‘அழிக்கப்பட்ட தமிழர்களுக்கும், அழிக்க முடியாத தமிழுக்கும் சமர்ப்பணம்’ செய்யப்பட்டுள்ள இத்திரைப்படம் கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் அறிவியல், நிறையப் புனைவுகள் என்னும் வகையில் பின்னப்பட்டுள்ளது.

நேற்றைய வரலாற்றை, நாளைய அறிவியலோடு பிணைத்துக் காட்டும் புத்திசாலித்தனம் பாராட்டிற்குரியது. எனினும், படத்தின் கதை, ஆங்கிலத்தில் குவிந்து கிடக்கும் துரத்தும் வகைக் கதைகள் (Chase Novels)  சார்ந்ததே. துரத்துவதும், ஓடுவதும், திருப்பித் தாக்குவதும், எல்லாக் காலத்திலும், படிப்பதற்கும், பார்ப்பதற்கும் சுவையாய்த்தான் இருக்கும். தமிழில், அண்மையில் வெளிவந்து வெற்றி பெற்ற ரன், கில்லி, தசாவதாரம் ஆகிய படங்கள் இவ்வகையான கதைகளைக் கொண்டவையே.

விறு விறுப்பான கதை, வளர்ந்த தொழில் நுட்பம், உகந்த இசை, சிறந்த நடிப்பு ஆகியன இப்படத்தின் வணிக ரீதியான வெற்றியை உறுதி செய்கின்றன. ‘ பழைய மசாலாப் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படைப்பு ’ என்று வெகுமக்களை நம்பவைக்கும் புதிய மசாலாப் படம் இது !

ஆனாலும், இப்படம் சில புதிய கேள்விகளை எழுப்புகிறது. விவாதங்கள் சிலவற்றை விதைக்கிறது. தேவையான சில பார்வைகளுக்கு இடமளிக்கிறது. அந்த அடிப்படையில் இத்திரைப்படம் நம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றது.

1. தமிழக வரலாறு மட்டுமின்றி, தமிழ் இன, மொழி உணர்வும், ஈழத்தமிழர்களின் போர்க்குணமும் கூடப் படத்தில் பேசப்படுகின்றன. இன்று வரை இவை தமிழ்த் திரைப்படங்களில் பேசப்படாதவை.

2. அறிவியல் உலகில் வியக்கத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கும் மரபணுத் தொழில்நுட்ப ஆய்வுகள் (Genetic technology), உயிரியல் போர் (Bio-war)  ஆகியன கதையோடு பின்னப்பட்டுள்ளன. மக்களுக்குப் புரியும்படி, எளிமையாகவும் சொல்லப்பட்டுள்ளன.

3. பகுத்தறிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சில உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. போகிற போக்கில், சமூகநீதிக்கு எதிரான ஒரு வெடி குண்டும் வீசப்பட்டுள்ளது.

மேற்காணும் மூன்று செய்திகள் குறித்தும் ஒரு விவாதம் உடனடித் தேவையாக உள்ளது.

1600 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்திலிருந்து சீனாவிற்குச் சென்று, அந்த மக்களுடன் வாழ்ந்து, அவர்களுக்கு மருத்துவம், போர்க்கலைகளைக் கற்பித்து, அங்கேயே மறைந்து போன போதிதர்மரே கதையின் மையம். சீன மக்கள் இன்றும் கடவுளாய் வணங்கும் அந்தத் தமிழ்ப்பெருமகனைத் தமிழகம் அறியாமல் இருக்கிறதே என்பது படத்தின் ஆதங்கம்.

தமிழக மக்களிடம் ஒரு விதமான பெருமிதத்தை இப்படம் ஏற்படுத்தவே செய்கிறது. 800 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஆங்கிலத்திற்கு அடிமைப்பட்டு நிற்கும் இன்றைய தமிழர்கள், பல்லாயிரம் ஆண்டுகளாக நிலவி வரும், தங்கள் தாய்மொழியின் பெருமையை உணரவில்லையே என்பதைக் கதாநாயகியின் உரையாடல் ஒன்று ஆவேசமாக வெளிப்படுத்துகின்றது.

எல்லாம் சரிதான். என்றாலும் போதிதருமர் தமிழரே இல்லை என்று ஒரு வாதம் கிளம்பியுள்ளது. கருநாடகத்தில் உள்ள ‘நாகசேனை’ என்னும் அமைப்பு, அவரைத் தமிழர் என்று சொல்லும் உரையாடல்களை நீக்கவில்லை என்றால், வழக்குத் தொடுப்போம் என்று மிரட்டியுள்ளது.

போதிதருமர், பல்லவ இளவரசர் என்று படம் கூறுகின்றது. பல்லவர்கள் தமிழர்கள் இல்லை. பிறகு எப்படி அவ்வரச குலத்தில் பிறந்த ஒருவர் தமிழர் ஆவார் என்பதுதான் கேள்வி.

பல்லவர்கள் தொண்டை மண்டலத்திலேயே தோன்றியவர்கள், புலிநாட்டை ஆண்ட புலிந்தர்களே, பலடர்கள் ஆகி, பல்லவர்கள் எனப் பிற்காலத்தில் அழைக்கப்பட்டனர் என்று வரலாற்றாசிரியர்கள் சிலர் கூறியிருப்பினும், அவர்கள் தமிழர்கள் இல்லை என்னும் கருத்தே, ஆய்வுத் துறையில் மேலோங்கி உள்ளது.

மகேந்திரவாடி, திருக்கழுக்குன்றம், மாமண்டூர், மாமல்லபுரம், சித்தன்னவாசல் ஆகிய இடங்களில் காணப்படும், அவர்கள் காலத்துக் கல்வெட்டுகளும் தமிழில் இல்லை. கி.பி.4ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகள் பிராகிருத மொழியிலும் 4‡7ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் சமற்கிருத மொழியிலும் உள்ளன. அவர்களின் இறுதிக் காலக் கல்வெட்டுகள் சிலவற்றில் மட்டும் கிரந்த ‡ தமிழ் எழுத்துகளைக் காணமுடிகிறது. எனவே அவர்கள் தமிழ்மொழியை வளர்த்தார்கள் என்றும் சொல்வதற்கில்லை. எனவே போதிதருமர் தமிழரில்லை என்பது ஒரு பக்க வாதம்.

இப்படியே ஒதுக்கிக் கொண்டே போனால், மிஞ்சும் தமிழர்களின் தொகை மிகக் குறைவாகவே இருக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பிற்காலச் சோழர்களில் புகழ்பெற்று விளங்கிய, முதலாம் குலோத்துங்க சோழனையும் நாம் கேள்விக்கு உள்ளாக்க வேண்டி இருக்கும். கி.பி. 1070இல் அரியணை ஏறிய அம்மன்னன், வேங்கிநாட்டு மன்னன் விமலாதித்தனுக்கும், இராசராச சோழன் மகள் குந்தவைக்கும் பிறந்தவன். ரத்தப் பரிசோதனை செய்தால் அவனும் ‘ முழுத் தமிழன் ’ ஆக மாட்டான். பல்லவர்களை ஒதுக்கினால், அவர்கள் காலத்தில் எழுந்து வளர்ந்து நின்ற சிற்பக் கலை யாருடையது என்னும் கேள்வி எழும்.

இதற்கிடையில், போதிதருமர் இளவரசரே அல்லர், அவர் ஒரு பெளத்த மத போதகர் என்னும் கருத்தும் உள்ளது. பெளத்த மதக் கருத்துகளைப் பரப்பவே அங்கு சென்றார் என்னும் வாதத்திற்குச் சான்றுகள் பல தெரிகின்றன. அவ்வாறாயின் அவர் தமிழ்நாட்டில் பிறந்த பெளத்தராக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

எவ்வாறாயினும் அவர் தமிழரா என்னும் கேள்விக்கு, ஆம், இல்லை என்று ஒரு சொல்லில் நம்மால் விடை தர இயலவில்லை.

திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தமிழ் உணர்ச்சி ததும்பும் உரையாடல்கள் பாராட்டிற்குரியன. அதிலும் குறிப்பாக, ஈழம் பற்றிய உரையாடலில், ‘ ஒன்பது நாடுகள் சேர்ந்து ஒருவனை அடித்தால் அது வீரமில்லை, துரோகம் ’ என்று கதாநாயகன் கூறும்போது, திரையரங்கம் கையயாலிகளால் அதிர்கிறது.

படத்தில் அறிவியல் செய்திகளை விட, அறிவியல் கட்டுக்கதைகளே (Science fantasies) மிகுதியாய் உள்ளன.  நோக்கு வர்மம் என்பதெல்லாம் மிகுதியாகப் புனையப்பட்டுள்ளது. ஒரு தனி மனிதன் கண் பார்வையினால், ஒரு நாட்டையே நிலைகுலைய வைத்துவிட முடியுமென்பது, நம்பமுடியாத கற்பனை. அறிவியல் என்னும் பெயரில் அம்புலிமாமா கதை பார்ப்பது போல் இருக்கிறது.

மஞ்சள், வேப்பிலை, துளசி போன்றவைகளை ‘ அடுத்த தலைமுறைக்காவது சாமின்னு சொல்லிக் குடுக்காம, சயின்சுன்னு சொல்லிக் குடுங்க ’ என்று சொல்வது சரியாக இருக்கிறது. பாராட்ட வேண்டிய பகுத்தறிவுச் செய்தியாக உள்ளது.

ஆனால், ‘ வானிலை அறிக்கையில இன்னிக்கு மழை பெய்யும்னா வெயில் அடிக்குது, வெயில் அடிக்கும்னா மழை பெய்யுது. ஆனா நம்ம பஞ்சாங்கத்தப் பாருங்க, எவ்வளவு சரியாச் சொல்லுது ! ’ என்பது, அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் நேர் எதிராக அல்லவா உள்ளது. இந்துத்துவா பண்பாட்டைத் தமிழ் பண்பாடாகக் காட்ட முயல்வதும், ஜாதகம், சோதிடம், பஞ்சாங்கம் போன்றவைகளை அறிவியலாகக் காட்ட முயல்வதும் இப்போது புதிதாய்ப் புறப்பட்டுள்ள மோசடிகள்.

எல்லாவற்றையும் விட, இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ஓர் உரையாடல் படத்தில் இடம்பெற்றுள்ளமை வேதனையோடு குறிக்கத்தக்கது. இட ஒதுக்கீட்டிற்கு எதிராய் இயக்குனர் ­ங்கர், ஜென்டில்மேன் என்று ஒரு படமே எடுத்தார். ‘ இந்திரா ’ படத்தில் இயக்குனர் சுஹாசினி, ‘ நீங்கள்லாம் F.C.யா... அப்பிடின்னா காலேஜ்ல இடம் கிடைக்காது ’ என்று ஒரு வசனத்தை இடம் பெறச் செய்தார். O.C. (Open Competition) தான் உண்டே தவிர,  F.C. (Forward Community) என்று ஒரு பிரிவே கிடையாது. ஆனாலும் அவாளுக்குத் தங்களை ‘ முன்னேறிய சமூகம் ’ என்று சொல்லிக்கொள்ள ஆசை !

இந்தப் படத்திலும் “Recommendation, Reservation, Corruption இந்த மூனும் தகுதியுள்ள இளைஞர்களை வெளியில் நிக்க வச்சிடுச்சி ” என்று அபத்தமான ஓர் உரையாடல் இடம் பெற்றுள்ளது.

மூன்றும் வெவ்வேறானவை. ஊழல் (Corruption)  ஒழிக்கப்பட வேண்டியது. பரிந்துரை (Recommendation) சில இடங்களில், உரியவர்களுக்கு உரிய பணியைப் பெற்றுத் தருவதற்கான அறிமுகமாக அமையும். இட ஒதுக்கீடு (Reservation) என்பதோ, நாம் போராடிப் பெற்ற உரிமை. இம்மூன்றையும், படத்தில் விஞ்ஞானியாக வரும் கதாநாயகி ஒரே மாதிரிப் பார்க்கின்றார். எவ்வளவு பெரிய விஞ்ஞானப் பார்வை இது !

இடஒதுக்கீடு இல்லையயன்றால் இயக்குனர்கள் ச­ங்கரும், ஏ.ஆர்.முருகதாசும் இவ்வளவு பெரிய இடங்களை எட்டியிருக்க முடியுமா என்று எண்ணிப் பார்த்தால் நல்லது! இட ஒதுக்கீட்டைத் தாக்கி எழுதுவதும், பேசுவதும், முற்போக்குச் சிந்தனையாளர்களின் அறிவுஜீவித் தன்மையைக் காட்டும் என்று கருதுகின்றனர். அது அரைவேக்காட்டுத் தனத்தைத்தான் காட்டும்.

இப்படிச் சில நெருடல்கள் இருந்தாலும், கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் 7ஆம் அறிவு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Pin It