இராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் 11.06.1991 அன்று குணசேகரன் (குயில்தாசன்) - அற்புதம் அம்மாள் ஆகியோரின் 19 வயது மகன் பேரறிவாளனை "வெறும் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகத்தான் அழைத்துச் செல்கிறோம், நாளை காலையில் அனுப்பி விடுவோம்” என்று கூறி வீட்டிலிருந்து காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அதன்பின் காவல்துறை எடுத்த நடவடிக்கையால் நீதிமன்றம் மூலம் பேரறிவாளன் மரண தண்டனை பெற்று பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு 32 ஆண்டுகள் அவரின் வாழ்க்கை சிறையிலேயே கழிந்தது.
பெட்டிக் கடைகளில் கூடக் கிடைக்கும் 9 வோல்ட் சிறிய பேட்டரி வாங்கினார் என்பதுதான் பேரறிவாளன் மீது காவல்துறையினர் சுமத்திய குற்றம். ராஜீவ் காந்தியைக் கொல்ல தனு வெடிக்கச் செய்த பெல்ட் வெடிகுண்டில் பயன்படுத்தியது அந்த பேட்டரிதான் என்றும், வழக்கின் முக்கியக் குற்றவாளி சிவராசன் சொல்லித்தான் பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்றும் பேரறிவாளன் மீது குற்றம் சுமத்தப்பட்டது. கடைக்காரர் பேரறிவாளனை அடையாளம் கண்டதும், இரண்டு மாதத்துக்குப் பிறகு சட்டைப் பையிலிருந்து, பொருள் வாங்கியதற்கான ரசீது கிடைத்ததும் பேரறிவாளனுக்கு எதிரான ஆதாரங்களாகக் காட்டப்பட்டது.
2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யலாம் என்று பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையைச் சுட்டிக்காட்டி பேரறிவாளன் தரப்பில் தன்னை இந்த வழக்கிலிருந்து விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வர் ராவ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சங்கரநாராயணன் "பேரறிவாளன் 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வந்துள்ளார். அவரால் யாரையும் சந்திக்க முடியவில்லை” என வாதாடினார். இதைத் தொடர்ந்து வாதாடிய ஒன்றிய அரசின் கூடுதல் வழக்கறிஞர் நட்ராஜ், “இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கை என்னவென்றால் அவருடைய கருணை மனு பரிசீலனையிலுள்ளது. ஆகவே அவர் ஜாமீனில் வெளியே இருக்க வேண்டும் என்பதுதான். அவருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அது தற்போது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. ஆகவே ஏற்கெனவே இவர் இந்தச் சலுகையைப் பெற்று விட்டார். அதாவது அவருடைய கருணை மனு நீண்ட காலம் கிடப்பில் உள்ளதால்தான் அவருடைய மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது” எனக் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "மாநில அரசின் அமைச்சரவை எடுத்த முடிவை ஏன் ஆளுநர் ஏற்கவில்லை. அதை ஏன் ஆளுநர் மத்திய அரசிற்கு அனுப்பினார். அவர் மாநில அரசைத்தானே நிர்வகிக்கிறார்?” என கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திவேதி, “இந்த நாட்டின் தேசப்பிதா மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற கொலைக்குற்றத்தில் கைதான கோபால் கோட்சேவே (நாதுராம் கோட்சேவின் சகோதரர்), 14 ஆண்டுகளில் வெளியே வந்துவிட்டார். ஆனால் இவர்கள் 31 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலேயே இருக்கிறார்கள். முன்னாள் பிரதமரின் வழக்கு என்பதற்காக மட்டுமே, இவர்களை இந்தளவுக்குப் பலி கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இவ்விஷயத்தில் மாநில அரசின் தீர்மானத்தையே கணக்கில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்த வாதங்கள் அனைத்தையும் கேட்ட நீதிபதி, "பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார். அவருடைய வயது, உடல்நலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவருக்கு இந்த நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அவர் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் சிபிஐ அலுவலத்தில் ஆஜராக வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு "பேரறிவாளன் வழக்கு மட்டுமின்றி ‘எந்த ஒரு குறிப்பிட்ட விஷயத்திலும் மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றிக் கொள்ளலாம்’ என்ற மாநில அரசின் அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கான வழக்காகவும், மாநில அரசுக்கு அதற்கான முழு அதிகாரமும் உள்ளதென்பதை நிறுவிடும் வழக்காகவும்” பார்க்கப்படுகிறது. நீதிபதி அளித்துள்ளத் தீர்ப்பும் அதையே உறுதி செய்கிறது.
மாநில அரசின் தீர்மானங்களுக்கு முறைப்படி ஒப்புதல் வழங்காமல், ஒன்றிய அரசுக்கு அனுப்பியதை நீதிபதி கண்டித்துள்ளதை அறிந்த பிறகாவது தமிழ்நாட்டின் ஆளுநர் “சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றித் தனக்கு அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதா”வுக்கு ஒப்புதல் வழங்கிட வேண்டும். இல்லையெனில் உச்சநீதிமன்றத்தில் இருந்து தனக்குக் குட்டு விழும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில், அற்புதம்மாள் "பேரறிவாளன் 31 ஆண்டு சிறை, நன்னடத்தை, சிறையில் பெற்ற கல்வி, உடல்நிலை கருதி ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. பேரறிவாளனுக்கு ஜாமின் கிடைக்க துணை நின்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. அதோடு தமிழக அரசு சார்பாக நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர்களுக்கு நன்றி” என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பேரறிவாளன் பரோலில் விடுதலை செய்யப்பட்டார் என்பதும், அதிலிருந்து அவரது பரோல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 6 பேரும், தனித்தனியாக மனு செய்தால் அவர்களுக்கும் பிணை கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர்கள் மீதும் எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லை. கடந்த 1991 ஜூன் முதல் இவர்கள் எழுவரின் சட்டப் போராட்டமும் ஒவ்வொரு கட்டமாக நகர்ந்து வந்திருக்கிறது. இந்த 31 ஆண்டுகளில், இவர்களுக்கு எந்த ஒரு சலுகையுமே கொடுக்கப்படவில்லை. இப்போதுதான் முதல் முறையாக பேரறிவாளனுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. எழுவருக்கும் முழுமையான விடுதலை கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அந்த நாளை எதிர்பார்த்து உலகத் தமிழர்கள் மட்டுமின்றி மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
- வழக்கறிஞர் இராம.வைரமுத்து