modi 280நாட்டின் பன்முகத் தன்மையை அழித்து நாடுமுழுவதும் ஒற்றைப் பண்பாட்டு முறையின் மூலம் பார்ப்பனிய மேலாண்மையை நிலைநிறுத்துவதே ஆர்.எஸ்.எஸ்.இன் நோக்கம். கடந்த ஏழு ஆண்டுகளாகத் தங்களின் ஆட்சி அதிகாரத்தால் மக்களிடம் வெறுப்புணர்வைத் தூண்டி இந்துத்துவத்தை நிலைநிறுத்த முயல்கிறது மோடி அரசு.

தேர்தல் வெற்றி என்பது மட்டுமே ஆர்.எஸ்.எஸ்.இன் குறிக்கோளாக என்றுமே இருந்தது இல்லை, ஏனெனில் இரண்டாயிரம் ஆண்டுகளாக அதிகாரத்தின் உச்சியில் அவர்கள்தான் இருந்து வருகிறார்கள்.

தேசிய அளவில் காங்கிரஸ் போன்ற ஓர் பேரியக்கத்தை வீழ்த்தித் தங்களின் இருப்பை நிலைநாட்டி விட்டனர். இப்போது தாங்கள் வேரூன்றா மாநிலங்களைக் குறிவைத்துப் பல்வேறுத் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறார்கள்.

தென்னிந்திய மாநிலங்களில் குறிப்பாகத் தமிழகம் மற்றும் கேரளா தற்போதும் பார்ப்பனியத்திற்கு எதிரான மனநிலையில் இருப்பதால் மதரீதியாக மக்களை ஒன்றுதிரட்டவே தேர்தல் நேரத்தில் சபரிமலை பிரச்சனையைக் கேரளத்திலும், முருகர் பிரச்சனையைத் தமிழகத்திலும் கையில் எடுத்தார்கள். அது எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை என்றாலும் மாநிலக் கட்சிகளிடையே சலனத்தை ஏற்படுத்தியது.

ரஜினியை வைத்து தி.மு.க. வாக்கு வங்கியைப் பிரிக்க திட்டம் வகுத்தார்கள், ஆனால் அதுவும் தோல்வியில் முடியவே, தலைமையற்ற கட்சியான அ.தி.மு.க.வைக் கையில் எடுத்துள்ளார்கள்.

தமிழக அரசைத் தங்களின் கைப்பாவையாக வைத்துக் கொண்டு மாநில உரிமைகளைப் பறிக்கும் திட்டங்களை அமல்படுத்தி வருகிறார்கள். நீட், புதிய கல்விக் கொள்கை போன்றவைகள் நம் கண்முன் நடந்த உதாரணங்கள்.

தன் கையை வைத்தே தன் கண்ணைக் குத்துவதுபோல, ஒரு திராவிடக் கட்சியை வைத்தே இன்னொரு திராவிடக் கட்சியான தி.மு.க வை வீழ்த்த நினைக்கிறது பார்ப்பனியம்.

அவர்களின் திட்டப்படி அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்து, பா.ஜ.க தமிழகத்தில் நுழைய முயல்கிறது. பெரியாரின் வழிவந்த நாம் அவர்களின் திட்டத்தை மக்களிடம் அம்பலப்படுத்துவது நம் கடமை.

- ராஜ்ஶ்ரீ

Pin It