இந்தியக் குடியுரிமைச் சட்டம் நிறைவேறப் பெரிதும் துணை நின்றது அ.இ.அ.தி.மு.க.
இச்சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் மக்கள் போராட்டம் மிக வலிமையாக எழுந்ததைக் கண்ட அ.தி.மு.க. செய்வதறியாது திகைத்து நிற்கிறது.
இதைச் சமாளிக்க ஈழத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வாங்கித் தருவதாக எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்ச்செல்வமும் சொல்ல ஆரம்பித்தார்கள். இதற்காக மோடியையும், அமித்ஷாவையும் ஓடிப் போய்ச் சந்தித்தார்கள்.
அமித்ஷா இதற்கு ஏற்பாடு செய்வதாகவும், மத்திய அரசு இதைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதாகவும் சொன்னார்கள்.
அதாவது கேழ்வரகில் நெய் வடிகிறது என்பதுதான் இதற்கான பொருள் என்று தோன்றுகிறது.
இந்த இரட்டைக் குடியுரிமையை ஒரு நிபந்தனையாக வைத்திருக்க வேண்டும் அ.தி.மு.க.
ஈழத்தமிழர்களுக்கு இரட்டை வாக்குரிமை கொடுக்க வேண்டும் என்றால், நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் இது சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அப்படி ஏதும் இல்லாமல் பொத்தாம் பொதுவாகச் சகட்டு மேனிக்குச் சட்டம் நிறைவேற நிபந்தனை அற்ற ஆதரவைக் கொடுத்திருக்கிறது அ.தி.மு.க.
குடியுரிமைச் சட்டம் நிறைவேறிய பிறகு இரட்டைக் குடியுரிமை குறித்து மீண்டும் ஒரு சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும். அமித்ஷாவும், மோடியும் இதுவரை இரட்டைக் குடியுரிமை குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.
அப்படி இருக்க ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமையை எப்படிப் பெற்றுத் தருவார்கள் தமிழக முதல்வரும், துணை முதல்வரும்?
ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தருவதாக இவர்கள், தமிழக மக்களின் காதில் பூச்சுற்றி, ஏமாற்றி நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தமிழகம் தெளிவாக உணர்ந்திருக்கிறது.