சமீபத்தில் தமிழ்நாட்டில் தாங்கள் ஒடுக்கப்படுவதாக கூறி பார்ப்பனர்கள் பேரணி நடத்தப் போவதாக அறிவித்தனர். பிறகு அம்முடிவை மாற்றிக் கொண்டு அர்ஜூன் சம்பத் தலைமையிலான இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதற்கான எதிர்வினையாக அன்று மாலையே திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையில் வர்ணாசிரம எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பார்ப்பனர்களின் ஆர்ப்பாட்டத்தில் பேசப்பட்ட கருத்துக்களுக்கு அவர்கள் தரப்பிலேயே எதிர்ப்பு கிளம்பியது. நடிகர் எஸ்.வி.சேகர், ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள் பார்ப்பனர்களின் ஆர்ப்பாட்ட பேச்சுக்களை கண்டித்துள்ளனர்.கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பார்ப்பனர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக ஒரு பொய்யை அவர்கள் கட்டமைக்கிறார்கள். ஆனால் உண்மை நிலையோ வேறு.
1890 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை நான்கரை கோடி. அவற்றில் ஏறக்குறைய நான்கு கோடி பேர் பார்ப்பனர் அல்லாதவர்கள். அரை கோடிக்கும் குறைவான எண்ணிக்கையில் இருந்தவர்கள் பார்ப்பனர்கள். ஆனால் 1892 முதல் 1904 வரை நடந்த இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 16 பேரில் 15 பேர் பார்ப்பனர்கள். கடந்த இருபது ஆண்டுகளில் உதவிப் பொறியாளர் பணிக்கு நியமிக்கப்பட்ட 21 பேரில் 17 பேர் பார்ப்பனர்கள். நான்கு பேர் மட்டுமே பார்ப்பனர் அல்லாதவர்கள். உதவி கலெக்டர் பதவிக்கு நியமிக்கப்பட்ட 140 பேரில் 77 பேர் பார்ப்பனர்கள்.
நீதிக்கட்சி ஆட்சியில் வகுப்பு வாரி இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட பிறகு தான் இந்த நிலை மாறி பார்ப்பனர் அல்லாதவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கணிசமான பிரதிநிதித்துவம் பெற்றனர். இருப்பினும் பார்ப்பனர்கள் தங்கள் மக்கள் தொகைக்கும் அதிகமான பிரதிநித்துவத்தையே இப்போதும் பெறுகின்றனர்.
ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இன்றவும் பார்ப்பனர்களின் ஆதிக்கமே நிலவுகிறது. அதையும் தாண்டி அங்கே நுழையும் பார்ப்பனர் அல்லாதவர்களால் அங்கே படிக்கவோ / பணி செய்யவோ இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
2023 டிசம்பரில் ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் மேக்வால் நாடாளுமன்றத்தில் அளித்த புள்ளிவிவரத்தின்படி 2018 முதல் 2023 வரை நியமிக்கப்பட்ட 650 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 492 பேர் உயர் வகுப்பினர், 23 பேர் தாழ்த்தப்பட்டோர், 10 பேர் பழங்குடியினர், 76 பேர் இதர பிற்படுத்ப்பட்டோர் ஆவர். இதன் மூலம் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாத பணியிடங்களில் 90% பார்ப்பனர்களே தற்போதும் உள்ளனர் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
இவற்றையெல்லாம் மறைத்து விட்டு தாங்கள் ஒடுக்கப்படுவதாக ஒரு நாடகத்தை பார்ப்பனர்கள் நடத்தி உள்ளனர். அதற்கு ஆண்ட ஜாதி பெருமை பேசும் பார்ப்பனர் அல்லாதவர்களும் பலியாகி உள்ளனர். அவர்கள் ஆரிய சூழ்ச்சியிலிருந்து விடுபட்டு "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற தமிழ்நாட்டின் தத்துவத்தை ஏற்று ஆரியர்களின் கொட்டத்தை அடக்கும் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதுடன் "எல்லோரும் சமம். எல்லோருக்கும் எல்லாம்" என்ற நோக்கோடு செயல்பட்டு வரும் திராவிட மாடல் அரசுக்கு வலுச் சேர்க்க வேண்டும்.
- வழக்கறிஞர் இராம.வைரமுத்து