மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரின் கடைசி காலத்தில், அப்பலோ மருத்துவமனையில் மர்மமான முறையில் சிகிச்சை பெற்றார், 75 நாள்கள்.

அவரின் நோய் என்ன? அளிக்கப் பட்ட சிகிச்சை முறை என்ன? மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த நிலை என்ன?  என்பது குறித்துத் தெளிவான விளக்கம் இன்னும் வரவில்லை.

அரசு தரப்பில் இருந்தும், சுகாதாரத் துறைச் செயலாளரிடம் இருந்தும் எந்த வித விளக்கமும் இதுவரை இல்லை.

ஒரு புகைப்படம், ஒளிப்படம் கூட வெளியிடப்படவில்லை.

மருத்துவமனை இயக்குநர் பிரதாப் ரெட்டி முன்னுக்கு பின் முரணான விளக்கம் தந்துகொண்டிருக்கிறார்.

ஓர் ஆண்டுக்குப் பின், ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி டி.டி.வி. தினகரன் அணி வெற்றிவேல், ஜெயலலிதா குறித்த ஓர் ஒளிப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

ஜெயலலிதா சிகிச்சை பெறும் பொழுது கலைஞர் உட்பட அனைத்துக் கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டபோதும், ஓர் ஒளிப்படம் அல்லது நிழல்படம் கூட வெளியிடப்படவில்லை.

இப்பொழுது வெளியிட்டு இருக்கும் இந்த ஒளிப்படம் பல்வேறு ஐயங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றது.

இந்த ஒளிப்படம் எப்போது எடுக்கப்பட்டது? எங்கே எடுக்கப்பட்டது? யாரால் எடுக்கப்பட்டது? ஏன் இதுவரை இப்படம் வெளியிடப்படவில்லை? இதுகுறித்த விளக்கங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டியனவாக உள்ளன.

இந்த படம் எடுத்தது சசிகலா என்கிறார் டி.டி.வி.தினகரன்.

அன்றைய முதல்வர் ஓ.பி.எஸ்.க்கும், இன்றைய முதல்வர் எடப்பாடிக்கும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இந்த ஒளிப்படம் குறித்து நன்றாகத் தெரியும். அவர்கள் இதை ஏற்கனவே பார்த்திருக்கிறார்கள் என்கிறார் வெற்றிவேல்.

நாட்டின் முதல்வர் என்ற அடிப்படையில் ஜெயலலிதா சிகிச்சையை, அன்றைய முதல்வர் ஓ.பி.எஸ்., சுகாதாரத்துறை அமைச்சகம் மூலம் பார்த்திருக்க வேண்டும். காரணம் முதல்வர் தமிழக மக்களுக்கு உரிமையானவர்.

ஆனால் சசிகலா என்ற ஒரு பெண்மணியே ஜெயலலிதாவை முழுமையாக மறைத்துக் கொண்டு, அவரின் குடும்ப உறுப்பினர்களுடன் எந்தச் செய்தியையும் வெளிவராமல் பார்த்துக் கொண்டார்.

இதற்கு அன்றைய முதல்வர் ஓ.பி.எஸ். உடந்தையாக இருந்திருக்கிறார்.

இன்று சசிகலாவுக்கு எதிராக ‘தர்ம யுத்தம்’ நடத்துவதாகச் சொல்லும் ஓ.பி.எஸ்., அன்று சசிகலாவுடன் கூட்டுச் சதியில் இருந்திருக்கிறார் என்பது வெற்றிவேலின் வாக்குமூலத்தால் தெரியவருகிறது.

இப்பொழுது வெளியாகியுள்ள ஒளிப்படத்தில் ஜெயலலிதாவின் முகம் தெளிவாக இல்லை. அவருக்குத் தெரிந்து அப்படம் எடுக்கப்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை.

இது உண்மையில் அப்போலோவில் எடுத்த படம் தானா? அல்லது வேறு எங்கேனும் எடுத்த படமா?

இந்த படம் குறித்து அப்போலோ நிர்வாகம் ஏன் இன்னும் மௌனம் காத்துக்கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா மறைவையொட்டி நடைபெறும் தில்லு முல்லுச் செயல்களும், மர்மங்களும் அவருடன் நெருக்கமாக இருந்தவர்களாலேயே தொடர்வது ஆரோக்கியமாக இல்லை.

ஜெயலலிதா ஒளிப்படம் பின்னாள் இருக்கும் மர்மங்கள் இன்னும் விலகவில்லை என்பது மட்டும் புரிகிறது.

Pin It