ஏழாண்டு காலம் -

எத்தனை இழி சொற்கள், கட்சியின் மீது எத்தனை தாக்குதல்கள், எத்தனை தோல்விகள்!

எல்லாம் கடந்து இன்று நிமிர்ந்து நிற்கிறது நீதி! “அறம் வெல்லும், அநீதி வீழும்“ என்று அருமைத் தலைவர் கலைஞர் அன்றே எழுதிய தொடர், இன்று எல்லோர் நெஞ்சிலும் எழுந்து  நிற்கிறது.

2009 ஆம் ஆண்டிலிருந்தே 2ஜி விவாதம் தொடங்கிவிட்டது என்றாலும், அதனை ஊதிப்  பெருக்கி உலகையே மிரள வைத்தவர், அன்று தலைமைத் தணிக்கை மற்றும் கணக்காளராக (சிஏஜி) இருந்த வினோத் ராய்தான். 2010 நவம்பரில், அவர் விடுத்த அறிக்கைதான், “1.76 லட்சம் கோடி ஊழல்” என்னும் பொய்யான அவதூறு நாடெங்கும் பரவக் காரணமாக இருந்தது.

kanimoli 600அந்தத் தொகை வெறும் கற்பனைக் கணக்கு. ஆதாரம் இல்லாமல் கட்டப்பட்ட அநியாயப் பொய். அன்று ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை, ஒரு மெகாஹெட் 276 கோடி ரூபாய் வீதம், 52.75 மெகாஹெட் அலைக்கற்றை  விற்பனை செய்யப்பட்டது. அதன்மூலம் அரசுக்கு ஏறத்தாழ 16000 கோடி ரூபாய் கிடைத்தது. ஆனால், முதலில் வருபவருக்கு முதலில் என்று இல்லாமல், அலைக்கற்றையை ஏலத்தில் விட்டிருந்தால்,  ஒரு மெகாஹெட் 3,350 ரூபாய்க்கு விலை போயிருக்கக்கூடும் என்று அவராக ஒருகற்பனையில் கணக்கிட்டு, அதன்படி அரசுக்கு 1.76 லட்சம் கோடி (52.75 பெருக்கல் 3350 = 1.76 லட்சம் கோடி) வருவாய் வந்திருக்கும் என்றார்.இதற்கு எந்தச் சான்றும் இல்லை. ஆனால்  இதனை நாடே நம்பியது. ஏதோ, 1.76 லட்சம் கோடி ரூபாயை ராசா கொள்ளையடித்து விட்டார் என்பது போல் ஒரு பழி திட்டமிட்டுச் சுமத்தப்பட்டது.

அந்த 1.76 லட்சம் கோடி ரூபாய் என்பதும் லஞ்சம், ஊழல் என்று விநோத்ராய் கூட  அறிக்கையில் எங்கும் சொல்லவில்லை. அரசுக்கு வருவாய் இழப்பு என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால் நாடு முழுவதும், 7 ஆண்டுகளாக, ராசாவின் மூலம் திமுக 1.76 லட்சம் கோடி ரூபாய்யைக் கொள்ளையடித்து விட்டது என்றுதான் பேசினார்கள்.

இப்போது நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. குற்றச்சாற்றை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு ஆதாரத்தைக் கூட சிபிஐ தரவில்லை என்று நீதிபதி சொல்லியிருக்கிறார்.  ஆதாரத்தைக் கொடுக்கத்  தவறிவிட்டார்கள் அதிகாரிகள் என்று குறைப்பட்டுக் கொண்டுள்ளார் சு.சாமி. பாவம், அதிகாரிகள் என்ன செய்வார்கள்? ஆதாரம் இருந்தால்தானே கொடுக்கமுடியும்?

வினோத் ராய் கூற்றுப்படியே, 2014இல் 3ஜி அலைக்கற்றைகள் ஏலத்திற்கு விடப்பட்டன. அப்போது 350 மெகாஹெட் அலைக்கற்றைகள் விற்பனையாகின. ஒரு மெகாஹெட் வெறும் 297 கோடி ரூபாய்க்குத்தான் விற்பனை ஆகியது. ராசாவின் காலத்திற்குப் பிறகு, 6 ஆண்டுகள் கழித்து, வெறும் 21 கோடிதான் கூடுதல் விலை போயுள்ளது. 3350 கோடி ரூபாய்க்கு விலை போகவில்லை. அவ்வளவு விலைக்குப் போயிருந்தால், 11லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு கிடைத்திருக்கும். எனவே இதனை 11 லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்று கூறலாமா?

எதுவும் மெய்ப்பிக்கப்படவில்லை. ஆனால் ராசா 15 மாதங்களும், கனிமொழி 12 மாதங்களும் சிறையில் இருந்துள்ளனரே, அதற்கு யார் நியாயம் வழங்குவது? அவர்கள் மீதும், கட்சியின் மீதும் சுமத்தப்பட்ட பழியை யார் துடைப்பது? இந்த அவதூறு பரப்பப்பட்ட காரணத்தால், இரண்டு பொதுத் தேர்தல்களில் தி. மு. கழகம் வெற்றி வாய்ப்பை இழந்ததே, அதனை எப்படி ஈடு செய்வது?

மனசாட்சி உள்ளவர்கள் விடை சொல்லட்டும்!

Pin It