‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டின் தலையங்கங்கள் வரலாற்று ரீதியான பதிவுகளையும் கழக நிலைப்பாடுகளையும் நினைவூட்டுகின்றன என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார்.

டிசம். 24, 2021 அன்று சென்னையில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வுக்கு தலைமையேற்று, கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். அவர் உரையில் குறிப்பிட்டதாவது:

திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறியவர்கள், வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் இணைந்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம் கட்டியமைக்கப் பட்டது. அப்போது, ‘பெரியார் காலத்து தமிழ் நாட்டை உருவாக்குவோம்' என்பதைத் தான் இலட்சியமாக வைத்து தொடங்கினோம். பகுத்தறிவை முதன்மையாகக் கொள்ளாமல், ஜாதி ஒழிப்பை முதன்மையாகக் கொண்டு, கலந்து பேசி இந்த இயக்கத்தைத் தொடங்கினோம். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார், பெரியாரின் சுயமரியாதை இயக்க காலத்து சிக்கல்கள் வேறு, தற்போது சமுதாயத்தில் நிலவும் சிக்கல்கள் வேறு’ என்று அதுபோல பெரியார் காலத்தில் மரண தண்டனை சிக்கல்கள் இல்லை. சுற்றுச் சூழல் கேட்டை பற்றியோ, அனு உலைகளைப் பற்றியோ அப்போது விவாதங்கள் நடைபெறவில்லை. மாற்றுத் திறனாளிகள் பற்றிய எந்த விவாதமும் அந்த காலத்தில் இல்லை. திருநங்கைகளைப் பற்றிய கருத்துக்கள் விவாதிக்கப்படவில்லை. இவையெல் லாம் பெரியார் காலத்திற்குப் பிறகு தான் நாம் விவாதிக்கிறோம். பெரியாரின் பார்வையை வைத்துத் தான் நாம் ஒவ்வொரு சிக்கல்களிலும் முடிவுகளை எடுக்கிறோம். காய்தல், உவத்தல் இல்லாமல் பேச வேண்டும். எந்த கூட்டணியிலும் இல்லாத நாம் தான் சமூகப் பிரச்சனைகளுக்கு வெளிப்படையாக குரல் கொடுக்க முடியும். அந்த வகையில் தான், நமது பார்வையை இந்தத் தலையங்கங்கள் கூர்மையாக வெளிப்படுத்தியிருக்கின்றன.

தலையங்கங்களைத் திருப்பிப் பார்க்கின்ற போது தான், பல நிகழ்வுகள் எனது நினைவுக்கு வருகின்றன. நமது மனக்கண்ணை விட்டு பல நிகழ்வுகள் அகன்று விடுகின்றன. தந்தை பெரியார் திராவிடர் கழகமாக இயங்கலாம் என்று முடிவெடுத்து தொடக்க விழா மாநாடு நடப்பதற்கு முன்னதாகவே பல போராட்டங்களை சந்திக்க வேண்டியவர்களாக இருந்தோம். மதுரை பல்கலைக் கழகத்தில் 'ஜோதிட கல்வி' யை பாடமாக்கியபோது அதற்கு எதிராக போராட்டம். ‘டர்பன்’இல் இனப் பாகுபாடு மாநாட்டில் தோழர் விடுதலை இராசேந்திரன் பங்கெடுத்து வந்தார். அதில் ‘இனப் பாகுபாட்டைப் போல், ஜாதியப் பாகுபாட்டையும் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று நமது கருத்தை பதிவு செய்துவிட்டு வந்தார். அதை ஒன்றிய அரசு ஏற்றுக் கொள்ள வில்லை. கடுமையாக எதிர்த்தது.

பா.ஜ.க.வைச் சேர்ந்த தருண் விஜயைப் பற்றி நினைவு கூற வேண்டும். திருக்குறளை பரப்பப் போகிறேன் என்று கிளம்பினார். திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறுவார், ‘பெரியாரைப் பற்றி பேசமாட்டார்களா என்ற காலம் போய், அய்யோ இவர்களெல்லாம் பெரியாரை பேசுகிறார்களே’ என்று கூறுவார். அதுபோல திருக்குறளை பரப்புகிறேன் என்று தருண் விஜய் கூறிய போதே இவர்களின் நோக்கம் வேறானது என்று நாம் பதிவு செய்தோம். அது போலவே நடந்தது. இதே தருண் விஜய், “எங்களுக்கு இனப் பாகுபாடு எல்லாம் கிடையாது, கருப்பர்களான தென்னிந்தியர்களிடம் நாங்கள் சமமாகத் தானே பழகுகிறோம்” என்றார். டர்பன் மாநாட்டில் கூறினோம், இனப்பாகுபாடோடு, ஜாதிய பாகுபாட்டையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று ஆனால் இவர்கள் திராவிட இனத்தையே கருப்பர்களாக பார்க்கிறார்கள். தனித் தனி காலகட்டத்தில் நடக்கிற செய்திகளை இணைத்து பார்த்தால் வியப்பாக இருக்கிறது.

அதே போல இந்து அறநிலையத்துறை சார்பில், அதிகாரிகளாக வருவதற்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளி வந்தது. அதற்கு எதிராக வழக்கு தொடுத்தோம், ஆனால் வழக்கு வருவதற்கு முன்பே கருத்தை மாற்றிக் கொண்டு இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தார்கள். அந்த காலகட்டத்தில் தான் 22 அதிகாரிகளாக அறநிலையத்துறையில் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவை கூட நினைவில் இருந்து மறைந்துவிட்டது. இந்தத் தலையங்கங்களை பார்க்கிற போது மீண்டும் நினைவிற்கு வருகிறது. நாம் குலக்கல்வியை எதிர்த்தோம். இப்போதைய திடீர் தமிழ் தேசியவாதிகளுக்கு வழிகாட்டி ம.பொ.சி மட்டுமே, மாபொசியின் கட்சி மட்டுமே, குலக் கல்வியை ஆதரித்தது. தலைமைக் குழுவில் வரவேற்று தீர்மானம் இயற்றினர். தமிழ்நாடு முழுவதும் ஆதரித்துப் பிரச்சாரமும் செய்தனர். அதே போன்று ஒரு குலக்கல்வித் திட்டம் இப்போது வந்திருக்கிறது. 1986 ஆம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் தடை சட்டத்தில் ஒரு திருத்தத்தை இந்த பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த உடனேயே கொண்டு வந்தார்கள். அது என்ன திருத்தமென்றால், குழந்தைகள் (14 வயதிற்குட்பட்டவர்கள் ) பள்ளி நேரம் போக ஆபத்தில்லாத தங்களது குடும்ப தொழில்களில் ஈடுபடலாம் என்பது தான் அந்த திருத்தம். அவர்கள் குலக்கல்வி என்றார்கள், இவர்கள் குடும்பத் தொழில் (Family Enterprises) என்கிறார்கள். இரண்டும் ஒரே பொருளைக் கொண்டது தான். அந்தத் திருத்தம் தேசிய கல்விக் கொள்கை வரை கொண்டு வரப்பட்டுள்ளது. அதை சுட்டிக் காட்டி ஒரு தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

தேசத் துரோகம் சட்டம் பற்றி தற்போது விரிவாக விவாதிக்கப்படுகிறது. தேசத் துரோகம் பற்றி ஒரு தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. தற்போது தேசத் துரோக சட்டத்திற்கு ஆதாரமாக 'பிரிவியூ கவுன்சில்' கொடுத்த தீர்ப்புகளை எடுத்து காட்டுகிறார்கள். பிரிவியூ கவுன்சில் தான் பல பிற்போக்கான தீர்ப்பு களைக் கொடுத்துள்ளது. அதில் சொல்லப்பட்ட ‘பழக்க, வழக்கம்’ என்ற சொல்லைத் தான் இன்று வரை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சொல்லை சட்டத்தில் இணைத்துவிட்டார்கள். தற்போது அதை வைத்து தான் அர்ச்சகர் சட்டத்தை எதிர்க்கிறார்கள். நீதிமன்றத்திற்கு சென்று அந்த சொல்லை மட்டுமே வைத்துக் கொண்டு வழக்காடுகிறார்கள். மார்கண்டேய கட்ஜூ ஒரு தீர்ப்பை கொடுக்கிறார். பிரிவியூ கவுன்சில் கொடுத்த தீர்ப்பை ஏற்க முடியாது என்றே ஒரு தீர்ப்பை கொடுக்கிறார். அந்தக் காலத்தில் அந்நியர்கள் ஆண்டார்கள், காலனி ஆட்சி இருந்தது அப்போது கூறியிருக்கிறார்கள். அந்த விளக்கத்தை இப்போது பொருத்திப் பார்க்க முடியாது என்றார். தேசத் துரோக வழக்கு விநாயக் சென் மீது போட் டார்கள். மாவோ புத்தகங்களை வைத்திருந்தார் என்பதற்காக வழக்கு போட்டார்கள். அப்போது சேலத்தில் அத்வானி கலந்து கொண்ட மாநாடு நடந்தது. அதை எதிர்த்தோம். அதைப் பற்றிய விரிவான தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. இப்போது தான் உச்ச நீதி மன்றம் அதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறது. இப்படி ஏராளமான தலையங்கங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து பற்றி நமக்கு தெரியும். முதல் தளத்தில் கூரை, அதில் வகுப்புகள் நடந்தன. கீழே இறங்குவதற்கு குறுகிய வழி, அந்த வழியும் பூட்டி வைக்கப்பட்டிருந்தது அதனால் குழந்தைகள் வெளியேற முடியாத நிலை. இறந்து போனார்கள். உடனே அதிகாரிகள் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள் கூரைகளே இருக்கக் கூடாது என்று, ஏன்? தரைத்தளத்தில் வெளியேறும் அளவிற்கு வாய்ப்பு இருந்திருந்தால் விபத்து நடந்திருக்காதே. பூட்டி வைத்தது தானே சிக்கல். இதில் ஒரு சிக்கல் வந்தது. என்னவென்றால், சிறு சிறு நன்கொடை பெற்று நடத்தி வந்த தாய்த்தமிழ் பள்ளிகளெல்லாம் மூட வேண்டிய சிக்கல் வந்தது. ஏனென்றால் பெரும்பாலும் தாய்த்தமிழ் பள்ளிகளெல்லாம் கூரையில் தான் நடந்து கொண்டிருந்தது. அப்போது, “ ‘தாய்’ இல்லாமல் தவிக்கும் தாய்த் தமிழ் பள்ளி” என்று ஒரு தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது. கும்பகோணம் பிரச்சனையை ஒட்டி எழுதப்பட்டது. அப்போது தொடக்கக் கல்வி அரசு மட்டுமே நடத்த வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் முழக்கத்தை வைத்தோம். அரசே கல்வி முழுவதும் கொடுக்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருந்தாலும் குறைந்த பட்சம் தொடக்கக் கல்வியை தாய்மொழியில் கொடுக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கையாக இருந்தது. அதைப் பற்றி தலையங்கத்தில் விவாதித்துள்ளோம். ஜாதிய சிக்கல்களைப் பற்றி ஏராளமான தலையங்கங்கள் வந்துள்ளன.

அதேபோல கேரளா சட்டமன்றத்தில் கொண்டு வந்த சட்டங்களை வரவேற்று தலையங்கங்கள் எழுதப்பட்டுள்ளன. தேவசம் போர்டில் 2003 இல் பட்டியலினத்தவரை அர்ச்சகர் பணியில் அமர்த்தியதை எதிர்த்து ஒரு வழக்கு போடப் படுகிறது. 'ஆதித்யன்' என்ற புகழ்பெற்ற வழக்கு அது. அந்த வழக்கில் அவர்களை நியமித்தது செல்லும் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்படி தீர்ப்பு வரக் காரணம், தமிழ்நாட்டைச் சார்ந்த நீதிபதி துரைசாமி இராஜூ அவர்களும், கர்நாடகத்தை சேர்ந்த நீதிபதியும், பகுத்தறிவுவாதியும், தமிழ்நாட்டில் கல்வி பெற்றவருமான இராஜேந்திர பாபு இருவரும் தான் அந்தத் தீர்ப்பைக் கொடுத்தார்கள். அரசியல் சட்டத்திற்கு மேல் எதுவும் கிடையாது. அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு அது தான் உயர்ந்தது. அதைத் தாண்டி எந்தப் பெயரில் பாகுபாடு இருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த நியமனம் செல்லும். இதைப் பற்றியும் நமது தலையங்கம் விவாதித்துள்ளது.

தென்னாட்டு நீதிபதிகள் ஒரு தீர்ப்பை வழங்குகிறார்கள். அதே சட்டத்தை வைத்து வடநாட்டு நீதிபதிகள் வேறொரு தீர்ப்பை வழங்குகிறார்கள். திராவிடர் கழகமாக பெயர் சூட்டிய மாநாட்டில் பெரியார் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார், ‘உச்ச நீதிமன்றம் என்ற ஒன்று இருக்கவே கூடாது. அந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றம் தான் உச்ச நீதிமன்றம்’ என்று 1944இல் தீர்மானத்தை கொண்டு வந்தார். காரணம் அங்கே இருப்பவர்களுக்கு இங்கே இருக்கும் சிக்கல் பற்றி தெரியாது, புரியாது. கேரளத்தில், ஓணம் பண்டிகைக்கு இந்து மதக் கதை இருந்தாலும்கூட, தமிழ்நாட்டில் பொங்கலைப் போல, அனைத்து மதத்தினரும் கொண்டாடு கிறார்கள். அது ஒரு வித்தியாசமான கதை. நம் ஊர்களில் தேவர்கள் அசுரர்களைக் கொன்றதைத் தான் விழாவாக கொண்டாடுகிறோம். அல்லது வெள்ளையர்கள் கருப்பர்களைக் கொன்றதைத்தான் விழாவாக கொண்டாடுகிறோம். ஏறத்தாழ அனைத்து விழாக்களும் அப்படித்தான் உள்ளன.

கேரளத்தில், வெள்ளை நிறத்தவர்களால் கொல்லப்பட்ட கருப்பு அரசர் மீண்டும் வந்து மக்களை சந்திக்கிறார் அது தான் ஓணம். இப்படி வித்தியாசமான விழாக்களாகக் கூட நாம் மாற்றியமைக்கலாம் என்று கூட ஒரு தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது. அப்படி பொதுவான பண்டிகைகளாக இருந்தாலும் அரசு அலுவலகங்களில் கொண்டாட வேண்டாம் என்று கேரளாவில் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். பெரியார் அரசு விடுமுறையே கூடாது என்று 1931 விருதுநகர் மாநாட்டில் ‘மத விழாக்களுக்கு விடுமுறை கொடுக்காதீர்கள்’ என்று தீர்மானமே இயற்றியிருக்கிறார். விருப்பமென்றால் கொண்டாடுகிறவர் விடுப்பு எடுத்து செல்லட்டும். இந்துக்கள் அனைவருமா கோகுலாஷ்டமியை கொண்டாடுகிறார்கள்? இந்துக்கள் அனைவருமா ஆவணி அவிட்டத்தில் பூணூல் மாற்றி கொள்கிறார்கள்? ஏனென்றால், மக்கள் தொகையில் 100 இல் 3 இருக்கும் அவர்கள் அதில் பெண்களை தவிர்த்து பூணுல் போடுபவர்கள் முக்கால் பேர் தான் அவர்களுக்காக மீதி 99 விழுக்காட்டினருக்கு ஏன் அரசு விடுப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டார்.

அண்ணாவிடம் பெட்டி சாவி ஒப்படைப்பதாகக் கூறிய ஈரோடு மாநாட்டில் அதே தீர்மானத்தை பெரியார் கொண்டு வருகிறார். அண்ணா முதல்வரான வுடன் கூட ஒரு கோரிக்கையை வைக்கிறார், மத பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை விடக் கூடாது என்று. ஆனால் 1968இலும் விடுமுறை விடப்படு கிறது. அப்போது, பெரியார், ‘உனக்குப் பே பே, உங்கொப்பனுக்கும் பே பே’ என்ற தலைப்பில், அண்ணாதுரை நமக்கும் பே பே காட்டிவிட்டார் என்று எழுதினார். கேரள அரசு ஆணையை வரவேற்று எழுதிய தலையங்கத்தில் பல செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது.    

(தொடரும்)

- கொளத்தூர் மணி

Pin It