக்குடைய பெண்ணை "அச்சமே நரகம்" புதினத்தில் மையப்படுத்தி உள்ளீர்கள். அதிலும் குறிப்பாக அப்புதினத்தின் இறுதியில் பூங்கிளி, "என்னை ஒரு மனுசியாய் மட்டும் மதிச்சி மனைவியா ஏத்துக்கிட துணிச்சலுள்ள ஆம்பளை இந்தக்கூட்டத்திலே உண்டா?" என்று கேட்பதாக எழுதி உள்ளீர்கள். இப்படி ஒரு பெண், அத்தகையச் சுழலில் பகிரங்கமாகக் கேட்க முடியுமா? இது நாடகத்தனமாக இல்லையா?
இப்படி ஒரு விமரிசனம் கூறப்படுவது உண்மைதான். ஆனால் அவ்வாறான உண்மைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், பெண் வீட்டாருடன் வரதட்சணையில் பிரச்சினை ஏற்பட்டு, அத்திருமணம் நின்றுவிடும் சுழல் எழுந்தது. அப்போது அந்த மணப்பெண் பூங்கிளி போன்று வினா எழுப்ப, ஓர் இளைஞன் முன்வர அத்திருமணம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய அமைப்புகள் அந்நிகழ்ச்சியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து அம்மணமக்களைப் பாராட்டினர். எனவே அது நாடகத்தனமான கற்பனை அல்ல. பாதிக்கப்படும் பெண்களுக்கு நம்பிக்கை ஊட்டி வழிநடத்தும் எழுத்தே.
"ஆகாயச் சிறகுகள்" புதினத்தில் பிரேமா என்னும் பெண் தனக்கு விருப்பம் இல்லாமலேயே கணவனின் வற்புறுத்தலால் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கிறாள். அதன் பின்னும் மற்றவர்களது வற்புறுத்தல்களால் படிப்படியாக பொதுச் செயல்களில் ஈடுபட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் பங்கேற்கிறாள். இது அமைப்பு என்ற கூண்டிற்குள் பலவந்தமாகப் பெண்ணை அடைக்கும் செயல் போன்றது என்பதாக அப்புதினம் குறித்து ஒரு விமரிசனம் உள்ளதே ....
பிரேமாவின் கணவன் பால்சாமியின் கௌரவத்திற்காகவே பிரேமா உண்ணாவிரதத்தில் பங்கேற்கிறாள். அவளுக்கு விருப்பம் இல்லாமல் அப்பங்கேற்பு நிகழ்கிறது என்பது உண்மைதான். அது அவனது ஆணாதிக்க உணர்வால், அவசரத்தனத்தால் ஏற்பட்டதே. ஆனால் அதற்குப் பிந்தைய நிகழ்வுகள், அக்கம் பக்கத்துப் பெண்களின் வாழ்க்கை நெருக்கடிகள், பிரச்சினைகள், அவள் கணவனை அதிகாரிகள் பால்ச்சாமியாவது........ மோர்ச்காமியாவது என்று கூறியதால் அவளுக்கு ஏற்பட்ட அவமானம்......... இப்படிப் பல காரணங்களால் பொதுநலப் பணிகளில் ஈடுபடவும், மாதர் சங்கத்தில் ஈடுபடவுமான சுழல் அமைகிறது.
ஒரு பெண், மாதர் சங்கம் அல்லது பிற அமைப்புகளில் ஈடுபடுவது கூண்டுக்குள் அடைபடுவது என்பது சரியான கருத்து அல்ல; அச்செயல் வலிந்து அவர்கள் மீது திணிக்கப்படுவதாக இருக்கக் கூடாதே தவிர, அவர்களாகவே ஈடுபடுவதில் என்ன தவறு உள்ளது? பெண்களை அமைப்பில் ஈடுபடுத்தக்கூடாது என்று கூறுவது அவர்களை மீண்டும் வீட்டுக்குள் மட்டுமே முடக்கிவைக்கும் கருத்தே ஆகும் இக்கருத்து பெண்களுக்கு எதிரானது.
‘அச்சமே நரகம்’ புதினத்தில் தன தந்தையின் கவுரவம் பாதிக்கப்படுகிறது என்பதாலேயே, அந்த மாப்பிள்ளையைப் பூங்கிளி மறுக்கின்றாள். ‘ஆகாயச சிறகுகள்’ புதினத்தில் கணவன் பாலச்சாமியின் கௌரவத்தைக் காப்பாற்றுவதவற்காகவே பிரேமா போராட்டத்தில் பங்கேற்கிறாள்; இது ஆண்களுக்காக, ஆண்கள் நலனுக்காகவே பெண்கள் என்ற கருத்தை வலியுறுத்துவதாக இல்லையா?
இல்லை. நான் அதை எப்படிப் பார்க்கிறேன் என்றால் ஆணும் பெண்ணும் தோழமையுடன் வாழவே பெண்ணியம் வேண்டும் என்ற கருத்தை முன்வைப்பதாக நினைக்கிறேன். அதே சமயத்தில் "முற்றுகை" புதினத்தில் சொர்ணம் தன்னை மட்டுமே முன் நிறுத்தி முடிவெடுத்ததால் அவள் வீழ்ந்து பட்டாள். தன்னுரிமை சுயநலத்திற்காக ஏற்படுவதல்ல. பிறர் உரிமை, பிறர் நலன் காப்பதே தன்னுரிமையின் பயன் என்பதே என் பார்வை.
தங்கள் சிறுகதைகளிலும் புதினங்களிலும் வட்டார வழக்கு சொற்களை எவ்விதம் கையாளுகிறீர்கள்?
எனக்கு வட்டார வழக்கு நாவல்களை உருவாக்க வேண்டும் என்றெல்லாம் நோக்கம் இல்லை. இயல்பாக நானும் அக்கதை மாந்தர்களும் அறிந்த மொழியில் எழுதுகிறேன். வட்டார வழக்கினை மிக அதிமாக திணித்தால் மற்ற வாசகர்கள் படிப்பதில் தடை ஏற்படும். ஆனாலும் மண்ணின் வாசம் இல்லாமல் ஒரு படைப்பு உருவாக முடியாது. எனவே வட்டார வழக்குகளை வேண்டும் என்றே திணித்தும் விடாமல் ஒதுக்கியும் விடாமல் மண்ணின் வாசம் மாறிவிடாமல் ஒரு சம நிலையில் சொற்களைக் கையாளுகிறேன்.
சில கதை மாந்தர்கள் பெயர்களாக மாடசாமி, பிரேமா போன்றவற்றைத் தங்கள் படைப்புகளில் தொடர்ந்து கையாளுகின்றீர்களே ஏன்?
கதை மாந்தர்களின் பெயர்களில் பிரதேசத் தன்மையும் சாதித் தன்மையும் வெளிப்படும். அது கதையின் இயல்பான புரிதலுக்கு உதவும் என்பதாலேயே சில பெயர்களைப் பயன்படுத்துகிறேன்.
தங்கள் படைப்புகளுக்கும் வாழ்க்கை நோக்கத்திற்குமான உறவு முறையை எப்படி ஏற்படுத்திக் கொண்டுள்ளீர்கள்?
எனது வாழ்க்கை எளிய கிராமியக் கலாச்சாரத்தால் ஆனது. எனது வாழ்க்கைத் தேவைகளும் அதிகம் இல்லை. நான் எழுதிப் பணம் சம்பாதித்து வாழ்க்கையை, பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை. இலக்கியத்தை என் வாழ்க்கைக்குறிய வருவாய் வழியாக நினைக்கவில்லை. இலக்கிய ரீதியாக சமரசமாகி விடாமல், போர்க்குணம் மிக்கப் படைப்பாளியாக தொடர வேண்டும் என்பதே என் எண்ணம்; லட்சியம். அத்தகையப் பாதையிலேயே என் எழுத்துப் பணியைத் தொடர்கிறேன்.
- நாகசுந்தரம் (
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
சமரசமற்ற போர்குணம் மிக்கப் படைப்புகளே எனது லட்சியம்: மேலாண்மை பொன்னுச்சாமி
- விவரங்கள்
- நாகசுந்தரம்
- பிரிவு: கட்டுரைகள்