ஓராயிரம் ஆண்டுகளைத் தொட்டு நிற்கும் தஞ்சைப் பெரிய கோயிலின் 1000 ஆவது ஆண்டு விழாவினைத் தமிழக அரசு வருகிற 25,26 ஆகிய தேதிகளில் வெகு சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது.

மாமன்னன் முதலாம் இராஜராஜனால் கட்டப்பட்ட இக்கோயிலுக்குப் பல்வேறு சிறப்புகள் உள்ளன. இக்கோயில் பரப்பளவில் பெரியது என்பது அதன் பெயராலேயே விளங்கும். இக்கோயில் கோபுரத்தின் ( நடுவிமானம் ) உயரம் 216 அடி. 60 அடிக்குமேல் எந்தக் கோயிலும் அதுவரை கட்டப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோபுரத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள விமானம் 80 டன் எடையுள்ள ஒரே கல்லினால் ஆனது என்பது கூடுதல் சிறப்பு. அக்காலத்திலேயே தமிழர்கள் கட்டடக் கலையில் எத்தகைய வல்லமையுடைய வர்களாய் இருந்தனர் என்பதற்கு இப்பெரிய கோயில் காலத்தை வென்று சான்று பகர்கின்றது. கி.பி.1010 ஆம் ஆண்டு குடமுழுக்குச் செய்யப் பட்ட தஞ்சைப் பெரியகோயில் இராஜராஜனின் புகழை மட்டுமல்ல, தமிழனின் பெருமைமிகு வரலாற்றையும் உலகுக்கு உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட வானளாவிய புகழும், பெருமையும் ஒருபுறம் இருந்தாலும், இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் தமிழருக்கும், தமிழுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளைச் சுட்டிக்காட்டி தமிழக அரசு எடுக்கவிருக்கும் விழாவிற்கு எதிரான விமர்சனங்களும் பலரால் முன்வைக்கப் படுகின்றன.

இராஜராஜ சோழனின் இருண்ட பக்கத்தை நாமும் மறுக்கவில்லை. அதையும் மறைக்காமல் மக்களுக்குச் சொல்லவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை. பிரம்மதேயங் களையும், சதுர்வேதிமங்கலங்களையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. இராஜராஜன் ஆட்சியில் தான் வடமொழி ஆதிக்கம் மேலோங்கி, தமிழின் வளர்ச்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டது. கோயில்களுக்குத் தேவரடியார்களாகப் பெண்கள் பொட்டுக்கட்டப்பட்டனர். வடநாட்டுச் சைவர்கள் இராஜகுருக்களாக நியமிக்கப்பட்டு, அவர்களின் ஆலோசனைப் படியே ஆட்சி நடந்தது. கோயில்களுக்கும் அதைச் சார்ந்திருந்த வகுப்பினருக்கும் பொன்னையும், பொருளையும் வாரி வழங்கினான் இராஜராஜன். பார்ப்பன‌ர்கள் நிலக்கிழார்களாகச் செழிப்புற்ற நிலையில் இருந்தனர். அவர்களின் நிலங்களுக்கருகில் இருந்த பிற வகுப்பினரின் நிலங்கள் விற்கப்பட வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட்டனர். இராஜராஜனின் வரலாற்றுப் பக்கங்களில் இதுபோன்ற கறைகளும் படிந்திருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

அதே நேரத்தில் இராஜராஜன் ஆட்சியின் நிர்வாகச் சிறப்பையும், இன்றைய ஆட்சி முறைகளுக்கு முன்ணுதாரணமாக விட்டுச் சென்ற நல்லபல செயல்முறைகளையும் நாம் மறந்துவிடக் கூடாது. பிற்காலச் சோழ மன்னர்களில் பெரும்புகழ் கொண்டவன் இராஜ ராஜன். கி.பி.985 முதல் கி.பி. 1014 வரையிலான அவனது ஆட்சிக் காலத்தில், அதுவரை யாரும் செய்திராத வகையில் ஆட்சிமுறையில் பல புதிய நிர்வாகச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட் டன. இணையற்ற வீரனாக மட்டும் இல்லாமல், மிகச் சிறந்த நிர்வாகியாகவும் விளங்கினான். நிலஅளவை செய்தது, நிர்வாக வசதிக்காக நாட்டில் எல்லைகளை வகுத்துப் பல பிரிவுகளாகப் பிரித்தது, குடவோலை முறையில் உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தியது என இராஜராஜனின் நிர்வாக முறை வியக்க வைக்கிறது.

முதன் முதலாக இவனது ஆட்சியில் தான் நாட்டின நிலப்பரப்பு முழுமையாக அளக்கப் பட்டது. இராஜராஜன் ஆட்சிப்பொறுப்பேற்ற 16 ஆவது ஆண்டு அதாவது கி.பி.1001 இல் சோழப்பேரரசு முழுவதும் நிலஅளவை செய்யப்பட்டு, விளைநிலங்களுக்கு மட்டும் வரி விதிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் நிலஅளவை முடிக்கப்பட்டது. நிலவரி வாங்குவ தற்காக நிலவரிக் கழகங்கள் அமைக்கப்பட்டன. அவற்றிற்கு புரவுவரித்திணைக்களம் என்று பெயர். அது இன்றைய ரெவின்யூ போர்டு போன்றது. இந்த கணக்குகளெல்லாம் குறித்து வைக்கப்பட்ட புத்தகம் வரிப்பொத்தகம் எனப்பட்டது. இதேபோல ஒவ்வொரு தொழிலுக்கும் தொழில் வரி வாங்கப்பட்டது. இதற்கென தனித்துறையும் அதற்கான அதிகாரி களும் நியமிக்கப்பட்டிருந்தனர். இது இன்றைய வருவாய்த்துறை (ரெவின்யூ டிபார்ட்மென்ட் ) போன்றது.

இன்று மாவட்டம், வட்டம், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி என்று நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள முறைக்கு இராஜராஜனின் நிர்வாகம் வழிகாட்டியாக இருந்திருக்கிறது என்பது மிகைப்படுத்தப்பட்ட கருத்தன்று. இராஜராஜன் தன் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதிகளை மண்டலம், வளநாடு, நாடு, கூற்றம் எனப் பிரித்து அந்தப் பகுதிகளை நிர்வகிக்க அதிகாரிகளையும், அறங்கூற அவைகளையும் ஏற்படுத்தினான். சோழப்பேரரசின் கிராமங் களில் உண்மையான குடியாட்சி நடைபெற்றது என்கிறார் ஆய்வுப்பேரறிஞர் சி.வை.சதாசிவப் பண்டாரத்தார். இப்போது வார்டு என்று சொல்லுகிறோமே அதைப்போல, ஊர்களும், நகரங்களும் பல குடும்புகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குடும்பிலிருந்தும் ஒருவர் உறுப்பினராகக் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு கிராமநிர்வாகங்கள் நடைபெற்றன. இதில் ஏற்கனவே உறுப்பினராக இருந்தவர் மீண்டும் உறுப்பினர் ஆக முடியாது, அதுமட்டுமல்ல உறுப்பினர்களாக இருந்தவர்களின் உறவினர்களும் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள். இப்படிப் பல சட்டதிட்டங்கள் குடவோலை முறைத் தேர்தலில் கண்டிப்புடன் கடைபிடிக்கப்பட்டுள்ளன. இன்று அரசாங்கம் பல நலவாரியங்களை அமைத்து வருகிறது. கழனிகளைக் கண்காணிக்கவும், கணக்குகளை தணிக்கை செய்யவும் அன்றே இராஜராஜன் ஏரி வாரியம், கழனி வாரியம், கணக்கு வாரியம் உள்பட பல வாரியங்களை அமைத்திருக்கிறான். தமிழக வரலாற்றில் முதலாம் இராஜராஜனின் ஆட்சிக்காலம் நிர்வாக முறையினால் மட்டுமல்ல இன்னும் பலவற்றானும் சிறப்பானது எனலாம்.

அதேபோல இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆட்சியிலும் அதற்கு முந்தைய ஆட்சியின் மிச்ச சொச்சங்கள் அவை நல்லவையானாலும், கெட்டவையானாலும் கொஞ்சம் நீடித்துக் கொண்டுதான் இருக்கும். பிற்காலச் சோழர்களுக்கு முந்தைய பல்லவர்களுடைய ஆட்சியிலும் பிரம்மதேயங்கள் நிறைய ஏற்படுத் தப்பட்டன. பல்லவ மன்னர்கள் தங்களை பிரம்ம சத்திரியர்கள் என்று கூறிக்கொள்கிற அளவுக்கு வைதீக பார்ப்பன‌ர்களுடன் தங்களை இணைத்துக் கொண்டிருந்தனர். எத்தனை வகையான யாகங்கள் உண்டோ அத்தனை வகையான யாகங்களையும், சடங்குகளையும் பார்ப்பன‌ர்களைக் கொண்டு செய்வித்து அவர்களுக்கும், கோயில்களுக்கும் நிலங்களைத் தானமாக வழங்கினர். எல்லாவற்றிற்கும் மேலாக சமற்கிருதத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். வைதீகம் ஆழக்காலூன்றி தழைத்தோங்கியது பல்லவர் ஆட்சியில்தான் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இப்படி நடந்துவந்த பல்லவர் ஆட்சியைத் தொடர்ந்து வந்ததுதான் பிற்காலச்சோழர்களின் அரசு.

பிற்காலச்சோழர்களின் முதல் மன்னனான விசயாலயச் சோழன் தொடங்கி அத்தனை சோழ அரசர்களும் பிரம்மதேயங்களையும், சதுர்வேதி மங்கலங்களையும் பாதுகாத்தே ஆட்சியை நடத்திவந்துள்ளனர் எனும்போது, 10 ஆவது மன்னனான முதலாம் இராஜராஜனின் ஆட்சியும் அதன் நீட்சியாகத்தானே இருந்திருக்க முடியும்.

உலகின் பல இனங்கள் இன்றளவும் கடுமையான போராட்டங்களை மேற்கொண் டும், அடக்குமுறைகளை எதிர்கொண்டும் வருவது தங்களுடைய இன அடையாளங்களை மீட்டெடுப்பதற்கும், தக்க வைத்துக்கொள்வ தற்குமே என்பதை உணர்ந்தவர்கள், தமிழனின் ஆயிரம் ஆண்டு பாரம்பரிய அடையாளத்தைப் போற்றுவதிலும், அதைக் கொண்டாடுவதிலும் உள்ள நியாயத்தையும் உணர்வார்கள் .

Pin It