பதினைந்து லட்சத்திற்கு ஆசைப்பட்டு ஓட்டு போட்ட இந்திய ஏமாளிகளைப் பார்த்துச் சொல்கிறார் ஒரு பிரதமர் ‘‘ஏ டிஜிட்டல் இந்தியா ஹை! ஏ டிஜிட்டல் இந்தியா ஹை!’’

“ரேசன் அரிசிக்குக் குண்டு, கேஸ் மானியத்திற்குக் குண்டு... செத்துப் போனவர்கள் பாக்கியவான்கள். தவணை முறையில் சாகும் நாம் பரிதாபத்திற்கு உரியவர்கள்.” இணையத்தளத்தில் மதுக்கூர் ராமலிங்கம் இப்படி சொல்கிறார்.

இந்த குண்டுகள் மருத்துவக் கல்வி, நீட் தேர்வு, விவசாயம் என அனைத்திற்கும் பொருந்தும்.

இதைத்தான் பிரதமர் ஏ டிஜிட்டல் இந்தியா ஹை என்று சொல்லிக்கொண்டு திரிகிறார் போலும்.

எரிவாயு, மண்ணெண்ணெய் இவை இரண்டும் இன்றைய உலகின், குறிப்பாக இந்திய மக்களின் முக்கியப் பயன்பாட்டுப் பொருள்கள்.

எரிவாயுவுக்கு ஆதார் அட்டையை இணைக்க வேண்டும், மண்ணெண்ணெய்க்கு ரேசன் அட்டையில் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும்.

உங்களின் மானியத் தொகையை உங்கள் வங்கிக் கணக்கில் போடுகிறோம் என்றார் மோடி.

இப்பொழுது மாதம் தோறும் 4 ரூபாய் உயர்த்திக் கொண்டு எரிவாயு வழங்குவோம். அதுவும் 2018ஆம் ஆண்டு வரைதான். இன்னும் சில மாதங்கள் வரை. அதன் பிறகு எரிவாயு மானியம் ரத்துசெய்யப்படும் என்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

அடுத்ததாக மண்ணெண்ணெயை நிறுத்தப்போகும் வேலையில் இறங்கிவிட்டது மோடி அரசு.

கிராமங்களில் வாழும் மக்கள், குறிப்பாகப் பெண்கள் விளக்கு எரிக்கவும் சமையல் செய்யவும்  மண்ணெண்ணெயைத்தான் பெரிதும் பயன்படுத்துகிறார்கள்.

நகர்ப்புறங்களில் அனைத்து வீடுகளிலும் எரிவாயுப் பயன்பாடுதான் என்று எண்ணிவிடக் கூடாது. மண்ணெண்ணெய்ப் பயன்பாடும் பெரும் அளவில் இருக்கிறது.

இப்படிப் பட்ட நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை, வறுமையின் வலியை கொஞ்சமும் உணராத, மக்களை வார்த்தைகளால் நன்கு ஏமாற்றத் தெரிந்த பிரதமர் மோடியின் பா.ஜ.க. அரசு, கார்ப்பரேட் எண்ணெய் நிறுவனங்களுக்கு, அவை நினைக்கும் விலையை நிர்ணயம் செய்துகொள்ள அனுமதி வழங்கி சாமரம் வீசிக்கொண்டிருக்கிறது.

இது அப்பட்டமான சர்வாதிகாரம். மக்களை வதைத்து எந்த அரசும் நிலையாக இருந்ததாக வரலாறு இல்லை.

கையில் ‘வேல்’ வைத்துக்கொண்டு, வழியில் போவோர் வருவோரிடம் வழிப்பறி செய்யும் கொள்ளையனுக்கும் இந்த அரசுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?   

Pin It