perarivalan 260

பேரறிவாளன் ஒரு சிறிய பேட்டரியை வாங்கினார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் மரணத்திற்குக் காரணமான குண்டு வெடிப்பு இந்த பேட்டரி மூலம் நிகழ்த்தப்பட்டது என்று கைது செய்யப்பட்டு, முப்பது ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட அவரின் மனு மீதான வழக்கு 27-4-2022 அன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது.

மாநில அரசு விடுதலைக்கான தீர்மானம் இயற்றிய பின்னரும் ஏன் விடுதலை செய்யவில்லை?

பேரறிவாளனை விடுவிக்க மத்திய அரசுக்கா அல்லது ஆளுநருக்கா, யாருக்கு அதிகாரம் என்ற குழப்பத்தில் அவரைத் தொடர்ந்து சிறையில் வைக்கலாமா?

பேரறிவாளன் விவகாரத்தில் ஒவ்வொரு முறையும் ஆளுநரின் பதில் முரண்பாடாகவே இருக்கிறது. ஆளுநர் உத்தரவுக்காக வழக்கை எத்தனை முறை ஒத்திவைப்பது?

மாநில அமைச்சரவை முடிவுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டால் அது கூட்டாட்சிக்கு மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மாநில அமைச்சரவையின் முடிவுகள் ( தீர்மானங்கள் ) ஆளுநருக்குத் திருப்தி தரவில்லையானால் அதைக் குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்புவாரா?

யார் விடுவிப்பது என்ற நிலை நீடித்தால், பேரறிவாளனை நீதிமன்றமே விடுவிப்பதுதான் தீர்வாக இருக்கும் என்று சொல்லி வழக்கை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். – இது தமிழ்நாடு ஆளுநருக்கு அறிவுரையன்று, எச்சரிக்கை.

இனி பேரறிவாளனின் விடுதலை வெகுதூரத்தில் இல்லை எனலாம்.

நுணலும் தன் வாயால் கெடும்!

தமிழகம், ஆந்திரம், மேற்கு வங்கம், மேகாலயா, ஜார்கண்ட், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான ‘வாட்’ வரியைக் குறைக்காமல் அடம்பிடிப்பதால் மக்களுக்கு அதிக சுமை ஏற்படுகிறது என்று மோடி பேசியிருக்கிறார்.

உடனே நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அவர்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிபொருளின் மீதான கலால் வரிகளை முதலில் ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில், மாநில அரசுகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும் வருவாயில் கையை வைக்கும் மோடி அரசு மாநிலங்களைக் குறை சொல்லி, முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்து நாடகமாடுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று சூடாகப் பதில் சொல்லியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.

பா.ஜ.க. அல்லாத மாநிலங்களைக் குறை சொல்லிக் கொண்டிருக்கும் மோடி, கொரோனா பரவல் தடுப்பு குறித்த முதல்வர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இப்படிப் பேச வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்புகிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

நுணலும் தன் வாயால் கெடும்.

Pin It