சில நாட்களுக்கு முன்பு, புலம்பெயர்ந்த தமிழீழ நண்பர் ஒருவர் லண்டனில் இருந்து என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ' நவம்பர் முதல் வாரம் கோவையில் நடைபெறவிருக்கும் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை?' என்று கேட்டார். அவர் கேட்ட பிறகுதான் அப்படி ஒரு மாநாடு நடைபெறவிருக்கும் செய்தியை நான் அறிந்தேன்.

பிறகு நண்பர்கள் அச்செய்தியை உறுதிப்படுத்தினர். அது தொடர்பான துண்டறிக்கை ஒன்றையும் கொடுத்தனர். அம்மாநாட்டை, தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம் நடத்துவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்வியக்கம் குறித்து மேலதிகச் செய்திகள் ஏதும் எனக்குத் தெரியவில்லை. அந்தத் துண்டறிக்கையில் அவர்கள் கொடுத்திருந்த வலைத்தள முகவரிக்குள் சென்றபோதும் சரியான விவரங்கள் கிடைக்கவில்லை.

அம்மாநாடு, இனப்படுகொலைக்கு உள்ளான இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்டும், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய தமிழர் மூவர் உயிர்களைக் காப்பாற்ற வேண்டியும், தமிழீழ மக்களுக்கு மறுவாழ்வு கோரியும், 6.11.2011இல் கோவையில் நடைபெறுவதாகத் துண்டறிக்கை கூறியது. அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் இயக்கத் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில், அனைத்துத் தமிழ் உணர்வாளர்களும் ஒரே திடலில் கூட இருப்பதாக அறிவிக்கும் வரிகள் நம்மை மகிழ்வித்தன. இது நம் நீண்ட நாள் கனவு. கருத்து வேறுபாடுகளையும், தமிழக அரசியல் மாறுபாடுகளையும் தாண்டி, ஈழ ஆதரவாளர்களும், தமிழின உணர்வாளர்களும் ஒன்றுகூட வேண்டும் என்னும் விருப்பத்தைப் பல மேடைகளில் நான் வெளிப்படுத்தி இருக்கிறேன். அப்படி ஒரு முயற்சியில் ஈடுபடுவோர் எந்த மேடைக்கு என்னை அழைத்தாலும், யாருக்குப் பின்னால் அணிவகுத்து நிற்கச் சொன்னாலும் நானும், நான் சார்ந்துள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவையும் என்றைக்கும் தயாராக இருக்கிறோம் என்று பலமுறை அறிவித்திருக்கிறேன்.

என்ன வியப்பெனில், இப்படி வெளிப்படையாக அறிவித்த என் பெயரும், எங்கள் பேரவையின் பெயரும் அந்தத் துண்டறிக்கையில் இடம்பெற வில்லை. பழ. நெடுமாறன், டாக்டர் இராமதாசு, வைகோ, து. இராஜா, தொல். திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி, முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, வே. ஆனைமுத்து, கொளத்தூர் மணி, மணிவண்ணன், பேரா. தீரன், பெ. மணியரசன், தியாகு, அற்புதம் அம்மாள், கதிரவன், இரா. அதியமான், குமார இரவிக்குமார், கு. இராமகிருட்டிணன், புதுக்கோட்டை பாவாணன், டாக்டர் எம்.பி. செங்கோட்டையன், ரான் ரைட்னர், முனைவர் வி. சுரேஷ், முனைவர் பால் நியூமென் என்று இத்தனை பெயர்கள் இடம் பெற்றுள்ள துண்டறிக்கையில் எங்கள் பெயர்களுக்கு மட்டும் இடமில்லாமல் போய்விட்டது. மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கவில்லையானாலும், மாநாட்டைப் பார்க்க வாருங்கள் என்று கூட அழைப்பதற்கு அவ்வமைப்பின் பொறுப்பாளர்களுக்கு மனமில்லாமல் போய்விட்டது. யாரோ சொல்லி, யாரோ கேட்டு, யாரோ துண்டறிக்கையைக் காட்டி அறிந்து கொள்ள வேண்டிய இடத்தில் திட்டமிட்டு நாம் தள்ளப்படுகிறோம் என்றே பேரவைத் தோழர்கள் அனைவரும் உணர்கின்றனர்.

மாநாட்டின் மூன்று நோக்கங்களும் நமக்கு முழு உடன்பாடானவை. இந்த நோக்கங்களுக்காகத் தொடர்ந்து பல ஆண்டுகளாகக் குரல் கொடுத்து வருகின்றவர்களில் நானும் ஒருவன். தொடங்கிய நாளில் இருந்து இம்மூன்று கோரிக்கைகளையும் மக்கள் மன்றத்தில் முன்வைக்கும் அமைப்பு திராவிட இயக்கத் தமிழர் பேரவை. பிறகு ஏன் நாம் புறக்கணிக்கப்படுகிறோம்? ஒரே நோக்கம்தான். நம்மைத் தனிமைப் படுத்துவதே அந்நோக்கம். அதன் மூலம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடம் நம்மீது ஒரு வெறுப்பை உருவாக்குவது அதன் உள்நோக்கம். என்றும் நம் அன்பிற்குரிய ஈழத்தமிழ் மக்களுக்கு அம்மாநாட்டில் நாம் கலந்து கொள்ளவில்லை என்பதுதான் தெரியுமே தவிர, நாம் அழைக்கப்படவுமில்லை, நமக்கு அறிவிப்பும் இல்லை என்னும் உண்மைகள் தெரியாது.

இப்படித் திட்டமிட்ட சதி வலைகள் நம்மைச் சுற்றிப் பின்னப்படும் இச்சூழலில் சில உண்மைகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு நேர்ந்திருக்கிறது. தற்பெருமை பேசுவதாகக் கருதிவிடக் கூடாதென்று பல நேரங்களில் மெளனம் காத்திருக்கிறோம். மெளனம் இங்கே மதிக்கப்படவில்லை. தொடர்ந்தும் அதே போன்ற நிகழ்ச்சிகள் தொடரும் வேளையில், சிலவற்றைச் சொல்லியே ஆக வேண்டியிருக்கிறது.

1983ஆம் ஆண்டு திருப்பனந்தாள் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே, வெளிப்படையாகத் தெருவுக்கு வந்து, ஜுலைக் கலவரத்தைக் கண்டித்துப் பேசியிருக்கிறேன். 84இல் தமிழீழச் சிவப்பு மலர் என்று ஒரு மலரை வெளியிட்டு, அங்கு நடந்த கொடூரங்களைத் தமிழ் மக்களுக்கு அடையாளம் காட்டியிருக்கிறேன். திலீபனின் மரணம் என் வாழ்வில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது. கவிஞர் மேத்தா, திரைப்பட இயக்குனர் வி.சி. குகநாதன் ஆகியோர் வழிகாட்டலில் 87ஆம் ஆண்டு முதல் விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் என்னும் நிலையயடுத்தேன். பெரியார் திடல் கூட்டங்கள் புலிகள் ஆதரவு நிலையில் என்னை மேலும் உறுதிப்படுத்தின. அய்யா நெடுமாறன், தோழர்கள் மணியரசன், தியாகு ஆகியோர் மேலும் மேலும் என்னை நெறிப்படுத்தினர். என்றைக்குப் புலிகளின் தோழன் என்று முடிவெடுத்தேனோ, அன்றிலிருந்து இன்றுவரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் அந்ந நிலையில் இருந்து இம்மியளவும் விலகாமல் நிற்கிறேன்.

இன்றைய சூழலில் ஈழத்தை ஆதரிப்பதென்பது வேறு. இராசீவ்காந்தி கொலைக்குப் பிறகு 1991 ‡ 95 காலகட்டத்தில் ஈழத்தையோ, விடுதலைப்புலிகளையோ ஆதரித்ததென்பது வேறு. புலிகள் என்று பேசினாலே சிறைவாசமும், தண்டனையும் காத்திருந்த நாள்களில், ஒவ்வொரு  நாளும், ஒவ்வொரு மேடையிலும் புலிகளின் போராட்டத்தை ஆதரித்துப் பேசியவன் நான். 1992ஆம் ஆண்டு, 'உங்களின் மீது விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளதே' என்ற கேள்விக்கு,  'அது முத்திரையன்று என் முகவரி' என நெஞ்சு நிமிர்த்திச் சொன்னவன் நான். விடுதலைப் புலிகளை ஆதரித்ததற்காக, 17 மாதப் பொடா சிறைவாசத்திற்கு முன்பே ஏழு முறை சிறையில் நான் அடைக்கப்பட்டேன். அதன் விளைவாக 1996ஆம் ஆண்டு கல்லூரி ஆசிரியர் பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டேன். 1997 இறுதியில் ஆசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, தமிழ் இனத்தின் முழுநேரப்பணியாளனாய் என்னை அமைத்துக் கொண்டேன்.

1998 முதல் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் அழைப்பை ஏற்று, உலகின் பல நாடுகளுக்கும் சென்று புலிகளின் போராட்ட நியாயங்களுக்கு ஆதரவு திரட்டினேன். 'இவர் நம் தூதுவராய் உலகெங்கும் உலா வருகிறார்' என்று புலிகளின் அதிகாரப் பூர்வ தொலைக்காட்சி 2002இல் அறிவித்தது. ஏறத்தாழ 15 நாள்கள், 2002இல் லண்டனில் உள்ள புலிகளின் ஐ.பி.சி. வானொலி நிலையத்தில் ஓர் ஊழியனைப் போலப் பணியாற்றினேன். இன்று வரையில் என் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என்பதிலும், புலிகளும், ஈழத்தமிழர்களும் வேறு வேறல்லர் என்னும் நிலையிலும் இன்றும் உறுதியாய் இருக்கிறேன்.

அடக்கத்தோடு இன்னொன்றையும் நான் குறிப்பிட வேண்டும். துண்டறிக்கையில் காணப்படும் தலைவர்களில் சிலர் மிகப் பிற்காலத்திலேயே ஈழ ஆதரவு நிலைக்கு வந்தவர்கள். இன்றைக்கும் விடுதலைப்புலிகளின் போராட்டத்தை ஆதரிக்காதவர்களும் அந்தப் பட்டியலிலே இடம் பெற்றுள்ளனர். அத்தனை பேருக்கும் இடம் கொடுத்த அந்த சங்கப் பலகை, கடந்த கால் நூற்றாண்டாய் அந்தத் தளத்திலேயே கால் பதித்து நிற்பவர்களை விலக்கி வைத்து வேடிக்கை பார்க்கிறது.

தமிழர் மூவர் உயிர் காக்கும் போராட்டத்திலும், நானும், நான் சார்ந்திருக்கும் அமைப்பும் ஒரு நாளும் பின்வாங்கியதில்லை. 1991ஆம் ஆண்டு அய்யா நெடுமாறன் அவர்களைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்ட 26 தமிழர்களின் உயிர் காக்கும் குழுவில் பொருளாளராய்ப் பணியாற்றிவன் நான். அவர்களுக்காக உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டபோது, நிதி திரட்டுவதற்காக அரங்குகளிலும், தெருக்களிலும் துண்டேந்தி நின்ற கைகளில் என் கைகளுக்கும் இடம் உண்டு. அய்யா அருணாசலம் அவர்கள் நடத்திய, நான் ஆசிரியராக இருந்த நந்தன் இதழின் முதலாண்டு விழா, 26 தமிழர்களின் உயிர்க்காப்பையே தன் தலையாய நோக்கமாய்க் கொண்டிருந்தது.

இத்தனை செய்திகளையும் ஒரு வெட்க உணர்வோடும், வேதனையோடும்தான் எழுதுகிறேன். இத்தனைக்குப் பிறகும் நாம் திட்டமிட்டுப் புறக்கணிப்படுவது ஏன் என்பதை மனச்சாட்சி உள்ளவர்கள் வெளிப்படுத்தட்டும். யார் நம்மைப் புறக்கணித்தாலும், தனிமைப்படுத்த நினைத்தாலும் அதுபற்றிக் கவலைகொள்ளாமல், ஈழ விடியலுக்கு என்றும் உழைப்போம். தமிழர் மூவர் உயிர்காக்கத் தளர்வின்றிப் பணி தொடர்வோம்.

லண்டனில் இருந்து, நீங்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று கேட்ட நண்பர், 'அழைத்தால்தான் போய் கலந்து கொள்வீர்களா?' என்றும் கேட்டார். 'மன்னித்துக் கொள்ளுங்கள் நண்பரே, இனி அவர்கள் அழைத்தாலும் நான் கலந்து கொள்ள மாட்டேன்.'

Pin It