கடந்த 08.11.2024 அன்று அடையாறு முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்ற “திராவிடமே தமிழுக்கு அரண்” என்ற நிகழ்வில் இனமுரசு நடிகர் சத்யராஜ் ஆற்றிய தலைமையுரையில் இருந்து சில பகுதிகள்:

sathyaraj 261இது ஒரு முக்கியமான நிகழ்வு என்பதால், வரும்போதே மனதில் ஒரு முடிவுடன்தான் வந்தேன். இதில் சரியான கருத்துகளைப் பேச வேண்டும் என்பதால் எனது கருத்துகளை எழுதியே எடுத்து வந்து விட்டேன். ஏனென்றால் இதை முக்கியமான மேடையாக, மிக முக்கியமான மேடையாக நினைக்கிறேன். எனது அனுபவத்தை வைத்துத்தான் இதில் பேசப் போகிறேன்.

எங்களது ஊரில் பெரியார் நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள மானமிகு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு 11 வயது இருக்கும்போது, அதாவது 1965ஆம் ஆண்டில்தான் இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தது. அப்போது நான் ஏழாம் வகுப்பு மாணவன். எங்களுடையது வசதியான, மிட்டா மிராசு போன்றதொரு குடும்பம். எங்களைக் கான்வெண்டில்தான் சேர்த்துப் படிக்க வைப்பார்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டம் வரும் வரையில் எனக்குத் தமிழ் ஆர்வம், தமிழ் உணர்வு என்பதெல்லாம் இல்லை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போதுதான் தமிழ் வாழ்க..! இந்தி ஒழிக! என்பன போன்ற முழக்கங்கள் எல்லாம் பெரிய அளவில் வருகிறது. அதைப் பெரிய அளவில் முன்னெடுத்து வந்தது திராவிட முன்னேற்றக் கழகம்தான். அப்போதுதான் திமுகவின் மூலமாக இளைஞர்களின் பார்வை தமிழின் பக்கம், தமிழின் பெருமையின் பக்கம் திரும்புகிறது.

நான் தீவிரமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ரசிகன். அவரது ‘பணம் படைத்தவன்’ திரைப்படத்தில் ”உயிரைத் தமிழுக்கும் உடலை மண்ணுக்கும் உதவும் நாள் கண்டு துடிப்பார்” என்ற பாடல் வரிகள் வரும். எங்கே போனாலும் திராவிட இயக்க சினிமாதான் தமிழ் ஆர்வத்தை ஊட்டி வளர்த்தது. பராசக்தி மறுவெளியீடாக வந்தபோது அத்திரைப்படத்தை பார்த்தேன்.

அப்போது தமிழின் மீது மரியாதை வந்தது; கலைஞருடைய தமிழின் மீது காதல் வந்தது. பராசக்தி வசனங்களைக் கேட்டுக் கேட்டு மனப்பாடமே ஆகிவிட்டது. அந்த வசனங்களைப் பேசிக் காட்டுவதே அப்போது ஒரு பெருமை.

மலைக்கள்ளனில் “தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு”, நாடோடி மன்னனில் “செந்தமிழே வணக்கம்” என்று திராவிட இயக்கமும் திராவிட இயக்கக் கலைஞர்களும் சேர்ந்து தமிழை நேசிக்க வேண்டிய மனநிலையை உருவாக்கினர்.

பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததும், தமிழ்நாடு என்று பெயர் சூட்டப் பெற்றது. இதைவிட என்ன சான்று வேண்டும்?

1985 காலகட்டத்தில், தமிழீழ விடுதலைப் போர் மிகப்பெரிய உச்சத்தை அடைகிறது. அப்போது திராவிட இயக்கத் தலைவர்கள் சுபவீ, வைகோ, கொளத்தூர் மணி, கோவை இராமகிருஷ்ணன் போன்ற ஏராளமான பெரியார் இயக்கத் தொண்டர்களும், திமுக தொண்டர்களும்தான் சிறைக்குப் போனதும் தூக்குக் கயிறு வரைக்கும் போனதும். ஈழ விடுதலைக்கு ஆதரவு கொடுத்து உத்வேகமாக இருந்தது திராவிட இயக்கங்கள்தான். தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்தபோது, பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தது ஆசிரியர் அவர்கள்தான். நான் பேரறிவாளனைச் சந்திக்க அவருடைய வீட்டிற்குச் சென்றபோது, அவருடைய வீட்டில் இருந்தது பெரியார் படமும், பிரபாகரன் படமும்தான்.

தமிழ்த்தேசியம் என்ற பெயரில் திராவிடத்தை எதிர்ப்பது அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் ஆரியத்திற்குத் துணைபோவதுதான் என்பது என்னுடைய உடன்பாடு. அப்படிப் போகும்போது சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம் என்கிற போர்வையில் சகல விதமான மூடநம்பிக்கைகளும் மறுபடியும் வளரும்; சாதிய ஒடுக்குமுறை, பெண்ணடிமைத்தனம், மதச் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல், அடக்குமுறை எல்லாம் தலைதூக்கும். திராவிடம்தான் தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பானது. திராவிடமே தமிழுக்கு அரண்…!

- நடிகர் சத்யராஜ்